இறையருளின் மையமாக செயல்படும் ஆலய கருவறை

 
 
னித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது.

அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர்.

கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன.

கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர்.

கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது.

அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது. 
Share:

கரும்பைத் தின்ற கல் யானை


 
 
 
துரையை தலைநகராகக் கொண்டு அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்து கொண் டிருந்த காலகட்டம் அது.

ஒரு பொங்கல் திருநாள் அன்று அமைச்சர்கள், படைவீரர்கள் புடைசூழ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தான் அபிஷேகப் பாண்டியன். கோவி லுக்கு மன்னர் வருவதைக் கண்ட பக்தர்கள் அனைவரும் அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கினர்; ஒருவரைத் தவிர. அதைக் கண்டு மன்னனுக்கு கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது.

அதற்குள் பணியாள் ஒருவன், ‘மன்னா! இவர் ஒரு சித்தர். சித்து வேலைகள் பலவற்றை நிகழ்த்தி இருக் கிறாராம்’ என்றான்.

தன்னை அலட்சியப்படுத்தியவர் ஒரு சித்தர் என்று அறிந்ததும், அவர் அருகில் சென்று வணக்கம் தெரிவித்தான் மன்னன். ஆனால் சித்தர் என்று அடையாளம் காட்டப்பட்டவரிடம் இருந்து மன்னனுக்கு பதில் மரியாதை கிடைக்கவில்லை. இருப்பினும் மன்னனே அந்த சித்தரிடம் பேசினான். ‘தாங்கள் அற்புதங்கள் நிகழ்த்துவதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். முதியவரை இளைஞராகவும், இளைஞரை முதியவராகவும், பெண்ணை ஆணாகவும், ஆணைப் பெண்ணாகவும் மாற்றுகிறீர்களாமே.. ஊமையை பேச வைக்கிறீர்கள், குருடர்களை பார்க்க வைக்கிறீர்கள் என்றும் கேள்விப்பட்டேன்! அது உண்மைதானா?’ என்று கேட்டான்.

‘எல்லாம் உண்மையே! எனக்கு எல்லாக் கலைகளும் தெரியும்’ என்றார் அந்த சித்தர்.

இருந்தாலும், மன்னனுக்கு அந்த சித்தரின் அற்புதங்கள் மீது நம்பிக்கை வரவில்லை. அவரை சோதிக்க நினைத்தான்.

‘சரி சித்தரே! உங்கள் அற்புதத்தை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன். உங்களால் இப்போது அதை செய்து காண்பிக்க முடியுமா?’ என்றான்.

மன்னன், தன்னையே சோதிக்க நினைப்பதை எண்ணி அவருக்கு கோபம் வந்தது. ‘என்ன... என்னையே சோதிக்கிறாயா?’ என்றார்.

‘ஆமாம்.. அதில் என்ன தவறு இருக்கிறது? நான் உங்கள் அற்புதத்தை நேரில் பார்த்தால் தானே உண்மையை உணர முடியும்’ என்ற மன்னனிடம் ‘இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?’ என்றார் அந்த சித்தர்.

‘இந்த கல்லால் ஆன யானை சிலை, கரும்பை உண்ணும்படி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நீங்கள் கேட்டதை எல்லாம் தருகிறேன்’ என்று, அருகில் இருந்த யானை சிலையை காண்பித்தான். தன் கையில் ஒரு கரும்பையும் எடுத்துக்கொண்டான்.

சித்தர், அந்த யானைச் சிலையை கூர்ந்துப் பார்த்தார். அடுத்த நொடியே அந்த கல் யானை உயிர் பெற்று முன்னோக்கி நடந்து வர ஆரம்பித்தது. அதைப் பார்த்த எல்லோரும் திகைத்துப் போய் நின்றனர். அரசன் அருகில் வந்த அந்த யானை, அவன் கையில் இருந்த கரும்பை வாங்கித் தின்றது.

இன்னொரு முறை அந்த யானையை பார்த்தார் சித்தர். உடனே அது, அரசன் கழுத்தில் கிடந்த மாலையை தனது துதிக்கையால் பறித்தது. அரசன் திடுக்கிட்டுப் போனான். மன்னனின் படைவீரர்கள் சிலர் கோபத்தில் சித்தர் மீது பாய வர, அவர்களை நோக்கி கை காண்பித்தார் அவர். அடுத்த நொடியே அவர்கள் அனைவரும் சிலை ஆனார்கள்.

அதன்பிறகு தான், அந்த சித்தர் மாபெரும் மகான் என்று உணர்ந்து கொண்டான் மன்னன். தன்னை மன்னிக்குமாறு அவரது காலில் விழுந்து வேண்டினான்.

அவனை மன்னித்த சித்தர், ‘உனக்கு என்ன வேண்டுமோ கேள்?’ என்றார்.

மன்னனும், தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறையைக் கூறி, மழலைச் செல்வத்தைக் கேட்டான். சித்தர், ‘அப்படியே ஆகட்டும்!’ என்று அருள் பாலித் தார். அக்கணமே சித்தர் மாயமானார். உயிர்ப்பெற்று வந்த கல் யானை மீண்டும் கற்சிலையாக மாறியது. சிலையாக மாறிய வீரர்கள் உயிர்ப்பெற்றனர்.

அதன் பின்னர் தான், சித்தர் வடிவில் வந்தது சொக்கநாதர் என்பதை உணர்ந்தான், மன்னன். அடுத்த ஒரு வருடத்தில் சொக்கநாதர் அருளியபடியே, அபிஷேக பாண்டியனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் தான் விக்கிரம பாண்டியன்.

இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு பொங்கல் அன்றும் கல் யானைக்கு கரும்பு தந்த லீலை ஒரு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அந்த அற்புதத்தின் படி கரும்பு தின்றதாக கூறப்படும் கல் யானையை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சுவாமி சன்னிதிக்கு இடப்புறத்தில் இன்றும் நாம் பார்க்கலாம். 
Share:

அனுமான் கதைகள்


“அஞ்சனாதேவி” என்ற பெண் குரங்கிற்கும், ”கேசரி” என்ற ஆண் குரங்கிற்கும் மகனாய் பிறந்தவர்தான் இந்த அனுமன். ஆஞ்சநேயரின் தாயார் ”அஞ்சனாதேவி” முற்பிறவியில், பிரம்மாவின் சபையில் ஒரு ஆடல் அழகியாய் இருந்தார். தவம் இயற்றிக் கொண்டிருந்த ஒரு முனிவரின் தவத்தை கலைத்தற்காக, சாபம் பெற்று குரங்காக மாறினார். மரபு வழி கதைல சொல்லப்பட்ட கதை என்னன்னா, ஒரு முறை ஒரு குரங்கு ஆசனம் இட்டு தவம் செய்து கொண்டிருந்தததை பார்த்தாள் ”அஞ்சனாதேவி”. அதைப்பார்த்து, சும்மா இராமல் அந்த குரங்கின் மீது பழங்களை எறிந்து விளையாடினார். உடனே, அந்த குரங்கு தவம் கலைந்து எழுந்து ஒரு முனிவராக மாறியது. கடுங்கோபம் கொண்ட அந்த முனிவர், ”அஞ்சனாதேவி” யார் மீதாவது காதல் கொண்டால், அந்த தருணமே குரங்காக மாறிவிடுவாள் என சாபமிட்டார். தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு மன்றாடினாள் ”அஞ்சனாதேவி”. தனக்கு குரங்கு முகம் இருந்தாலும், தன் காதலன் தன்னை நேசிக்க வேண்டும் என்றும், சிவப்பெருமானின் அம்சமே தனக்கு மகனாக பிறக்கவேண்டும் என்றும் வரம் வேண்டினாள். மனமிரங்கிய முனிவரும் அப்படியே ஆகட்டும். சிவபெருமானின் அம்சமாக மகன் பிறந்தவுடன் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என அருள்பாலித்தார் . முனிவரின் சாபத்தின் பலனால், பூமியில் பிறந்து, ஒரு காட்டில் வசித்து வந்தாள். ஒருநாள் காட்டில் ஒரு ஆடவனைக் கண்டு, அவன் அழகில் மயங்கி, அவன் மேல் காதல் கொண்டாள். காதல் கொண்ட அந்த தருணமே அவள் குரங்காக மாறிவிட்டாள். அவள் அருகில் வந்த அந்த ஆண், தன்னை ”கேசரி” என்றும், தான் ”குரங்குகளின் அரசன்” என்றும் கூறினான். குரங்கு தலையை கொண்ட மனிதனான அவனால் நினைத்த நேரத்தில் மனிதனாகவும், குரங்காகவும் உருமாற முடியும். இதைக் கண்டு ஆச்சரியமடைந்தாள் ”அஞ்சனாதேவி”. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அஞ்சனாதேவியிடம் கேட்டான். அந்த காட்டிலேயே ”அஞ்சனாதேவி”யும் ”கேசரி”யும் கந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும், சிவப்பெருமானை நினைத்து எப்பொழுதும் தவத்தில் இருந்தாள் ”அஞ்சனாதேவி”. இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான் என்ன வரம் வேண்டும் என கேட்டார். முனிவரால் தனக்கு கிடைத்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற, சிவபெருமானே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என கோரினாள். அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்தார் சிவபெருமான். அதேசமயம், அயோத்தியாவின் அரசனான ”தசரத சக்கரவர்த்தி”யும் பிள்ளை வரம் வேண்டி ”புத்திரகாமேஷ்டி” யாகத்தை நடத்திக் கொண்டு இருந்தார். இதனால், மனம் குளிர்ந்த ”அக்னிதேவன்”, ”தசரதனி”டம் புனிதமான பாயாசத்தை கொடுத்து இதனை சரி சமமாக உன்னுடைய தேவியருக்கு பங்கிட்டு கொடுன்னு எனக் கூறினார். ”தசரதனு”ம் தன்னுடைய பட்டத்து ராணியான, “கெளசல்யா” ( கோசலை)விற்கும், ”கைகேகி”க்கும் இரண்டாகப் பிரித்துக் கொடுத்தார். அவர்கள் இருவரும், தங்களுக்கு அளிக்கப்பட்ட பிரசாதத்தினை சரி பாதியாக பிரித்து, இரண்டு பங்காக சுமித்ராவுக்கு கொடுத்ததினால் அவளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது என மரபு வழி கதைகளில் சொல்வார்கள். தசரதன் அந்த பிரசாதத்தை தன் மனைவியருக்கு கொடுக்கும் போது, அதில் சிறிதளவு பிரசாதத்தை ஒரு பறவை எடுத்துச் சென்று ”அஞ்சனாதேவி” தவம் புரிந்த இடத்தருகே விட்டு சென்றது. காற்றின் கடவுளான ”வாயுபகவானி”டம் அந்த பிரசாதத்தை ”அஞ்சனாதேவி”யின் கைகளில் போடுமாறு ”சிவபெருமான்” கட்டளையிட்டார். பாயாசத்தை பார்த்த அஞ்சனா மிகுந்த சந்தோஷத்துடன் அதனை உண்டாள். அதனை உண்ணும் போது சிவபெருமானின் அருளை ”அஞ்சனாதேவி” உணர்ந்தாள். அதன்பிறகு, குரங்கின் முகத்தை கொண்ட ஒரு மகனை பெற்றெடுத்தார் ”அஞ்சனாதேவி”. அக்குழந்தை சிவனின் அம்சமேயாகும். அந்தக் குழந்தை பல பெயர்களில் அழைக்கப்பட்டது. ”ஆஞ்சநேயன்”, (அஞ்சனாவின் மகன் ), ”கேசரி நந்தனா” (கேசரியின் மகன்), ”வாயுபுத்திரா” அல்லது ”பவன் புத்திரா” (வாயுதேவனின் மகன்). அந்தக் குழந்தை தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே மிகுந்த பலசாலியாக விளங்கி வந்தார் அனுமன். தன் தந்தை”கேசரி” மற்றும் தாய் ”அஞ்சனாதேவி”யின் சக்திகளை அவர் பெற்றார். வாயுதேவனின் மகன் என்பதால் காற்றைப்போல் மிக வேகமாக செயல்பட்டார். ஆஞ்சநேயரின் பிறப்பால், ”அஞ்சனாதேவி” தன் சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார். சாப விமோசனம் பெற்ற ”அஞ்சனாதேவி” வான் உலகுக்கு திரும்பினாள். பின்னர் ராமபிரானின் தீவிர பக்தனனார் ஆஞ்சநேயர். இராம இராவண யுத்தத்தில் பெரும்பங்கு வகித்து இராமர் கைகளினாலே சிரஞ்சீவி வரம் பெற்றார். இந்த கதைகள் எல்லாம் நாம் போன பதிவுகளிலே பார்த்து விட்டோம். இனி, பிரம்மச்சரிய விரதம் கடைபிடிப்பவர்கள் ஆஞ்சநேயரின் பெயரிலேயே அந்த உறுதிமொழி எடுப்பார்கள். அப்படி இருக்க பிரம்மச்சாரியான ஆஞ்சநேயருக்கு மகன் உண்டுன்னு சில கதைகள் சொல்லுது. அந்த கதைகளை இன்று பார்க்கலாம்…., இராம இராவண யுத்தத்தின்போது இராவணனின் நம்பிக்கைக்குரிய பராக்கிரமம் மிக்க புதல்வன் ”மேகநாதன்” என்னும் ”இந்திரஜித்” கொல்லப்படுகிறான். அதனால் பயந்துபோன இராவணன் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனும், பாதாள இலங்கையின் அரசனுமாகிய ”மயில்ராவண”னை உதவிக்கு அழைக்கிறான். (மயில்ராவணன் அஹிராவணன் எனவும் அழைக்கப்படுகிறான்.). “மயில்ராவணன்”இராவணனுக்கு ஆறுதல் கூறுகின்றான். கவலைப்படாதே! நாளை இராமனும் லட்சுமணனும் இருக்க மாட்டார்கள் என்று சொல்கிறான். இதை விபீஷணன் அறிந்து கொண்டான். அவன் சுக்கிரீவனிடமும், இராமனிடமும் அனுமனிடமும் சொல்லிவிட்டான். அனுமன் உடனே தன் வாலால் ஒரு கோட்டைப் போன்று உருவாக்கி அதில் இராமனையும் லட்சுமணனையும் வைத்து பாதுகாக்கிறான். ”மயில்ராவணன்” தன்னுடைய மாயஜால வித்தைகளால் பலமுறை இராம லட்சுமனரை நெருங்க முயன்றும் ஒவ்வொரு முறையும் அனுமனால் அது முறியடிக்கப்படுகிறது. இறுதியாக மயில்ராவணன், விபீஷ்ணனது உருவம் எடுத்து அனுமனின் கவசக் கோட்டைக்குள் நுழைகின்றான், இராம லட்சுமணர்களை மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களை பாதாள உலகிற்கு கடத்தி செல்கிறான்.உண்மையான விபீஷணன் வர ஹனுமனுக்கும் அவனுக்கும் சண்டை வரும் நிலை வருகிறது. விபீஷணனோ மயில்ராவணனின் தந்திரத்தை தெளிவாக சொல்கிறான். அவர்கள் இருவரும் ஆபத்தில் இருகின்றனர்,அவர்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும் இல்லை எனில் மயில்ராவணன் அவர்களை சாண்டிதேவிக்கு பலி கொடுத்துவிடுவான் என எச்சரிக்கிறான். இந்த நிலையில் மயில்ராவணன் இருவரையும் சண்டிதேவிக்கு பலி கொடுக்க தயாராகின்றான். அப்பொழுது பாதாள உலகிற்கு செல்ல முயற்சிக்கும்போது அந்த பாதாள உலகின் கதவை காவல் காக்கும் ஒரு உயிரினத்தால் கடும் சவாலை அனுமன் எதிர்கொண்டார். அந்த உயிரினம் பாதி குரங்காகவும், பாதி ஊர்வனவாகவும் இருந்தது. அவன் தன்னை மகர்ட்வாஜா (தமிழில் மச்சவல்லபன் என்று அழைக்கப்படுகிறார்)என்றும், தான் ஆஞ்சநேயரின் மகன் என்றும் ஆஞ்சநேயரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். ஆஞ்சநேயருக்கு ஒரு மகன் இருப்பது, யுத்த களத்தில் தன் எதிரியாக அவனை பார்க்கும் வரை அவருக்கே தெரியாது என்பதும் உண்மையில் சுவாரசியமான விசயமாகும். வியக்கத்தக்க கருத்துக்களை கொண்டது இந்து புராணங்கள். அவைகள் படிப்பதற்கு மிகவும் புதிராகவும், சுவாரசியமாகவும் இருக்கும். மாகாபாரதத்தில் தேவர்களின் அருளால் பாண்டவர்களை கருவில் சுமந்தார் குந்திதேவி. அதேப்போல, கந்தாரியோ 101 குழந்தைகளை கருவில் சுமந்தார். அதுப்போலதான், ஆஞ்சநேயரின் மகனான மகர்ட்வாஜாவும் வியக்கத்தக்க கருவின் மூலமாக தான் பிறந்தார். ஆஞ்சநேயரின் மகன் கருவானதை பற்றியும், ஆஞ்சநேயர் அவனை சந்தித்தது பற்றியும் இரண்டு விதமான கதைகள் கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு கதைகளும் சொல்வது ஒன்றைத்தான். ஆஞ்சநேயருக்கு ஒரு மகன் இருந்தான் என்பதே. மகர்ட்வாஜா ஆஞ்சநேயருக்கு மகனாக மட்டும் இல்லாமல் மிகப்பெரிய போர் வீரனாகவும் இருந்தான். வால்மீகி ராமாயணத்தில் மகர்ட்வாஜா பற்றி சொல்லப்படும் போது, ஒருமுறை ஆஞ்சநேயேர் நதியில் குளித்து கொண்டிருந்தார். அவர் உடம்பில் ஏறியிருந்த சூட்டினால், அவருடைய விந்தணு ஆற்றில் கலந்துள்ளது. அது மகர் என்ற மீன் போன்ற உருவத்தில் இருந்த ஒர் உயிரினத்திடம் சென்றது. அதனால் ஒரு கருவையும் பெற்றது. பின்னர் ராவணனின் உறவினர்களான அஹிராவணாவும். மஹிராவணாவும் நதிக்கரையில் பாதி குரங்கு, பாதி மீன் வடிவில் ஒரு குழந்தையை பார்த்தனர். அதை எடுத்து, அதற்கு போர் பயிற்சி கொடுத்து சிறந்த வீரனாக்கினர். அதுவே மகர்ட்வாஜா என்று சொல்லப்படுகிறது . கம்போடியா மற்றும் தாய் பதிப்புகளான ராமாயணத்தில், அனுமனின் மகன் ”மச்சானு” என அழைக்கப்பட்டான். ஆஞ்சநேயருக்கும் இராவணனின் கடற்கன்னி மகளான சுவன்னமச்சாவிற்கும் (சுவர்ண என்றால் தங்க மச்சா என்றால் கடற்கன்னி என்று அர்த்தம்) பிறந்தவன் தான் மச்சானு. சில பதிப்புகளில், விந்தணு தண்ணீரில் சென்ற அதே கதை தான் கூறப்பட்டுள்ளது. ஆனால், அது சென்றது மகாராவிற்கு பதில் இராவணனின் கடற்கன்னி மகளான சுவன்னமச்சாவிடம் என்று கூறப்படுகிறது. இராமர் இலங்கைக்கு பாலம் கட்டிக்கொண்டு இருந்த சமயத்தில், அந்த பணிகளை செயல்படாமல் இடையுறு செய்ய இராவணன் தன்னுடைய கடல்கன்னி மகளான சுவன்னமச்சாவினையும் அவளது கூட்டாளிகளையும் பாலம் கட்டும் இடத்திற்கு அனுப்புகிறான். வானரப்படைகள் கடலில் இடும் பாறைகள் இரவில் காணாமல் போயின.இந்த மர்மத்தை கண்டுப்பிடிக்க அனுமன் கடலின் அடியில் பாய்ந்து செல்கிறார். அங்கே இராவணனின் அழகிய மகளான சுவன்னமச்சாதான் காரணம் எனத் தெரிந்துக் கொள்கிறார். மேலே இருக்கும் ஓவியமானது இராவணன் தன்னுடைய கடற்கன்னி மகளுக்கு பாலத்தை தகர்க்க உத்தரவிடுவதாகக் கூறப்படும் தாய்லாந்து இராமாயண ஓவியம் . இராவணனின் மகள் சுவன்னமச்சாவினை பார்க்கிறார் அனுமன் அவள் உத்திரவுப்படி மற்ற கடல் கன்னியர் கடலில் வீசப்பட்ட பாறைகளை தூக்கி வேறு இடத்தில் சேர்த்துக்கொண்டு இருந்தனர். அதை, அனுமன் தடுக்கும்போது ஆரம்பத்தில் அனுமனுக்கு போக்குகாட்டிக் கொண்டு இருந்த சுவன்னமச்சா இறுதியில் அனுமனின் நல்ல உள்ளம் தெரிந்துக் கொண்டு அனுமன்மேல் காதல் கொண்டாள். அனுமனும் சுவன்னமச்சா அழகில் மயங்கி இருவரும் ஒன்றாக இணைந்தனர். அதில் பிறந்த மகன்தான் மச்சானு என்றும் சொல்லப்படுகிறது . மேலும்,கம்போடியா மற்றும் தாய் பதிப்புகளான இராமாயணத்தில், இராவணனின் படையுடன் நடந்த ஒரு போரின் போது, இடுப்புக்கு மேல் குரங்கை போலவும் இடுப்புக்கு கீழ் மீனை போல் இருந்த, சக்தி வாய்ந்த ஒரு எதிரியை எதிர்கொண்டார் அனுமன். விளையாட்டாய் அதனை வென்றுவிடலாம் என்று நினைத்தார். ஆனால், அந்த உயிரினமோ கொஞ்சமும் சோர்வின்றி அவரோடு போரிட்டது. முடிவே இன்றி சண்டை நீண்டுக்கொண்டே போக, இவ்வளவு வீரத்தோடு சண்டையிடும் நீ யார்? உன் பெற்றோர் யார்? எனக் கேட்டார் அனுமன். அந்த உயிரினம் சொன்ன பதில், அனுமனையே அதிரச் செய்தது தன்னுடைய தாய் சுவன்னமச்சா எனவும் தந்தை வல்லமைமிக்க வானர வீரரான வாயுபுத்திரன் அனுமன் என்று கூறியதைக் கேட்டு வியந்த ஆஞ்சநேயர், தான் தான் ஆஞ்சநேயர் என்றும் தான் ஒரு பிரம்மச்சாரி என்றும் கூறினார்.இருப்பினும், தியானத்தில் கண்களை மூடிக்கொண்ட ஆஞ்சநேயர் மகர்ட்வாஜா பிறப்பின் பின்னணியில் நடந்த நிகழ்வுகளை கண் முன் கொண்டு வந்தார். தன் மகனை அடையாளம் கண்டுக்கொண்ட ஆஞ்சநேயர் உடனே நடு வானில் பாதி வழியில் சென்று கொண்டிருந்த தன் ஆயுதத்தை நிறுத்தினார். தன் மகனான மகர்ட்வாஜாவை அணைத்துக் கொண்ட ஆஞ்சநேயர் தன் ஆசீர்வாதங்களையும் அளித்தார். எது எப்படி இருந்தாலும், தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் யாரென தெரியாமல் போரில் மோதிக் கொண்ட போதுதான் தனக்கு ஒரு மகன் இருப்பதை ஆஞ்சநேயர் தெரிந்து கொண்டார். பின்னர் மகர்ட்வாஜாவின் ஒத்துழைப்புடன் பாதாள உலகிற்கு செல்கிறார் அனுமன் அங்கே மயில்ராவணன் மிக பலம் பொருந்திய படைகளுடன் போர் செய்கிறார். அஹிராவணன் முதல் அம்பிலேயே கொல்லப்படுகின்றான். மயில்ராவணன் பலம் கொண்ட மட்டும் போர் செய்யும் காரணம் பிரம்மன் கொடுத்தவரம் அப்போதுதான் அனுமனுக்கே தெரிய வருகிறது. அதாவது மயில்ராவணின் உயிர் ஏதோ ஒரு மலைக்கு அடியில் இருக்கும் ஒரு பெட்டியுள் அவனது உயிர்நிலைகள இருக்கிறது. அதுவும் ஐந்து வண்டுகளாக இருக்கிறது அந்த ஐந்து வண்டுக்களையும் ஒரே அடியில் அடித்தால் மட்டுமே அவனை கொல்ல முடியும். அப்படி செய்ய முடியவில்லை எனில் அவனை எதிர்த்து போரிடுபவன் இறந்து போவான் என, மயில் ராவணனுக்கு ஒரு வரம் உண்டு. இந்த நிலையில் என்ன செய்வது என தெரியாமல் அந்த பெட்டியை தூக்கி வருகிறார் அனுமன். போரின் போது அவன் முன்னே அதை திறக்கிறார். ஐந்து வண்டுக்கள் பறக்கும் போது ஹனுமன் ஐந்து முகங்களை தரித்து ஐந்து வண்டுகளையும் கடித்து தின்கிறார். அதனால் தான் அவருக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் என்னும் பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படியாக மயில் ராவணனும் கொல்லபடுகிறான். உ‌ஜ்ஜை‌னி நகர‌த்‌தி‌ல் இரு‌ந்து 15 ‌கி.மீ. தொலை‌வி‌ல் சா‌ன்வெ‌ர் எ‌ன்ற இட‌த்‌தி‌ற்கு அரு‌கில் ஒரு அனுமன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலின் சிறப்பே இங்கிருக்கும் அனுமன் சிலை தலை கீழாக இருப்பதுதான். இதனால் இந்த கோவில் உல்டா அனுமன் என்று சொல்லப்படுகிறது. எதுக்கு இந்த கோவிலைப் பற்றி பார்க்கிறோம்னா, மயில்ராவணன் இராமனையும் லட்சுமணையும் மயக்க நிலையில் பாதாள உலகத்திற்கு கடத்திச் சென்றபோது அனுமன் இந்த வழியாகத்தான், பாதாள உலக‌த்‌தி‌ற்கு‌ச் செ‌‌ன்று அவ‌‌ர்க‌ள் இருவரையு‌ம் ‌மீ‌ட்டு வ‌ந்தா‌ராம். அ‌ப்படி அனும‌ன் தலை‌கீ‌ழாக‌ப் பாதாள உலக‌த்‌தி‌ற்கு‌‌ப் புற‌ப்ப‌ட்ட இட‌ம் இதுதா‌ன் என சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் இருக்கும் இரண்டு பா‌ரிஜாத மர‌ங்க‌ள் ‌மிகவு‌ம் பழமையானவை. இ‌ந்த மர‌ங்க‌ளி‌ல் அனும‌ன் குடி‌யிரு‌ப்பதாக ஐதீகம் உண்டு. இங்கே அனுமனின் மகனாக கருதப்படும் மகரத்வஜனுக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. மேலும், இராம‌ன், ‌சீதை, ல‌ட்சுமண‌ன், ‌சிவ‌ன் ம‌ற்று‌ம் பா‌ர்வ‌தி ஆ‌கியோ‌ரி‌ன் ‌சிலைகளு‌ம் உ‌ள்ளன. இந்த கதைகளின் மூலம் புகழேந்திப் புலவர் எழுதிய மயில்ராவணன் கதையிலிருந்துதான் மக்களுக்கு அறியப்படுகிறது. இதன் முதல் பதிப்பு 1868ஆம் ஆண்டில்தான் சிறுகதை நூலாக அச்சில் வெளியிடப்பட்டது என்கிறார்கள். ஆனால், இந்த பதிப்பு வெளிவந்த ஆண்டு 1936. அதில் மயில்ராவணன் கதை விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை புராணங்களில் எங்கேயும் கூறப்படவில்லை. ஆதிக்காலத்தில் இருந்தே நாட்டுப்புறங்களில் வாய்மொழிக் கதையாகவும், தோல்பாவை,தெருக்கூத்து போன்றவைகளில் மட்டுமே அறியப்பட்ட கதை, பின்பு கலாச்சார மாற்றத்தினால், அழிந்து விட்ட இந்த கலைகளோடு மயில்ராவணன் கதையும் அழிந்து விட்டது . 
Share:

நல்லதங்காள் கதை

அர்ச்சுனாபுரம் ஒரு கிராமம். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. வத்திராயிருப்பு அருகில் உள்ளது. இந்தப் பகுதியில் மாந்தோப்பு, தென்னந்தோப்பு ஏராளம். வாழைமரம், பாக்குமரம், தேக்குமரம் ஏராளம். வானம் பொய்க்காத வளமான பூமி.

அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் பிறந்த ஊர். நல்லதங்காளின் தந்தை ராமலிங்க ராஜா. தாயார் இந்திராணி. அண்ணன் நல்லதம்பி.

நல்லதங்காள் சின்னப் பெண்ணாக இருந்தபோது தாயும் தந்தையும் இறந்துவிட்டார்கள். நல்லதம்பிதான் தங்கச்சியை செல்லமாக வளர்த்தான். மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு நல்லதங்காளைக் கட்டிக்கொடுத்தான். கல்யாணம் ஆகும்போது நல்லதங்காளுக்கு ஏழு வயது. காசிராஜன் நல்லதங்காளுக்கு நிறைய பரிசுப் பணம் கொடுத்தார். சித்திரை மாதம் கல்யாணம் நடந்தது. செல்வக் கல்யாணம்.

பனைமரம் பிளந்து பந்தக்கால் நட்டார்கள்.
தென்னைமரம் பிளந்து தெருவெல்லாம் பந்தல் இட்டார்கள்.
நல்ல தம்பி தங்கச்சிக்கு நிறைய சீதனங்கள் கொடுத்தான்.
வேலி நிறைய வெள்ளாடுகள்
பட்டி நிறைய பால்மாடுகள்
மோர் கடைய முக்காலி பொன்னால்
அளக்குற நாழி பொன்னால்
மரக்கால் பொன்னால்.

இன்னமும் சீதனங்கள் நிறைய உண்டு. சொல்லிக்கொண்டே போகலாம். கல்யாணம் முடிந்தது. விருந்துச் சாப்பாடு முடிந்தது.

நல்லதங்காளும் காசிராஜனும் மானாமதுரைக்குப் புறப்பட்டார்கள். நல்லதங்காளுக்கு அண்ணனைப் பிரிய மனம் இல்லை.

அழுதுபுரண்டு அழுதாள்,
ஆபரணம் அற்று விழ,
முட்டி அழுதாள்.
முத்து மணி அற்று விழ.

நல்லதம்பி தங்கச்சிக்கு ஆறுதல் சொன்னான். ஒருவழியாக நல்லதங்காள் மானாமதுரைக்குப் புறப்பட்டுப் போனாள்.

நல்லதம்பிக்கு ஒரு மனைவி உண்டு. அவள் பெயர் மூளி அலங்காரி. அவள் கொடுமைக்காரி. நல்லதங்காள் போன பிறகு நல்லதங்காளைப் பார்க்க நல்லதம்பி ஒரு தடவைகூட மானாமதுரை போகவில்லையாம். அதற்கு மூளி அலங்காரிதான் காரணமாம்.

நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. பிள்ளை குட்டிகளுடன் அவள் சந்தோஷமாக வாழ்ந்தாள். இதெல்லாம் கொஞ்ச காலம்தான்.

மானாமதுரையில் மழை இல்லை. 12 வருடமாக நல்ல மழை இல்லை. வயல்களில் விளைச்சல் இல்லை. மக்கள் பசியால் வாடினார்கள். பட்டினியால் தவித்தார்கள்.

பஞ்சமோ பஞ்சம்.
மரக்கால் உருண்ட பஞ்சம்
மன்னவரைத் தோற்ற பஞ்சம்
நாழி உருண்ட பஞ்சம்
நாயகரைத் தோற்ற பஞ்சம்
தாலி பறிகொடுத்து
கணவரைப் பறிகொடுத்து
கைக்குழந்தை விற்ற பஞ்சம்

இப்படி மக்கள் பஞ்சத்தில் செத்தார்கள். நல்லதங்காள் வீட்டையும் பஞ்சம் விடவில்லை. தாலி தவிர மற்றது எல்லாம் நல்லதங்காள் விற்றாள். குத்தும் உலக்கை, கூடை, முறம்கூட விற்றுவிட்டாள். எல்லாம் விற்றும் பஞ்சம் தீரவில்லை. குழந்தைகள் பசியால் துடித்தன.

நல்லதங்காள் யோசித்து யோசித்துப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால் பிள்ளைகள் பசியால் செத்துப்போகும் என்று பயந்தாள். ஒரு முடிவு எடுத்தாள். அண்ணன் வீட்டுக்குப் பிள்ளைகளுடன் கொஞ்ச நாள் போய் இருக்கலாம் என்று முடிவு எடுத்தாள்.

காசிராஜனிடம் தன் முடிவைச் சொன்னாள். காசிராஜன் நல்லதங்காள் சொன்ன முடிவை ஒப்புக்கொள்ளவில்லை.

“அடி பெண்ணே! வாழ்ந்து கெட்டுப்போனால் ஒரு வகையிலும் சேர்க்கமாட்டார்கள். கெட்டு நொந்துபோனால் கிளையிலும் சேர்க்க மாட்டார்கள். கை கொட்டிச் சிரிப்பார்கள். நீ போக வேண்டாம். கஷ்டம் வருவது சகஜம். நாம் பிடித்து நிற்க வேண்டும். சாணி எடுத்தாவது தப்பிப் பிழைப்போமடி! வேலி விறகொடித்து விற்றுப் பிழைப்போமடி’’ என்று காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளிடம் பலவாறு சொன்னாள்.

காசிராஜன் சொன்னதை நல்லதங்காள் கேட்கவில்லை. இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்று நினைத்தாள்.

சந்தனம் தொட்ட கையால் - நான்
சாணி தொட காலமோ!
குங்குமம் எடுக்கும் கையால் - நான்
கூலி வேலை செய்ய காலமோ
என்று சொல்லி நல்லதங்காள் அழுதாள்.

இதற்குமேல் நல்லதங்காளைச் சமாதானப்படுத்த முடியாது என்று காசிராஜன் தெரிந்துகொண்டான். “சரி போய் வா. பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’’ என்று சொல்லி வழியனுப்பி வைத்தான்.

நல்லதங்காள் பிள்ளைகளைப் பாசத்தோடு அழைத்தாள். “வாருங்கள் பிள்ளைகளா! உங்கள் மாமன் வீட்டுக்குப் போவோம். அங்கே தின்பதற்கு தேங்காய் கிடைக்கும், மாங்காய் கிடைக்கும், ஓடி விளையாட மான் கிடைக்கும்’’ என்று சொல்லி அழைத்தாள். பிள்ளைகள் ஆசை ஆசையாகப் புறப்பட்டன.

நல்லதங்காளும் பிள்ளைகளும் மானாமதுரையில் இருந்து அர்சசுனாபுரத்துக்குப் புறப்பட்டு வந்தார்கள். காடு மலையெல்லாம் தாண்டி வந்தார்கள். வனாந்திரங்களைக் கடந்து வந்தார்கள்.

அர்ச்சுனாபுரம் பக்கம் வந்துவிட்டார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு நடக்க முடியவில்லை. பசி பசி என்று கத்தினார்கள். அழுதார்கள்.

அந்த நேரம் பார்த்து நல்லதம்பி அந்தப் பக்கம் வந்தான். படை பரிவாரங்களோடு வந்தான். வேட்டையாட வந்தான். வந்த இடத்தில் நல்லதங்காளையும் பிள்ளைகளையும் பார்த்தான்.

அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்ததும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

குதிரை அரிதாச்சோ
குடி இருந்த சீமையிலே!
பல்லக்குதான் பஞ்சமோ
பத்தினியே உனக்கு!
கால்நடையாய் வர
காரணம் ஏன் தங்கச்சி?

என்று அழுது புலம்பினான். நல்லதங்காள் தன் வீட்டு நிலைமைகளைச் சொன்னான். நல்லதம்பி அவளைத் தேற்றினான். “சரி தங்கச்சி நம் வீட்டுக்குப் போ. தெற்குமூலையில் தேங்காய் குவிந்திருக்கும் வடக்குமூலையில் மாங்காய் குவிந்திருக்கும். காட்டு யானை வாசலில் கட்டி இருக்கும் காராம் பசுவும் உண்டு. போ தங்கச்சி போ! போய்ப் பிள்ளைகளுடன் பசியாறி இரு’’ என்று நல்லதம்பி சொன்னான்.

நல்லதங்காள் அண்ணன் இல்லாத வீட்டுக்குப் போக தயங்கினாள். அண்ணா! நீயும் கூட வா! என்று அண்ணனைக் கூப்பிட்டாள்.

“அம்மா நல்லதங்காள் நீ முதலில் போ. உன் அண்ணி மூளி அலங்காளி உன்னையும் பிள்ளைகளையும் நன்றாக கவனித்துக்கொள்வாள். நான் பின்னால் வருகிறேன். சீக்கிரன் வந்துவிடுவேன். உன் பிள்ளைகளுக்கு விளையாட புள்ளிமான் கொண்டுவருவேன்’’ என்று சொல்லி சமாதானப்படுத்தினான்.

நல்லதங்காள் அண்ணன் வீட்டுக்கு அரை மனதுடன் புறப்பட்டாள். அப்போது மூளி அலங்காரி வீட்டு மாடியில் இருந்தாள்.

நல்லதங்காளும் பிள்ளைகளும் பசியோடு தன் வீடு வருவதைப் பார்த்து விட்டாள். வேகவேகமாக இறங்கி வந்தாள். கதவுகளை அடைக்கச் சொன்னாள். இறுக்கிக் கதவை அடைத்தாள். ஈர மண் போட்டு அடைத்தாள். சோற்றுப் பானையை ஒளித்து வைத்தாள். பழந்துணி ஒன்றை உடுத்திக்கொண்டான். முகத்தில் பத்துப் போட்டு மூலையில் படுத்துக்கொண்டாள்.

நல்லதங்காள் வந்தாள். அண்ணி அண்ணி என்று ஆசையாகக் கூப்பிட்டு கதவைத் தட்டினாள். கதவு திறக்கவில்லை.

கால் கடுக்குது அண்ணி கதவைத் திற, தண்ணீர் தண்ணீர் என்று தவிக்குறாள் பாலகர். அன்னம் அன்னம் என்று சொல்லி அலையுறார் பாலகர். புத்திரர் பசியாற கதவைத் திறவாயோ?

என்று அழுது அழுது கூப்பிட்டாள். அதற்கும் கதவு திறக்கவில்லை. நல்லதங்காளுக்கு கோபம் வந்தது.

நான் பத்தினியானால் கதவு படீர் என்று திறக்கட்டும்

என்று கட்டளையிட்டாள். கதவுகள் திறந்தன. பிள்ளைகள் உள்ளே ஓடினார்கள். சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஒரு பண்டமும் இல்லை. மூளி அலங்காரி படுத்திருந்த இடத்தில் தேங்காயும், மாங்காயும் குவிந்து கிடந்தன.

ஓடிச்சென்று ஒரு பிள்ளை தேங்காயை எடுத்தது. தாவிச்சென்று ஒரு பிள்ளை மாங்காயைக் கடித்தது. மூளி அலங்காரி விருட்டென்று எழுந்தாள். மாங்காயைப் பறித்துப் போட்டாள். ஆயிரம் அழுகல் மாங்காயில் ஒன்று எடுத்துக் கொடுத்தாள். தேங்காயைப் பறித்துப் போட்டாள். ஆயிரம் தேங்காயில் அழுகல் தேங்காய் ஒன்று எடுத்துக் கொடுத்தாள்.

பார்த்தாள் நல்லதங்காள். மனம் பதறினாள். அண்ணி என் மக்களின் பசியை ஆத்துங்க என்று கெஞ்சினாள்.
மூளி அலங்காரி ஏழு வருசம் மக்கிப்போன கேப்பையைக் கொடுத்தாள். திரிப்பதற்கு உடைந்த திருகையைக் கொடுத்தாள். உலை வைக்க ஓட்டைப் பானையைக் கொடுத்தாள். நல்லதங்காள் பொறுமையாகக் கேப்பையைக் திருகையில் போட்டு அரைத்தாள்.

எப்படியே கஷ்டப்பட்டு கஞ்சி காய்ச்சினாள். ஈரமட்டைகளை வைத்து எரித்தாள். கூழும் கொதிக்கணும், குழந்தை பசியாறணும் என்று தெய்வங்களை வேண்டிக்கொண்டாள்.

ஒருவழியாகக் கஞ்சி கொதித்தது. ஆனால் பிள்ளைகள் கஞ்சியைக் குடிக்கப் போகும் நேரத்தில் மூளி அலங்காரி வந்தாள். பானையைத் தட்டிவிட்டாள். பானை உடைந்தது. கூழ் வழிந்து ஓடியது. பிள்ளைகள் அதை வழித்துக் குடித்தார்கள்.

நல்லதங்காளுக்கு இந்தக் காட்சியைப் பார்க்க சகிக்கவில்லை. இனியும் அவமானப்பட வேண்டாம். செத்துவிடலாம் என்று முடிவு எடுத்தாள்.

பிள்ளைகளைக் கூப்பிட்டு தெருவில் இறங்கினாள். வீதியில் நடந்தாள். அவளைப் பார்த்தவர்கள் பரிதாபப்பட்டார்கள். சாப்பிடுவதற்கு தங்கள் வீட்டுக்கு அழைத்தார்கள்.

பச்சரிசி குத்தித் தாரோம்
பாலும் கலந்து தாரோம்!
பாலரும் நீயும்
பசியாறிப் போங்க!

என்று கூப்பிட்டார்கள். நல்லதங்காள் மறுத்துவிட்டாள்.

அரச வம்சம் நாங்கள்
அண்டை வீட்டில்
தண்ணீர் குடிக்க மாட்டோம்.
என்று சொல்லிவிட்டாள்.

காட்டு வழியே பிள்ளைகளைக் கூட்டிப் போனாள். பாழும் கிணறு தேடிப் போனாள். அண்ணன் வந்தால் அடையாளம் தெரியட்டும் என்று ஆவாரம் செடிகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே போனாள்.

நல்லதங்காளும் பிள்ளைகளும் நெடுந்தூரம் வந்து விட்டார்கள். ஒரு கிணறும் காணோம். அப்போது சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களைப் பார்த்து நல்லதங்காள் கேட்டாள்.

“தண்ணீர் தாகமப்பா. தண்ணீர் குடிக்கணும். பாழும் கிணறு இருந்தால் பார்த்துச் சொல்லுமப்பா!’’ என்று கேட்டாள். ஒரு சிறுவன் ஓடிச்சென்று ஆழமுள்ள பாழும் கிணற்றைக் காட்டினான்.

நல்லதங்காள் பிள்ளைகளோடு அங்கு போனாள். கணவன் கண்ணில் படுமாறு தாலியைக் கழற்றி கிணற்றுப் படியில் வைத்தாள். அண்ணன் கண்ணில் படுமாறு பாலூட்டும் சங்கை கிணற்று மேட்டில் வைத்தாள். அண்ணி கொடுத்த அழுகல் தேங்காயை ஓர் ஓரத்தில் வைத்தாள்.

ஒவ்வொரு பிள்ளையாக கிணற்றில் தூக்கிப் போட்டாள். ஒவ்வொரு பிள்ளையும் பயந்து பயந்து அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டன. காலைக் கட்டிய பிள்ளையை பிடித்து இழுத்து கிணற்றில் போட்டாள். இப்படி ஆறு பிள்ளைகளைப் போட்டுவிட்டாள்.

மூத்த பிள்ளை நல்லதங்காளுக்குப் பிடிபடாமல் ஓடினான். என்னை மட்டும் கொல்லாதே என்னைப் பெற்ற மாதாவே! என்று கெஞ்சினான்.

தப்பிப் பிழைத்து அம்மா - நான்
தகப்பன் பேர் சொல்லுவேன்
ஓடிப் பிழைத்து அம்மா - நான்
உனது பேர் சொல்லுவேன்

என்று சொல்லி தப்பித்து ஓடினான். ஓடிய பிள்ளையை நல்லதங்காள் ஆட்டு இடையர்களை வைத்துப் பிடிக்கச் சொன்னாள். இடையர்களுக்கு விசயம் தெரியாது. தாய்க்கு அடங்காத தறுதலைப் பிள்ளை என்று நினைத்து அவனைப் பிடித்துக்கொண்டுவந்து நல்லதங்காளிடம் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

நல்லதங்காள் கதறி அழுத மூத்த மகனையும் பிடித்து கிணற்றுக்குள் போட்டாள். பிறகு தானும் குதித்தாள். நல்லதங்காளும், ஏழு பிள்ளைகளும் இறந்து மிதந்தார்கள். நல்லதங்காளுக்கு 16 அடிக் கூந்தல். அவள் கூந்தல் கிணறு பூராவும் பிரிந்து பரந்து கிடந்தது. பிள்ளைகளும் தெரியவில்லை. கிணற்றுத் தண்ணீரும் தெரியவில்லை. நல்லதங்காளின் கூந்தல் மட்டுமே கிணறு பூராவும் தெரிந்தது.

நல்லதங்காள் குடும்பம் இப்படி பட்டினியால் செத்து முடிந்தது.

நல்லதங்காள் புறப்பட்டு வந்த சில நாட்களிலேயே மானாமதுரையில் நல்ல மழை பெய்தது. பயிர்கள் திகிடுமுகடாக விளைந்தன. நாடு செழிப்பு அடைந்தது. காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளையும் தன் பிள்ளைகளையும் அழைப்பதற்கு புறப்பட்டு வந்தான்.

நல்லதம்பி வேட்டை முடித்து வீட்டுக்கு வந்தான். தங்கச்சியைக் காணவில்லை. தங்கச்சி பிள்ளைகளையும் காணவில்லை. பதறிப்போனான்.

மூளி அலங்காரியைப் பார்த்து என் தங்கச்சியையும், தங்கச்சி பிள்ளைகளையும் எங்கே என்று கேட்டாள். மூளி கூசாமல் பொய் சொன்னாள்.

“சீரகச் சம்பா சோறு ஆக்கிப் போட்டேன்
பத்து வகைக் காய்கறி வைத்தேன்.
சாப்பிட்டுப் போனாங்க’’
என்று பொய் சொன்னாள்.

நல்லதம்பி இதை நம்பவில்லை. பக்கத்து வீடுகளில் போய்க் கேட்டான். அவர்கள் நடந்து நடந்தபடி சொன்னார்கள். பிள்ளைகளைப் பட்டினி போட்டதைச் சொன்னார்கள். அவ்வளவுதான் நல்லதம்பிக்கு மீசை துடித்தது. கண் சிவந்தது. பக்கச் சதை எல்லாம் பம்பரம் போல் ஆடியது. தங்கையைத் தேடி காட்டுவழியே போனான். பதறிப் பதறிப் போனான். நல்லதங்காள் ஒடித்துப் போட்ட ஆவாரஞ் செடிகள் வழிகாட்டின. நல்லதம்பி பாழும் கிணற்றின் பக்கம் வந்தான். உள்ளே எட்டிப் பார்த்தான். அய்யோ தங்கையும் பிள்ளைகளும் செத்து மிதந்தார்கள். நல்லதம்பி ஓங்காரமிட்டு அழுதான்.

தங்கச்சி தங்கச்சி என்று தரையில் புரண்டு அழுதான். அம்மா அம்மா என்று அடித்துப் புரண்டு அழுதான். இப்படி அவன் அழுது புரண்டு கொண்டு இருந்தபோது காசிராஜனும் அங்கே வந்து விட்டான். பிள்ளைகளையும் மனைவியையும் பிணமாகப் பார்த்தான். மனைவியைக் கட்டிக் கொண்டு கதறி அழுதான்.

நல்லதங்காளையும் பிள்ளைகளையும் வெளியே எடுத்து தகனம் செய்தார்கள். நல்லதம்பி தன் மனைவி மூளி அலங்காரியைப் பழிவாங்க நினைத்தான். அவளை மட்டுமல்ல. அவள் குலத்தைப் பழிவாங்க ஏற்பாடு செய்தான். தன் மகனுக்கு உடனடியாக திருமணம் ஏற்பாடு செய்தான். மூளி அலங்காரியின் உறவினர்கள் உட்காரும் இடத்தில் இடிப்பந்தல் போட்டான். இடிப்பந்தலைத் தட்டிவிட்டு எல்லோரையும் கொன்றான். மூளி அலங்காரியையும் அரிவாளால் வெட்டிக் கொன்றான்.

இத்துடன் கதை முடியவில்லை. நல்லதம்பி ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். அதேபோல் காசிராஜனும் ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். இவ்வாறு இரண்டு குடும்பங்களும் பூண்டோடு அழிந்தன. இதற்கு அடிப்படையான காரணம் என்ன?

வறுமை ஒரு பக்கம். மூளி அலங்காரியின் கொடுமை மறுபக்கம். வறுமை கொடியது. பசி கொடியது. பட்டினி கொடியது. அதைவிடக் கொடியது மனிதத்தன்மையற்ற செயல்.

நல்லதங்காள் பட்ட துன்பத்தை இந்த நாடு மறக்காது.

Share:

சபரிமலை சுவாமி ஐயப்பன் கதை

முன்னொரு சமயம் பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமுதத்தை பங்கிடுவதற்கு பாற்கடலை கடைந்த தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அப்போது மகாவிஷ்ணு அழகிய பெண்ணாக மோகினி அவதாரம் எடுத்து அமிர்தத்தை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சமமாக பங்கிட்டு தருவதாகக் கூறினார்.

அங்கே வந்த சிவபெருமான் மோகினியின் அழகில் மயங்கினார். சிவபெருமானுக்கும், மோகினிக்கும் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவரே ஐயப்பன் ஆவார்.

ஐயப்பனின் அவதார நோக்கமே மகிஷி என்னும் அரக்கியை வதம் செய்வதாகும். மகிஷம் என்றால் எருமை என்று பொருள்படும். மகிஷி எருமை முகமும், மனித உடலும் உள்ள அரக்கி.

அவள் பிரம்மதேவரை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்ம தேவரிடம் தனக்கு இறவா வரம் வேண்டினாள். உலகில் பிறந்த உயிர்கள் என்றாவது ஒரு நாள் இறக்க வேண்டும். அதனால் வேறு வரம் கேட்குமாறு கூறினார். அதற்கு அவள் சிவனும், மகாவிஷ்ணுவும் சேர்ந்த சக்தியால் தனக்கு மரணம் நிகழவேண்டும் என்ற வரத்தினை வேண்டினாள்.

மேலும் தனக்கு ஒப்பற்ற ஆற்றலை வழங்கும்படி வேண்டினாள். தான் பெற்ற ஒப்பற்ற ஆற்றலை பயன்படுத்தி உலக மக்களை துன்புறுத்தி வந்தாள். இந்நிலையில் சிவனும், மகாவிஷ்ணுவும் தங்களுக்கு பிறந்த குழந்தையின் கழுத்தின் கண்டத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டி சபரி மலைக் காட்டின் நடுவில் விட்டுவிட்டுச் சென்றனர்.

அப்பொழுது சிவ பக்தரான பந்தள மகாராஜா ராஜசேகர பாண்டியன் வேட்டைக்கு சபரிமலைக் காட்டிற்கு வந்தார். காட்டின் நடுவே குழந்தையின் அழுகுரல் கேட்டு, குழந்தையைத் தேடி, கண்டுபிடித்தார். கழுத்தின் கண்டத்தில் மணிகட்டி இருந்ததால் கண்டெடுத்த குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட்டு அரண்மனைக்கு எடுத்துச் சென்றார்.

குழந்தைப் பேறு இல்லாத ராணி மணிகண்டனை தனக்கு கடவுள் கொடுத்த பரிசாக எண்ணி தன் மகனைப் போல வளர்த்து வந்தார். குழந்தையான மணிகண்டன் சற்றே பெரியவனானதும் மகாராஜா ராஜசேகர பாண்டியன் கல்விகற்க குருகுலத்திற்கு அனுப்பிவைத்தார்.

குருகுலத்தில் மணிகண்டன் கல்வியை கசடறக் கற்றான். குருவிற்கு எல்லாவித உதவிகளையும் செய்து வந்தான். குருவின் மகனான‌ வாய் பேச முடியாத, காது கேட்காத சிறுவனுக்கு வாய்பேசவும், காதுகேட்கும் சக்தியையும் வழங்கினான். குருகுலக் கல்வியை முடித்தவுடன் அரண்மனை திரும்பிய மணிகண்டனுக்கு அரசன் இளவரசு பட்டம் சூட்ட எண்ணினான்.

அப்போது அரசனுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. எனினும் அரசனோ, அரசியோ எந்த வித வேறுபாடும் மணிகண்டனிடம் காட்டவில்லை. மணிகண்டனும் தனது தம்பியிடம் அளவற்ற பாசம் கொண்டிருந்தான். இராசசேகர பாண்டியன் அரசவையில் இருந்த மந்திரி ஒருவனுக்கு மணிகண்டனுக்கு இளவரசு பட்டம் சூட்டுவது பிடிக்கவில்லை. இதை எப்பிடியாவது தடுத்துவிட எண்ணினான்.

அரசனிடம் மணிகண்டன் யார் என்று தெரியாது, காட்டிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தை எனவே அரசனுக்கு பிறந்த குழந்தைக்கே இளவரசு பட்டம் சூட்ட வேண்டும் என்று வாதிட்டான். அந்த வாதத்தினைக் கேட்ட அரசன் கடும் கோபம் கொண்டு மணிகண்டன்தான் தனது மூத்த மகன் என்றும், அவனுக்கே இளவரசு பட்டம் சூட்ட வேண்டும் என்றும் கூறிவிட்டார்.

அதன்பின் மகாராணியிடம் சென்று மணிகண்டனுக்கு இளவரசு பட்டம் சூட்டக் கூடாது என்றும், ராணிக்கு பிறந்த குழந்தைக்கே இளவரசு பட்டம் சூட்ட வேண்டும் என்று கூறினான். முதலில் மகாராணி இதனைக் கேட்டு கோபப்பட்டாலும், மந்திரி ராணியின் மனதினை மாற்றினான்.

ராணி மனம் மாறி தன் மகனுக்கு எவ்வாறு இளவரசு பட்டம் சூட்டுவது என்று யோசிக்கையில், மந்திரி ராணியிடம், ராணிக்கு தீராதவயிற்று வலி என்றும், வலி தீர, புலியின் பால் தேவை என்றும், புலியின் பாலைக் கொண்டுவர மணிகண்டனை அரசன் பணிக்க வேண்டும். அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மந்திரி மேற்கொள்வதாக கூறினான்.

மந்திரி கூறிய யோசனைக்கு ராணியும் உடன்பட்டு தனக்கு தீராதவயிற்று வலி உள்ளதாக அரசனிடம் தெரிவித்தாள். அரசன் அரண்மனை வைத்தியரை அழைத்து வைத்தியம் பார்க்கச் சொல்ல, மந்திரியின் கையாளான வைத்தியர் புலிப்பால்தான் ராணியின் நோய்க்கு மருந்து என்று அரசனிடம் கூறினான்.

இதனைக் கேட்ட அரசர் புலிப்பால் கொண்டு வருவோர்க்கு நாட்டில் பாதி தருவதாகக் கூறினான். ஆனால் யாரும் புலிப்பால் கொண்டு வருவதற்கு தயார் இல்லை. இதனைக் கண்ட அரசன் வருத்தமடைந்தான். அரசனின் வருத்தத்தைக் கண்ட மணிகண்டன், தான் புலிப்பால் கொண்டு வருவதாகக் கூறினான்.

அதனைக் கேட்ட மன்னன் மணிகண்டன் புலிப்பால் கொண்டு வருவதற்கு காட்டிற்குச் செல்ல வேண்டாம் என்று கூறினான். ஆனால் மணிகண்டன் பிடிவதாமாக தான் மட்டும் தனியாகச் சென்று புலிப்பால் கொண்டு வருதாகக் கூறி காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான்.

காட்டினுள் சென்ற மணிகண்டன் குடிசை ஒன்றினுள் தங்கினான். அப்போது எருமைத்தலையுடன் மகிஷி அங்கியிருந்தோரை துன்பப்படுத்துவதைக் கண்டான். மகிஷியுடன் போர்புரிந்து இறுதியில் மணிகண்டன் மகிஷியை கொன்றுவிட்டான்.

மகிஷியின் உடலிருந்து சாப விமோசனம் பெற்ற பெண் தன்னை மணம் செய்து கொள்ளுமாறு ஐயப்பனிடம் வேண்ட தான் பிரம்மசாரி எனவும், தன்னால் திருமணம் செய்ய இயலாது எனவும் தெரிவித்துவிட்டார்.

மகிஷியிடமிருந்து விடுதலை பெற்றவுடன் தேவர்கள் ஐயப்பனை மனமார வாழ்த்தினர். இந்திரன் ஆண்புலியாகவும், மற்ற தேவர்கள் பெண் புலியாகவும் மாற, ஐயப்பன் ஆண் புலியின் மீது ஏறி பந்தள நாட்டிற்குள் வந்தார்.

அதனைக் கண்ட அரசன் ஐயப்பனிடம், ராணி மந்திரியின் வஞ்சகப்படி ஐயப்பனைக் கொல்வதற்காக தனக்கு வயிற்றுவலி எனவும், புலிப்பால்தான் நோய்க்கு மருந்து எனவும், புலிப்பாலைக் கொண்டுவர ஐயப்பன் காட்டிற்கு செல்கையில் புலியினால் மரணமடைந்தால் தனது மகனுக்கு இளவரசு பட்டம் சூட்டவும், எண்ணி வயிற்றுவலி என நாடகமிட்டாள் என்ற உண்மையைக் கூறி தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும், மன்னித்து புலிகளை காட்டிற்குள் அனுப்பிவிட்டு இளவரசு பட்டத்தை ஏற்க வேண்டும் என்றும் கூறினான்.

அதற்கு ஐயப்பன், தனது அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும் (மகிஷியை வதைப்பது) தான் மீண்டும் தேவலோகம் செல்லப் போவதாகக் கூறினார். மேலும் தன் நினைவாக தன் அம்பு விழும் இடத்தில் ஆலயம் ஒன்றை எழுப்பவும் கேட்டுக்கொண்டார்.

ஐயப்பன் எய்த அம்பு சபரிமலையில் விழுந்தது. அந்த இடத்தில் இராஜசேகரபாண்டியன் ஆலயத்தை ஏற்படுத்தினார். மேலும் ஐயப்பன் தன் அருளைப் பெற வேண்டும் எனில் 41 நாட்கள் சுத்த சைவ உணவினை உண்டு, பிரம்மசாரிய விரதத்தை மேற்கொண்டு மனக் கட்டுப்பாட்டுடன் சபரிமலைக்கு யாத்திரைச் செல்ல வேண்டும் என்று அருளினார்.
Share:

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கதை


நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஆற்றுக்கால் பகுதியில் வாழ்ந்து வந்த முல்லை வீட்டு குடும்பத்தலைவர் பரமபக்தர் ஒருவர், கிள்ளியாற்றில் கீழ் படித்துறையில் ஆற்றில் நீராடி மாலை ஜெபத்தை முடித்து வீடு திரும்ப இருந்த வேளையில், முதியவரை மறுபக்கம் ஆற்றின் கரையிலிருந்து முன்பின் பழக்கமில்லாத அழகிய வடிவம் கொண்டு ஒரு சிறுமி அழைத்து தன்னை மறுகரையில் கொண்டு விடும்படி கேட்டுக்கொண்டாள்.

சிறுமியை தோளில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்த முல்லை வீட்டுப் பெரியவர், சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமிக்கு விருந்து படைக்க புதுப்பானையில் அரிசியும் தேங்காய் துருவலையும் போட்டு பொங்கல் தயாரித்ததாக கூறப்படுகிறது. பொங்கல் படையலுடன் வந்த போது அந்த இடத்தில் சிறுமியை காணவில்லை. மனமுடைந்து கண்ணீர் வடித்துக் கலங்கி தளர்வு கொண்டு மயங்கி நித்திரையிலாழ்ந்து விட்டார். கனவில், சிறுமி தேவி வடிவில் காட்சியளித்தாள்.

மறுநாள் கனவில் கூறியபடி தன் தோட்டத்தில் மூன்று கோடுகளை கண்ட பெரியவர், அங்கு தேவியின் சிலையை நிறுவி வழிபட்டதாக கதை கூறுகிறது.

தேவிக்காக பெரியவர் தயாரித்த பொங்கல் படையலின் நினைவாக தற்போது லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் நைவேத்தியம் படைக்கின்றனர்.
Share:

சோட்டானிக்கரை பகவதி அம்மன் கதை




சோட்டானிக்கரை பகுதி பண்டைய காலத்தில் கொடுங்காடாக இருந்தது. இங்குள்ள ஆதிவாசிகளுக்கு தலைவனாக கண்ணப்பன் என்பவர் விளங்கி வந்தார். மிக கொடூரனாக விளங்கிய இவன் பக்கத்து கிராமங்களில் உள்ள பசுக்களைத் திருடி வந்து இறைச்சியாக்கி சாப்பிட்டதோடு நண்பர்களுக்கும் கொடுத்து வந்தான். இந்த கொடூரனுக்கு ஒரு மகள் இருந்தாள். ஒருநாள் வழக்கம் போல் ஒரு பசுவை கொல்ல முயன்ற போது, அது கட்டை அறுத்து விட்டு காட்டுக்குள் ஓடியது. அதைத் துரத்திக் கொண்டு கண்ணப்பனும் காட்டுக்குள் ஓடினான். ஆனால் பசு கிடைக்கவில்லை. கடும் கோபத்துடன் வீட்டுக்கு திரும்பிய போது, அங்கு தன் மகளுடன் பசு நிற்பதை கண்டதும் கண்ணப்பனுக்கு கோபம் தலைக்கேறியது. அரிவாளால் ஓங்கி வெட்ட முயன்ற போது குறுக்கிட்ட மகள், இந்த பசு எனக்கு சொந்தமானது, இதை வெட்டக்கூடாது என தந்தையின் காலில் விழுந்தாள். மகள் மீது பாசம் கொண்டிருந்த கண்ணப்பன் பசுவை கொல்லாமல் விட்டான். அதுமுதல் உயிர்களைக் கொல்லாமல் கண்ணப்பன் திருந்தினான். என்றாலும் முன்னர் செய்த பாவங்கள் கண்ணப்பனை விடவில்லை. அவன் அன்பு பாராட்டி வளர்த்த மகள் இறந்தாள். கண்ணப்பனுக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டது. ஒருநாள் கண்ணப்பனின் கனவில் மகள் காப்பாற்றிய பசு தோன்றியது. அந்த பசு, நான் சாட்சாத் ஜகதம்மா (தேவி). நாளை முதல் நான் ஓரிடத்தில் சிலையாக இருப்பேன். என் பக்கத்தில் மகாவிஷ்ணுவின் சிலையும் இருக்கும் என்று கூறியது. அடுத்த நாள் காலையில் கனவில் கண்டதைப் போல நடந்தது. உடனே கண்ணப்பன் அந்த மாட்டு தொழுவத்தை காவாக (மரங்களின் நடுவில் கடவுள் விக்ரகம் இருக்கும் இடம்) மாற்றினான். கண்ணப்பன் இறந்தபின் ஆதிவாசி மக்கள் வேறு இடத்துக்கு சென்று விட்டனர். இதனால் அந்த இடம் மீண்டும் புதர் நிறைந்த காடாக மாறியது. ஒருநாள் பெண் ஒருவர் புல் வெட்டிக் கொண்டிருந்த போது அவரது அரிவாள் விக்ரகம் மீது பட்டு ரத்தம் வடிந்தது. இதனால் பதட்டம் அடைந்த பெண் பிரசித்தி பெற்ற எடாட்டு பெரிய நம்பூதிரியிடம் விஷயத்தை கூறினார். அவர் வந்து பார்த்து விட்டு விளக்கேற்றி பூஜை நடத்தினார். அந்த சிலையில் தேவியின் சக்தி இருப்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள் வந்து தினமும் வழிபாடு நடத்தினர். அந்த அம்மனே சோட்டானிக்கரை பகவதி அம்மனாக அருள்பாலிக்கிறாள்.

இத்தலத்திற்கு மற்றொரு புராணக் கதையும் கூறப்படுகிறது.

சரசுவதி தேவியின் திருவருளால் உலகத்தை வியக்க வைத்து அத்வைத மதத்தை மஹாச் செய்த ஜகத்குரு சங்கராச்சாரியார் மைசூரிலிலுள்ள சாமுண்டீஸ்வரியை கேரளத்திற்கு கொண்டுவர விரும்பினார். அதற்கான தவமும் இருந்தார். அவரின் தவத்திற்காக வாணிதேவி அவர் முன் தோன்றினார். கேரள நாட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்ற தனது வேண்டுகோளை விடுத்தார். அம்பாள் அதற்கு மகனே ! நீ முன்னே நடந்து செல். நான் உனது பின்னே வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் பின்னால் திரும்பி பார்த்து விடாதே - எனது சொல்லை மீறி நீ பார்த்தால் நான் அங்கேயே தங்கி விடுவேன். என்ற நிபந்தனையை அம்பாள் கூறினாள். எனவே ஆதிசங்கரர் நடக்க துவங்கினார். தேவியும் தமது அணிகலன்களும் சிலம்புகளும் கணீர் என்று ஒலிக்க சங்கரரின் பின்னாலே நடந்து சென்றாள். ஆதிசங்கரரும் பல நாட்கள் பகல் இரவு பாராமல் நடக்கலாயினார். ஒரு நாள் காலையில் பின்னாள் வந்த தேவியின் சிலம்பொலி கேட்கவில்லை. அவர் தொடர்ந்து முன்னரே நடந்து சென்றிருக்கலாம் என்று தோன்றியது. எனவே அவர் சிலம்பொலி கேட்காததால் ஐயப்பாட்டுடன் திரும்பினார். என்ன விந்தை! பலப்பல படைகலன்களோடு அழகு திருவுருவத்தோடு தேவி அங்கேயே நின்று விட்டாள். நின்ற இடம் தற்போது கொல்லூர் முகாம்பிகை - ஆதிசங்கரர் திடுக்கிட்டார். உடனே அம்மை ! சங்கரா நிபந்தனையை மறந்து விட்டாயா என்றாள். சங்கரரோ, அம்மையே! தங்களின் கொலுசு ஒலியாலேயே முன்னே நடந்து சென்றேன். ஒலி கேட்காததால் ஒரு வேளை தாங்கள் பிந்திவிட்டீர்களோ என்றறிவதற்காக சற்று பின்புறமாக திரும்பி விட்டேன், மன்னிக்க வேண்டும் என்று வேண்டினார்.

தேவி மகனே! வார்த்தை தவறுவது முறையன்று. இதுவும் கேரள பூமி தான். நான் இங்கு தான் இருப்பேன். நீ வேண்டிய உன் நாட்டிற்குத் தான் வந்திருக்கிறேன். கன்னியாக்குமரி முதல் கோகர்ணம் வரையிலும் கேரளமே. இன்று அம்மை இருக்குமிடம் முன்பு கேரளத்தை சார்ந்ததேயாகும். தேவியின் திருமொழி சங்கரருக்கு திருப்தியளிக்கவில்லை. அம்மையே ஆலப்புழைக்கு அருகிலுள்ள வேந்தனாட்டிற்கு தாங்கள் எழுந்தருள வேண்டும். என் தவத்தை வீணாக்கி விடக்கூடாது தாயே, அம்மை அங்கு கட்டாயம் வந்தே தீர வேண்டும் என்று சங்கரர் மீண்டும் வேண்டினார். அவருடைய வேண்டுகோளை ஏற்று சங்கரா உன்னுடைய கட்டாய வேண்டுதலினால் தினமும் காலை மூன்று மணி முதல் ஏழரை மணி வரை சோற்றானிக்கரையில் தரிசனம் தருகிறேன். எல்லா நாட்களும் பிரம்ம முகூர்த்ததில் நான் சோற்றாணிக்கரை ஆலயத்தில் இருப்பேன். என்று ஆனையிட்டு தந்து சங்கரரை அனுப்பி வைத்தாள். சங்கரர் நாட்டிற்கு விரைந்து வந்தார். அம்மையின் திருவாய் மொழியின்படி சோற்றானிக்கரை ஆலயத்திற்கு சென்றார். அம்மையின் திருக்காட்சி கண்டு ஆனந்தமடைந்தார். சங்கரரோடு ஜோதி ரூபத்தில் வந்த தேவி, ஆலயத்தினுள் ஜோதி ரூபத்தில் கலந்து விட்டாள். அவ்வாறு ஜோதியானக்கரை இன்று சோட்டானிக்கரை என்ற பெயரில் விளங்குகிறது. இவ்வாறு காலை 7.00 மணிவரை அம்மை சோற்றானிக்கரை ஆலயத்தில் சரஸ்வதியாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
Share:
Powered by Blogger.

Popular Posts