பசுவும் தேவர்களும் வழிபட்ட ஆலயம்தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ளது பசுவந்தனை. இந்த ஊரில் கயிலாசநாத சுவாமி கோவில் இருக்கிறது. இத்தல இறைவனின் பெயர் கயிலாசநாதர்.


இறைவியின் பெயர் ஆனந்தவல்லி அம்மன். ஆலய தல விருட்சம் வில்வ மரம்.

இத்தல சிவலிங்கத்தின் மீது, பசு வந்து அணைந்து பால் சொரிந்ததால் இத்தலம் ‘பசுவந்தனை’ என்று அழைக்கப்படுகிறது.


கயிற்றாறு (தற்போது கயத்தாறு என்று அழைக்கப்படுகிறது) என்னும் பகுதியை ஆண்டு வந்த மன்னன், ஆநிரைகளை (பசுக்களை) போற்றி வந்தான். பசுக்கூட்டங்கள், மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் தினமும் புல் மேய்வது வழக்கம். அந்த பசுக் கூட்டத்தில் இருந்த ஒரு பசு மட்டும், அங்குள்ள ஒரு குளத்தில் நீராடி வில்வ மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது பாலைச் சொரிந்து விட்டு பின்னர் தனது கூட்டத்தில் புகுந்து சேர்ந்து விடும்.

அந்த பசு மாட்டில் மட்டும் பால் குறைவதை அறிந்த மன்னன், தனது காவலர்களை அனுப்பி ‘உண்மை என்ன?’ என்று கண்டறிந்து வருமாறு ஆணையிட்டான். மன்னனின் உத்தரவுக்கு கட்டுப்பட்ட காவலர்கள், அந்த மாட்டை கண்காணிக்கத் தொடங்கினர். அப்போது தான் பசு தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வந்தது தெரியவந்தது.

இறையுணர்வு மிக்க தனது பசு, பால் சொரிந்த இடத்தை சென்றடைந்த மன்னன், அங்கிருந்த சிவலிங்கத்தை கண்டு பணிந்து பயபக்தியுடன் வணங்கினான். இரவு படையுடன் அங்கு தங்கியிருந்த மன்னன், வானவர்கள் வந்து அந்த சிவலிங்கத்தை அர்ச்சித்து வழிபாடு செய்வதைக்கண்டு மெய் உருகிப் போனான்.

பசுபால் சொரிந்து, வானவர்கள் வழிபட்ட சிவலிங்கத்திற்கு அந்த இடத்திலேயே ஆலயம் ஒன்று எழுப்ப முனைந்தான். அதன்படி அந்த இடத்தில் ஆனந்தவல்லி சமேத கயிலாசநாதருக்கு சிறியதாக ஒரு ஆலயத்தை அமைத்தான். அதனை சுற்றி முறைப்படி வீதிகள் அமைத்து நகரமாக்கினான். பசுவந்து நீராடிய குளம் ‘சிவ தீர்த்தம்’ என்றும், ‘கோசிருங்கவாவி’ என்றும் அழைக்கப்படுகிறது.

இத்திருக்கோவிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் நடுவே பாலமுருகன் சன்னிதி அமையப்பெற்றுள்ளது. இதனால் இந்த ஆலயம் ‘சோமஸ்கந்தர் தலம்’ என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் சஷ்டியப்த பூர்த்தி (60 வயது கடந்தவர் களுக்கும்), சதாபிஷேகம் (80 வயது கடந்தவர்களுக்கும்) திருமணம் நடைபெறுவது மிகச்சிறப்பு வாய்ந்ததாகும்.

இக்கோவிலில் சுவாமி, சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். இத்தல இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகப் பாலை வாங்கி சாப்பிட்டால், தீராத நோய்கள் கூட தீரும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த ஆலயத்தில் சித்திரைப் பெருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூர வளைகாப்பு விழா, நவராத்திரி விழா, கந்த சஷ்டி திருவிழா, திருவாதிரை, மகா சிவராத்திரி விழா ஆகியவை முக்கிய திரு விழாக்களாகும். இங்கு நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

கோவில்பட்டியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts