முத்தாரம்மன் வரலாறு

சம்பு என்ற தீவுக்கப்பால் ஏழு கடல் தாண்டி, கமலை என்ற சுனை அருகே மாணிக்கத்தால் ஆன புற்று ஒன்று இருந்தது. அதில் ஐந்து தலை நாகம் ஒன்று பல காலம் வாழ்ந்து வந்தது. அந் நாகம் பல காலம் சேமித்து வைத்த விஷமானது ஒரு அமுதக் கலசமாக மாறியிருந்தது. ஒரு நாள் அந் நாகம் தன் வயிற்றிலிருந்த கலசத்தை ஈன்றெடுத்தது. விஷத்தன்மை கொண்ட அந்த ஐந்து தலை நாகம் ஈன்றெடுத்த கலசத்திலிருந்து ஏழு அரக்கியர்கள் தோன்றினர்.

ஏழு அரக்கியர்களும் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்குத் திருமணம் நடந்து முடிந்தது. அரக்கியர் எழுவருக்கும் நீலன், குமுதன், ஆதித்தன் என்ற மூன்று மக்கள் பிறந்தனர். அரக்கியர் பூமியில் தோன்றிய காரணம் முடிந்ததும் தம் மக்கள் மூவரையும் ஒரு வனத்தில் விட்டு விட்டு மறைந்தனர். அந்த வனத்தில் மூன்று குழந்தைகளும் அநாதைகளாகத் திரிந்து கொண்டிருந்தனர்.

அவ் வனத்தில் சக்தி முனி என்பவன் யாகம் செய்து கொண்டிருந்தான். அவன் செய்த யாகத்தில் வெளிப்பட்ட புகை விண்ணுலகத்தையே திக்குமுக்காடச் செய்தது. தேவர்களால் அந்தப் புகையைத் தாங்க முடியவில்லை. அவர்கள் பார்வதியிடம் முறையிட பார்வதியும் வனத்திற்குப் புறப்பட்டு வந்தாள். அந்த யாகத்தையும் அதில் வெளிப்படும் புகையையும் அடக்கப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டாள் பார்வதி. அப்போது பார்வதியின் நெற்றியில் வியர்வை அரும்பியது. அதை வழித்துக் கீழே விட்டாள் பார்வதி. அந்த வியர்வை முத்து பூமியில் விழுந்தது. அதிலிருந்து முத்தாரம்மன் தோன்றினாள். அந்த முத்தாரம்மனை, அநாதையாய்க் காட்டில் திரியும் அரக்கியரின் மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும்படி கட்டளையிட்டு அனுப்பினாள் பார்வதி. பார்வதியின் கட்டளையின்படி முத்தாரம்மன் புறப்பட்டாள்.

நீலன், குமுதன், ஆதித்தன் ஆகிய மூன்று குழந்தைகளும் அநாதையாய்த் திரிவதைக் கண்டுபிடித்தாள் முத்தாரம்மன். பிறகு அவர்களை வைத்துக் காக்க வேண்டி, காண்டாபுரம் என்ற வனத்தை அழித்து அதில் முப்புரக் கோட்டை ஒன்றை அமைத்தாள். அதில் தன் குழந்தைகளான மூவரையும் வைத்து வளர்த்தாள் முத்தாரம்மன். அந்த மூவரும் வளர்ந்து பெரியவர்களானார்கள். அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தாள் முத்தாரம்மன்.

நீலன், குமுதன், ஆதித்தன் என்கிற மூன்று பேருக்கும் சந்தவாழ்குமரன், முத்துத்தம்பி, முத்துக்குமரன் ஆகிய மக்கள் மூவர் பிறந்தனர். முத்தாரம்மனின் மூன்று பேரன்களும் வளர்ந்து பெரியவர்களாயினர். தங்களின் செல்வாக்கு, சக்தி அனைத்தும் அவர்களுக்குப் புரியத் தொடங்கியதும் யாருக்கும் பயப்படாமல் செயல்பட்டனர். 'அரக்கத்'தனமான குணம் அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியது. அதன் விளைவால் தேவர்களை வெறுக்கத் தொடங்கினர். தேவர்களின் யாகம், அவர்களின் போக்கு எல்லாவற்றையும் எதிர்த்தனர். மூன்று பேரின் தகப்பன்களும் தம் மக்களுக்கு உதவினர். தேவர்களால் முத்தாரம்மன் பேரப்பிள்ளைகளின் செயல்களைத் தாங்க முடியவில்லை. திருமாலிடம் ஓடிச் சென்று முறையிட்டனர். திருமால் மூவரையும் அழிக்க எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது. இறுதியில் திருமால் கையை விரித்துவிட்டார்.

தேவர்கள் ஒன்று கூடி சிவனிடம் சென்று முறையிட்டார்கள். தேவர்களுக்கு அபயம் அளிப்பதாகச் சிவபெருமானும் வாக்களித்தார். தற்காலிகமான மன நிம்மதியோடு தேவர்கள் கலைந்தனர். முத்தாரம்மன் பேரன்கள் சிவபூஜை செய்து கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து அவர்களை அழிக்கச் சிவன் வந்தார். சிவனை நேரில் சந்தித்த மகிழ்ச்சியில் முத்தாரம்மனும், அவளது மகன்கள், பேரன்கள் அனைவரும் சிவனின் காலில் விழுந்து வணங்கினர். வந்த காரியத்தை மறந்த சிவன் கையிலிருந்த சூலத்தைக் கீழே போட்டுக் கைகொட்டிச் சிரித்தார். உடனே முப்புரமும் எரிந்து சாம்பலானது. அதில் முத்தாரம்மன் தவிர மற்றவர்கள் எரிந்து சாம்பலாயினர். முத்தாரம்மன் கடும் கோபம் கொண்டு தம் மக்களான நீலன், குமுதன், ஆதித்தன் மூவரையும் உயிர்த்தெழச் செய்தாள்.

சிவனிடம் சென்று அவர் செய்த கொலைக்காகத் தனக்கும் தன் மக்களுக்கும் கோடி வரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டாள். சிவனும் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார். தம் மகன்கள் தவிர, இப் பூவுலக மக்களையும் காக்கப் பல வரங்கள் பெற்றாள். பிறகு ஒரு வண்டியில் தன் மகன்களுடன் ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு நல்ல வரங்கள் அளித்து வந்தாள். பின்னர் தன் சக்தியை அங்கங்கு விட்டு மக்களுக்கு நன்மை செய்து வருகிறாள் முத்தாரம்மன் என்று சொல்லப்படுகிறது
Share:
Powered by Blogger.

Popular Posts