அனுமான் கதைகள்


“அஞ்சனாதேவி” என்ற பெண் குரங்கிற்கும், ”கேசரி” என்ற ஆண் குரங்கிற்கும் மகனாய் பிறந்தவர்தான் இந்த அனுமன். ஆஞ்சநேயரின் தாயார் ”அஞ்சனாதேவி” முற்பிறவியில், பிரம்மாவின் சபையில் ஒரு ஆடல் அழகியாய் இருந்தார். தவம் இயற்றிக் கொண்டிருந்த ஒரு முனிவரின் தவத்தை கலைத்தற்காக, சாபம் பெற்று குரங்காக மாறினார். மரபு வழி கதைல சொல்லப்பட்ட கதை என்னன்னா, ஒரு முறை ஒரு குரங்கு ஆசனம் இட்டு தவம் செய்து கொண்டிருந்தததை பார்த்தாள் ”அஞ்சனாதேவி”. அதைப்பார்த்து, சும்மா இராமல் அந்த குரங்கின் மீது பழங்களை எறிந்து விளையாடினார். உடனே, அந்த குரங்கு தவம் கலைந்து எழுந்து ஒரு முனிவராக மாறியது. கடுங்கோபம் கொண்ட அந்த முனிவர், ”அஞ்சனாதேவி” யார் மீதாவது காதல் கொண்டால், அந்த தருணமே குரங்காக மாறிவிடுவாள் என சாபமிட்டார். தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு மன்றாடினாள் ”அஞ்சனாதேவி”. தனக்கு குரங்கு முகம் இருந்தாலும், தன் காதலன் தன்னை நேசிக்க வேண்டும் என்றும், சிவப்பெருமானின் அம்சமே தனக்கு மகனாக பிறக்கவேண்டும் என்றும் வரம் வேண்டினாள். மனமிரங்கிய முனிவரும் அப்படியே ஆகட்டும். சிவபெருமானின் அம்சமாக மகன் பிறந்தவுடன் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என அருள்பாலித்தார் . முனிவரின் சாபத்தின் பலனால், பூமியில் பிறந்து, ஒரு காட்டில் வசித்து வந்தாள். ஒருநாள் காட்டில் ஒரு ஆடவனைக் கண்டு, அவன் அழகில் மயங்கி, அவன் மேல் காதல் கொண்டாள். காதல் கொண்ட அந்த தருணமே அவள் குரங்காக மாறிவிட்டாள். அவள் அருகில் வந்த அந்த ஆண், தன்னை ”கேசரி” என்றும், தான் ”குரங்குகளின் அரசன்” என்றும் கூறினான். குரங்கு தலையை கொண்ட மனிதனான அவனால் நினைத்த நேரத்தில் மனிதனாகவும், குரங்காகவும் உருமாற முடியும். இதைக் கண்டு ஆச்சரியமடைந்தாள் ”அஞ்சனாதேவி”. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அஞ்சனாதேவியிடம் கேட்டான். அந்த காட்டிலேயே ”அஞ்சனாதேவி”யும் ”கேசரி”யும் கந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும், சிவப்பெருமானை நினைத்து எப்பொழுதும் தவத்தில் இருந்தாள் ”அஞ்சனாதேவி”. இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான் என்ன வரம் வேண்டும் என கேட்டார். முனிவரால் தனக்கு கிடைத்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற, சிவபெருமானே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என கோரினாள். அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்தார் சிவபெருமான். அதேசமயம், அயோத்தியாவின் அரசனான ”தசரத சக்கரவர்த்தி”யும் பிள்ளை வரம் வேண்டி ”புத்திரகாமேஷ்டி” யாகத்தை நடத்திக் கொண்டு இருந்தார். இதனால், மனம் குளிர்ந்த ”அக்னிதேவன்”, ”தசரதனி”டம் புனிதமான பாயாசத்தை கொடுத்து இதனை சரி சமமாக உன்னுடைய தேவியருக்கு பங்கிட்டு கொடுன்னு எனக் கூறினார். ”தசரதனு”ம் தன்னுடைய பட்டத்து ராணியான, “கெளசல்யா” ( கோசலை)விற்கும், ”கைகேகி”க்கும் இரண்டாகப் பிரித்துக் கொடுத்தார். அவர்கள் இருவரும், தங்களுக்கு அளிக்கப்பட்ட பிரசாதத்தினை சரி பாதியாக பிரித்து, இரண்டு பங்காக சுமித்ராவுக்கு கொடுத்ததினால் அவளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது என மரபு வழி கதைகளில் சொல்வார்கள். தசரதன் அந்த பிரசாதத்தை தன் மனைவியருக்கு கொடுக்கும் போது, அதில் சிறிதளவு பிரசாதத்தை ஒரு பறவை எடுத்துச் சென்று ”அஞ்சனாதேவி” தவம் புரிந்த இடத்தருகே விட்டு சென்றது. காற்றின் கடவுளான ”வாயுபகவானி”டம் அந்த பிரசாதத்தை ”அஞ்சனாதேவி”யின் கைகளில் போடுமாறு ”சிவபெருமான்” கட்டளையிட்டார். பாயாசத்தை பார்த்த அஞ்சனா மிகுந்த சந்தோஷத்துடன் அதனை உண்டாள். அதனை உண்ணும் போது சிவபெருமானின் அருளை ”அஞ்சனாதேவி” உணர்ந்தாள். அதன்பிறகு, குரங்கின் முகத்தை கொண்ட ஒரு மகனை பெற்றெடுத்தார் ”அஞ்சனாதேவி”. அக்குழந்தை சிவனின் அம்சமேயாகும். அந்தக் குழந்தை பல பெயர்களில் அழைக்கப்பட்டது. ”ஆஞ்சநேயன்”, (அஞ்சனாவின் மகன் ), ”கேசரி நந்தனா” (கேசரியின் மகன்), ”வாயுபுத்திரா” அல்லது ”பவன் புத்திரா” (வாயுதேவனின் மகன்). அந்தக் குழந்தை தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே மிகுந்த பலசாலியாக விளங்கி வந்தார் அனுமன். தன் தந்தை”கேசரி” மற்றும் தாய் ”அஞ்சனாதேவி”யின் சக்திகளை அவர் பெற்றார். வாயுதேவனின் மகன் என்பதால் காற்றைப்போல் மிக வேகமாக செயல்பட்டார். ஆஞ்சநேயரின் பிறப்பால், ”அஞ்சனாதேவி” தன் சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார். சாப விமோசனம் பெற்ற ”அஞ்சனாதேவி” வான் உலகுக்கு திரும்பினாள். பின்னர் ராமபிரானின் தீவிர பக்தனனார் ஆஞ்சநேயர். இராம இராவண யுத்தத்தில் பெரும்பங்கு வகித்து இராமர் கைகளினாலே சிரஞ்சீவி வரம் பெற்றார். இந்த கதைகள் எல்லாம் நாம் போன பதிவுகளிலே பார்த்து விட்டோம். இனி, பிரம்மச்சரிய விரதம் கடைபிடிப்பவர்கள் ஆஞ்சநேயரின் பெயரிலேயே அந்த உறுதிமொழி எடுப்பார்கள். அப்படி இருக்க பிரம்மச்சாரியான ஆஞ்சநேயருக்கு மகன் உண்டுன்னு சில கதைகள் சொல்லுது. அந்த கதைகளை இன்று பார்க்கலாம்…., இராம இராவண யுத்தத்தின்போது இராவணனின் நம்பிக்கைக்குரிய பராக்கிரமம் மிக்க புதல்வன் ”மேகநாதன்” என்னும் ”இந்திரஜித்” கொல்லப்படுகிறான். அதனால் பயந்துபோன இராவணன் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனும், பாதாள இலங்கையின் அரசனுமாகிய ”மயில்ராவண”னை உதவிக்கு அழைக்கிறான். (மயில்ராவணன் அஹிராவணன் எனவும் அழைக்கப்படுகிறான்.). “மயில்ராவணன்”இராவணனுக்கு ஆறுதல் கூறுகின்றான். கவலைப்படாதே! நாளை இராமனும் லட்சுமணனும் இருக்க மாட்டார்கள் என்று சொல்கிறான். இதை விபீஷணன் அறிந்து கொண்டான். அவன் சுக்கிரீவனிடமும், இராமனிடமும் அனுமனிடமும் சொல்லிவிட்டான். அனுமன் உடனே தன் வாலால் ஒரு கோட்டைப் போன்று உருவாக்கி அதில் இராமனையும் லட்சுமணனையும் வைத்து பாதுகாக்கிறான். ”மயில்ராவணன்” தன்னுடைய மாயஜால வித்தைகளால் பலமுறை இராம லட்சுமனரை நெருங்க முயன்றும் ஒவ்வொரு முறையும் அனுமனால் அது முறியடிக்கப்படுகிறது. இறுதியாக மயில்ராவணன், விபீஷ்ணனது உருவம் எடுத்து அனுமனின் கவசக் கோட்டைக்குள் நுழைகின்றான், இராம லட்சுமணர்களை மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களை பாதாள உலகிற்கு கடத்தி செல்கிறான்.உண்மையான விபீஷணன் வர ஹனுமனுக்கும் அவனுக்கும் சண்டை வரும் நிலை வருகிறது. விபீஷணனோ மயில்ராவணனின் தந்திரத்தை தெளிவாக சொல்கிறான். அவர்கள் இருவரும் ஆபத்தில் இருகின்றனர்,அவர்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும் இல்லை எனில் மயில்ராவணன் அவர்களை சாண்டிதேவிக்கு பலி கொடுத்துவிடுவான் என எச்சரிக்கிறான். இந்த நிலையில் மயில்ராவணன் இருவரையும் சண்டிதேவிக்கு பலி கொடுக்க தயாராகின்றான். அப்பொழுது பாதாள உலகிற்கு செல்ல முயற்சிக்கும்போது அந்த பாதாள உலகின் கதவை காவல் காக்கும் ஒரு உயிரினத்தால் கடும் சவாலை அனுமன் எதிர்கொண்டார். அந்த உயிரினம் பாதி குரங்காகவும், பாதி ஊர்வனவாகவும் இருந்தது. அவன் தன்னை மகர்ட்வாஜா (தமிழில் மச்சவல்லபன் என்று அழைக்கப்படுகிறார்)என்றும், தான் ஆஞ்சநேயரின் மகன் என்றும் ஆஞ்சநேயரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். ஆஞ்சநேயருக்கு ஒரு மகன் இருப்பது, யுத்த களத்தில் தன் எதிரியாக அவனை பார்க்கும் வரை அவருக்கே தெரியாது என்பதும் உண்மையில் சுவாரசியமான விசயமாகும். வியக்கத்தக்க கருத்துக்களை கொண்டது இந்து புராணங்கள். அவைகள் படிப்பதற்கு மிகவும் புதிராகவும், சுவாரசியமாகவும் இருக்கும். மாகாபாரதத்தில் தேவர்களின் அருளால் பாண்டவர்களை கருவில் சுமந்தார் குந்திதேவி. அதேப்போல, கந்தாரியோ 101 குழந்தைகளை கருவில் சுமந்தார். அதுப்போலதான், ஆஞ்சநேயரின் மகனான மகர்ட்வாஜாவும் வியக்கத்தக்க கருவின் மூலமாக தான் பிறந்தார். ஆஞ்சநேயரின் மகன் கருவானதை பற்றியும், ஆஞ்சநேயர் அவனை சந்தித்தது பற்றியும் இரண்டு விதமான கதைகள் கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு கதைகளும் சொல்வது ஒன்றைத்தான். ஆஞ்சநேயருக்கு ஒரு மகன் இருந்தான் என்பதே. மகர்ட்வாஜா ஆஞ்சநேயருக்கு மகனாக மட்டும் இல்லாமல் மிகப்பெரிய போர் வீரனாகவும் இருந்தான். வால்மீகி ராமாயணத்தில் மகர்ட்வாஜா பற்றி சொல்லப்படும் போது, ஒருமுறை ஆஞ்சநேயேர் நதியில் குளித்து கொண்டிருந்தார். அவர் உடம்பில் ஏறியிருந்த சூட்டினால், அவருடைய விந்தணு ஆற்றில் கலந்துள்ளது. அது மகர் என்ற மீன் போன்ற உருவத்தில் இருந்த ஒர் உயிரினத்திடம் சென்றது. அதனால் ஒரு கருவையும் பெற்றது. பின்னர் ராவணனின் உறவினர்களான அஹிராவணாவும். மஹிராவணாவும் நதிக்கரையில் பாதி குரங்கு, பாதி மீன் வடிவில் ஒரு குழந்தையை பார்த்தனர். அதை எடுத்து, அதற்கு போர் பயிற்சி கொடுத்து சிறந்த வீரனாக்கினர். அதுவே மகர்ட்வாஜா என்று சொல்லப்படுகிறது . கம்போடியா மற்றும் தாய் பதிப்புகளான ராமாயணத்தில், அனுமனின் மகன் ”மச்சானு” என அழைக்கப்பட்டான். ஆஞ்சநேயருக்கும் இராவணனின் கடற்கன்னி மகளான சுவன்னமச்சாவிற்கும் (சுவர்ண என்றால் தங்க மச்சா என்றால் கடற்கன்னி என்று அர்த்தம்) பிறந்தவன் தான் மச்சானு. சில பதிப்புகளில், விந்தணு தண்ணீரில் சென்ற அதே கதை தான் கூறப்பட்டுள்ளது. ஆனால், அது சென்றது மகாராவிற்கு பதில் இராவணனின் கடற்கன்னி மகளான சுவன்னமச்சாவிடம் என்று கூறப்படுகிறது. இராமர் இலங்கைக்கு பாலம் கட்டிக்கொண்டு இருந்த சமயத்தில், அந்த பணிகளை செயல்படாமல் இடையுறு செய்ய இராவணன் தன்னுடைய கடல்கன்னி மகளான சுவன்னமச்சாவினையும் அவளது கூட்டாளிகளையும் பாலம் கட்டும் இடத்திற்கு அனுப்புகிறான். வானரப்படைகள் கடலில் இடும் பாறைகள் இரவில் காணாமல் போயின.இந்த மர்மத்தை கண்டுப்பிடிக்க அனுமன் கடலின் அடியில் பாய்ந்து செல்கிறார். அங்கே இராவணனின் அழகிய மகளான சுவன்னமச்சாதான் காரணம் எனத் தெரிந்துக் கொள்கிறார். மேலே இருக்கும் ஓவியமானது இராவணன் தன்னுடைய கடற்கன்னி மகளுக்கு பாலத்தை தகர்க்க உத்தரவிடுவதாகக் கூறப்படும் தாய்லாந்து இராமாயண ஓவியம் . இராவணனின் மகள் சுவன்னமச்சாவினை பார்க்கிறார் அனுமன் அவள் உத்திரவுப்படி மற்ற கடல் கன்னியர் கடலில் வீசப்பட்ட பாறைகளை தூக்கி வேறு இடத்தில் சேர்த்துக்கொண்டு இருந்தனர். அதை, அனுமன் தடுக்கும்போது ஆரம்பத்தில் அனுமனுக்கு போக்குகாட்டிக் கொண்டு இருந்த சுவன்னமச்சா இறுதியில் அனுமனின் நல்ல உள்ளம் தெரிந்துக் கொண்டு அனுமன்மேல் காதல் கொண்டாள். அனுமனும் சுவன்னமச்சா அழகில் மயங்கி இருவரும் ஒன்றாக இணைந்தனர். அதில் பிறந்த மகன்தான் மச்சானு என்றும் சொல்லப்படுகிறது . மேலும்,கம்போடியா மற்றும் தாய் பதிப்புகளான இராமாயணத்தில், இராவணனின் படையுடன் நடந்த ஒரு போரின் போது, இடுப்புக்கு மேல் குரங்கை போலவும் இடுப்புக்கு கீழ் மீனை போல் இருந்த, சக்தி வாய்ந்த ஒரு எதிரியை எதிர்கொண்டார் அனுமன். விளையாட்டாய் அதனை வென்றுவிடலாம் என்று நினைத்தார். ஆனால், அந்த உயிரினமோ கொஞ்சமும் சோர்வின்றி அவரோடு போரிட்டது. முடிவே இன்றி சண்டை நீண்டுக்கொண்டே போக, இவ்வளவு வீரத்தோடு சண்டையிடும் நீ யார்? உன் பெற்றோர் யார்? எனக் கேட்டார் அனுமன். அந்த உயிரினம் சொன்ன பதில், அனுமனையே அதிரச் செய்தது தன்னுடைய தாய் சுவன்னமச்சா எனவும் தந்தை வல்லமைமிக்க வானர வீரரான வாயுபுத்திரன் அனுமன் என்று கூறியதைக் கேட்டு வியந்த ஆஞ்சநேயர், தான் தான் ஆஞ்சநேயர் என்றும் தான் ஒரு பிரம்மச்சாரி என்றும் கூறினார்.இருப்பினும், தியானத்தில் கண்களை மூடிக்கொண்ட ஆஞ்சநேயர் மகர்ட்வாஜா பிறப்பின் பின்னணியில் நடந்த நிகழ்வுகளை கண் முன் கொண்டு வந்தார். தன் மகனை அடையாளம் கண்டுக்கொண்ட ஆஞ்சநேயர் உடனே நடு வானில் பாதி வழியில் சென்று கொண்டிருந்த தன் ஆயுதத்தை நிறுத்தினார். தன் மகனான மகர்ட்வாஜாவை அணைத்துக் கொண்ட ஆஞ்சநேயர் தன் ஆசீர்வாதங்களையும் அளித்தார். எது எப்படி இருந்தாலும், தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் யாரென தெரியாமல் போரில் மோதிக் கொண்ட போதுதான் தனக்கு ஒரு மகன் இருப்பதை ஆஞ்சநேயர் தெரிந்து கொண்டார். பின்னர் மகர்ட்வாஜாவின் ஒத்துழைப்புடன் பாதாள உலகிற்கு செல்கிறார் அனுமன் அங்கே மயில்ராவணன் மிக பலம் பொருந்திய படைகளுடன் போர் செய்கிறார். அஹிராவணன் முதல் அம்பிலேயே கொல்லப்படுகின்றான். மயில்ராவணன் பலம் கொண்ட மட்டும் போர் செய்யும் காரணம் பிரம்மன் கொடுத்தவரம் அப்போதுதான் அனுமனுக்கே தெரிய வருகிறது. அதாவது மயில்ராவணின் உயிர் ஏதோ ஒரு மலைக்கு அடியில் இருக்கும் ஒரு பெட்டியுள் அவனது உயிர்நிலைகள இருக்கிறது. அதுவும் ஐந்து வண்டுகளாக இருக்கிறது அந்த ஐந்து வண்டுக்களையும் ஒரே அடியில் அடித்தால் மட்டுமே அவனை கொல்ல முடியும். அப்படி செய்ய முடியவில்லை எனில் அவனை எதிர்த்து போரிடுபவன் இறந்து போவான் என, மயில் ராவணனுக்கு ஒரு வரம் உண்டு. இந்த நிலையில் என்ன செய்வது என தெரியாமல் அந்த பெட்டியை தூக்கி வருகிறார் அனுமன். போரின் போது அவன் முன்னே அதை திறக்கிறார். ஐந்து வண்டுக்கள் பறக்கும் போது ஹனுமன் ஐந்து முகங்களை தரித்து ஐந்து வண்டுகளையும் கடித்து தின்கிறார். அதனால் தான் அவருக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் என்னும் பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படியாக மயில் ராவணனும் கொல்லபடுகிறான். உ‌ஜ்ஜை‌னி நகர‌த்‌தி‌ல் இரு‌ந்து 15 ‌கி.மீ. தொலை‌வி‌ல் சா‌ன்வெ‌ர் எ‌ன்ற இட‌த்‌தி‌ற்கு அரு‌கில் ஒரு அனுமன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலின் சிறப்பே இங்கிருக்கும் அனுமன் சிலை தலை கீழாக இருப்பதுதான். இதனால் இந்த கோவில் உல்டா அனுமன் என்று சொல்லப்படுகிறது. எதுக்கு இந்த கோவிலைப் பற்றி பார்க்கிறோம்னா, மயில்ராவணன் இராமனையும் லட்சுமணையும் மயக்க நிலையில் பாதாள உலகத்திற்கு கடத்திச் சென்றபோது அனுமன் இந்த வழியாகத்தான், பாதாள உலக‌த்‌தி‌ற்கு‌ச் செ‌‌ன்று அவ‌‌ர்க‌ள் இருவரையு‌ம் ‌மீ‌ட்டு வ‌ந்தா‌ராம். அ‌ப்படி அனும‌ன் தலை‌கீ‌ழாக‌ப் பாதாள உலக‌த்‌தி‌ற்கு‌‌ப் புற‌ப்ப‌ட்ட இட‌ம் இதுதா‌ன் என சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் இருக்கும் இரண்டு பா‌ரிஜாத மர‌ங்க‌ள் ‌மிகவு‌ம் பழமையானவை. இ‌ந்த மர‌ங்க‌ளி‌ல் அனும‌ன் குடி‌யிரு‌ப்பதாக ஐதீகம் உண்டு. இங்கே அனுமனின் மகனாக கருதப்படும் மகரத்வஜனுக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. மேலும், இராம‌ன், ‌சீதை, ல‌ட்சுமண‌ன், ‌சிவ‌ன் ம‌ற்று‌ம் பா‌ர்வ‌தி ஆ‌கியோ‌ரி‌ன் ‌சிலைகளு‌ம் உ‌ள்ளன. இந்த கதைகளின் மூலம் புகழேந்திப் புலவர் எழுதிய மயில்ராவணன் கதையிலிருந்துதான் மக்களுக்கு அறியப்படுகிறது. இதன் முதல் பதிப்பு 1868ஆம் ஆண்டில்தான் சிறுகதை நூலாக அச்சில் வெளியிடப்பட்டது என்கிறார்கள். ஆனால், இந்த பதிப்பு வெளிவந்த ஆண்டு 1936. அதில் மயில்ராவணன் கதை விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை புராணங்களில் எங்கேயும் கூறப்படவில்லை. ஆதிக்காலத்தில் இருந்தே நாட்டுப்புறங்களில் வாய்மொழிக் கதையாகவும், தோல்பாவை,தெருக்கூத்து போன்றவைகளில் மட்டுமே அறியப்பட்ட கதை, பின்பு கலாச்சார மாற்றத்தினால், அழிந்து விட்ட இந்த கலைகளோடு மயில்ராவணன் கதையும் அழிந்து விட்டது . 
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts