சோட்டானிக்கரை பகவதி அம்மன் கதை




சோட்டானிக்கரை பகுதி பண்டைய காலத்தில் கொடுங்காடாக இருந்தது. இங்குள்ள ஆதிவாசிகளுக்கு தலைவனாக கண்ணப்பன் என்பவர் விளங்கி வந்தார். மிக கொடூரனாக விளங்கிய இவன் பக்கத்து கிராமங்களில் உள்ள பசுக்களைத் திருடி வந்து இறைச்சியாக்கி சாப்பிட்டதோடு நண்பர்களுக்கும் கொடுத்து வந்தான். இந்த கொடூரனுக்கு ஒரு மகள் இருந்தாள். ஒருநாள் வழக்கம் போல் ஒரு பசுவை கொல்ல முயன்ற போது, அது கட்டை அறுத்து விட்டு காட்டுக்குள் ஓடியது. அதைத் துரத்திக் கொண்டு கண்ணப்பனும் காட்டுக்குள் ஓடினான். ஆனால் பசு கிடைக்கவில்லை. கடும் கோபத்துடன் வீட்டுக்கு திரும்பிய போது, அங்கு தன் மகளுடன் பசு நிற்பதை கண்டதும் கண்ணப்பனுக்கு கோபம் தலைக்கேறியது. அரிவாளால் ஓங்கி வெட்ட முயன்ற போது குறுக்கிட்ட மகள், இந்த பசு எனக்கு சொந்தமானது, இதை வெட்டக்கூடாது என தந்தையின் காலில் விழுந்தாள். மகள் மீது பாசம் கொண்டிருந்த கண்ணப்பன் பசுவை கொல்லாமல் விட்டான். அதுமுதல் உயிர்களைக் கொல்லாமல் கண்ணப்பன் திருந்தினான். என்றாலும் முன்னர் செய்த பாவங்கள் கண்ணப்பனை விடவில்லை. அவன் அன்பு பாராட்டி வளர்த்த மகள் இறந்தாள். கண்ணப்பனுக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டது. ஒருநாள் கண்ணப்பனின் கனவில் மகள் காப்பாற்றிய பசு தோன்றியது. அந்த பசு, நான் சாட்சாத் ஜகதம்மா (தேவி). நாளை முதல் நான் ஓரிடத்தில் சிலையாக இருப்பேன். என் பக்கத்தில் மகாவிஷ்ணுவின் சிலையும் இருக்கும் என்று கூறியது. அடுத்த நாள் காலையில் கனவில் கண்டதைப் போல நடந்தது. உடனே கண்ணப்பன் அந்த மாட்டு தொழுவத்தை காவாக (மரங்களின் நடுவில் கடவுள் விக்ரகம் இருக்கும் இடம்) மாற்றினான். கண்ணப்பன் இறந்தபின் ஆதிவாசி மக்கள் வேறு இடத்துக்கு சென்று விட்டனர். இதனால் அந்த இடம் மீண்டும் புதர் நிறைந்த காடாக மாறியது. ஒருநாள் பெண் ஒருவர் புல் வெட்டிக் கொண்டிருந்த போது அவரது அரிவாள் விக்ரகம் மீது பட்டு ரத்தம் வடிந்தது. இதனால் பதட்டம் அடைந்த பெண் பிரசித்தி பெற்ற எடாட்டு பெரிய நம்பூதிரியிடம் விஷயத்தை கூறினார். அவர் வந்து பார்த்து விட்டு விளக்கேற்றி பூஜை நடத்தினார். அந்த சிலையில் தேவியின் சக்தி இருப்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள் வந்து தினமும் வழிபாடு நடத்தினர். அந்த அம்மனே சோட்டானிக்கரை பகவதி அம்மனாக அருள்பாலிக்கிறாள்.

இத்தலத்திற்கு மற்றொரு புராணக் கதையும் கூறப்படுகிறது.

சரசுவதி தேவியின் திருவருளால் உலகத்தை வியக்க வைத்து அத்வைத மதத்தை மஹாச் செய்த ஜகத்குரு சங்கராச்சாரியார் மைசூரிலிலுள்ள சாமுண்டீஸ்வரியை கேரளத்திற்கு கொண்டுவர விரும்பினார். அதற்கான தவமும் இருந்தார். அவரின் தவத்திற்காக வாணிதேவி அவர் முன் தோன்றினார். கேரள நாட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்ற தனது வேண்டுகோளை விடுத்தார். அம்பாள் அதற்கு மகனே ! நீ முன்னே நடந்து செல். நான் உனது பின்னே வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் பின்னால் திரும்பி பார்த்து விடாதே - எனது சொல்லை மீறி நீ பார்த்தால் நான் அங்கேயே தங்கி விடுவேன். என்ற நிபந்தனையை அம்பாள் கூறினாள். எனவே ஆதிசங்கரர் நடக்க துவங்கினார். தேவியும் தமது அணிகலன்களும் சிலம்புகளும் கணீர் என்று ஒலிக்க சங்கரரின் பின்னாலே நடந்து சென்றாள். ஆதிசங்கரரும் பல நாட்கள் பகல் இரவு பாராமல் நடக்கலாயினார். ஒரு நாள் காலையில் பின்னாள் வந்த தேவியின் சிலம்பொலி கேட்கவில்லை. அவர் தொடர்ந்து முன்னரே நடந்து சென்றிருக்கலாம் என்று தோன்றியது. எனவே அவர் சிலம்பொலி கேட்காததால் ஐயப்பாட்டுடன் திரும்பினார். என்ன விந்தை! பலப்பல படைகலன்களோடு அழகு திருவுருவத்தோடு தேவி அங்கேயே நின்று விட்டாள். நின்ற இடம் தற்போது கொல்லூர் முகாம்பிகை - ஆதிசங்கரர் திடுக்கிட்டார். உடனே அம்மை ! சங்கரா நிபந்தனையை மறந்து விட்டாயா என்றாள். சங்கரரோ, அம்மையே! தங்களின் கொலுசு ஒலியாலேயே முன்னே நடந்து சென்றேன். ஒலி கேட்காததால் ஒரு வேளை தாங்கள் பிந்திவிட்டீர்களோ என்றறிவதற்காக சற்று பின்புறமாக திரும்பி விட்டேன், மன்னிக்க வேண்டும் என்று வேண்டினார்.

தேவி மகனே! வார்த்தை தவறுவது முறையன்று. இதுவும் கேரள பூமி தான். நான் இங்கு தான் இருப்பேன். நீ வேண்டிய உன் நாட்டிற்குத் தான் வந்திருக்கிறேன். கன்னியாக்குமரி முதல் கோகர்ணம் வரையிலும் கேரளமே. இன்று அம்மை இருக்குமிடம் முன்பு கேரளத்தை சார்ந்ததேயாகும். தேவியின் திருமொழி சங்கரருக்கு திருப்தியளிக்கவில்லை. அம்மையே ஆலப்புழைக்கு அருகிலுள்ள வேந்தனாட்டிற்கு தாங்கள் எழுந்தருள வேண்டும். என் தவத்தை வீணாக்கி விடக்கூடாது தாயே, அம்மை அங்கு கட்டாயம் வந்தே தீர வேண்டும் என்று சங்கரர் மீண்டும் வேண்டினார். அவருடைய வேண்டுகோளை ஏற்று சங்கரா உன்னுடைய கட்டாய வேண்டுதலினால் தினமும் காலை மூன்று மணி முதல் ஏழரை மணி வரை சோற்றானிக்கரையில் தரிசனம் தருகிறேன். எல்லா நாட்களும் பிரம்ம முகூர்த்ததில் நான் சோற்றாணிக்கரை ஆலயத்தில் இருப்பேன். என்று ஆனையிட்டு தந்து சங்கரரை அனுப்பி வைத்தாள். சங்கரர் நாட்டிற்கு விரைந்து வந்தார். அம்மையின் திருவாய் மொழியின்படி சோற்றானிக்கரை ஆலயத்திற்கு சென்றார். அம்மையின் திருக்காட்சி கண்டு ஆனந்தமடைந்தார். சங்கரரோடு ஜோதி ரூபத்தில் வந்த தேவி, ஆலயத்தினுள் ஜோதி ரூபத்தில் கலந்து விட்டாள். அவ்வாறு ஜோதியானக்கரை இன்று சோட்டானிக்கரை என்ற பெயரில் விளங்குகிறது. இவ்வாறு காலை 7.00 மணிவரை அம்மை சோற்றானிக்கரை ஆலயத்தில் சரஸ்வதியாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts