ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்

தேவகியும், கம்சனும் சகோதர சகோதரிகள். தனது தங்கை தேவகிக்கும், வாசுதேவருக்கும் பிறக்கும் 8வது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நிகழும் என்று வானத்தில் இருந்து ஒரு குரல் கூற, அதனால் அச்சமுற்ற கம்சன், தேவகியை கொல்ல முயன்ற போது அதனை தடுத்த வசுதேவர் தனக்கு பிறக்கும் பிள்ளைகளை அவனிடமே ஒப்படைப்பதாக வாக்களித்தார். அதன்படி சிறையில் அடைத்து அவர்களை கண்காணித்த கம்சன், தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான். ஏழாவதாக கருவுற்றதும், திருமால், மாயை என்ற பெண்ணைப் படைத்து, “தேவகியின் வயிற்றிலுள்ள ஏழாவது சிசுவை, வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியின் வயிற்றில் சேர்த்து விடு. நீ, நந்தகோபனின் மனைவி யசோதையின் வயிற்றில் கருவாக இருக்க வேண்டும்!" என்றார்.

அதன்படியே, மாயை அவ்வாறு செய்ய, தேவகிக்கு ஏழாவது கர்ப்பம் கலைந்துவிட்டதாக பேச்சு எழுந்தது; கம்சனும் நம்பி விட்டான். அந்தப் பிள்ளை ரோகிணியின் வயிற்றில் பிறந்தது. அவனே பலராமன். தேவகி எட்டாவதாக கருவுற, திருமால் அவள் வயிற்றில் கருவானார். ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று அவளுக்கு கிருஷ்ணர் பிறந்தார். தன்னை நந்தகோபன் மனைவி யசோதையிடம் விட்டுவிட்டு, அவளுக்குப் பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே எடுத்து வந்து கம்சனிடம் ஒப்படைக்கும்படி பகவானே அருள்வாக்களித்தார்.

அதன்படி வசுதேவர் கோகுலத்தில் வசித்த யசோதையின் அருகில் தன் குழந்தை கிருஷ்ணனை கிடத்திவிட்டு, அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை எடுத்து வந்துவிட்டார். மயக்க நிலையில் இருந்த யசோதைக்கு இது தெரியாது. அந்தப் பெண் குழந்தையைக் கொல்ல கம்சன் வந்தான். அது வானில் எழுந்து, எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, “துர்க்கையான என்னை, உன்னால் கொல்ல முடியாது. உன்னைக் கொல்லக்கூடியவன் ஏற்கனவே கோகுலத்தில் பிறந்து விட்டான்!" என்று சொல்லி மறைந்தது.

சகடா சூரவதம்

குழந்தை கிருஷ்ணர் சற்று வளர்ந்த பின், குப்பிறப்படுக்கத் துவங்கினார். மற்றொரு விழாவை யசோதாவும் நந்தமகாராஜாவும் கொண்டாடினார்கள், அது கிருஷ்ணரின் முதலாவது பிறந்தநாள் விழாவாகும். அவர்கள் கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி விழா, இன்றும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அவ்விழாவுக்கு பெருந்திரளானவர்கள் வந்து விழாவில் குதூகலமாக கலந்துகொண்டனர். நேர்த்தியான வாத்தியக்குழு ஒன்று இசை பொழிய, கூடியிருந்த மக்கள் அதை ரசித்தனர். கற்றறிந்த பண்டிதர்கள் எல்லோரும் விழாவுக்கு அழைக்கப் பட்டிருந்தனர். பிராமணர்களான அவர்கள், கிருஷ்ணரின் நன்மை கருதி வேத பாராயணம் செய்தார்கள். யசோதை, நீராட்டப்பட்டு, அழகிய ஆடைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த குழந்தை கிருஷ்ணரை மடியில் வைத்துக் கொண்டிருக்கும்போது, குழந்தை தூங்குவதுபோல் தோன்றியதால், அன்னை யசோதை அவரைப் படுக்கையில் கிடத்தினாள்.

உறவினர்களையும் நண்பர்களையும் அந்த சுபவேளையில் வரவேற்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் யசோதை, குழந்தைக்கு பாலூட்ட மறந்து போனாள். எனவே, அவர் பசித்திருந்ததால் அழத் தொடங்கினார். அங்கே ஏற்பட்டிருந்த பற்பல ஓசைகளின் காரணமாக குழந்தை அழுதது, யசோதையின் காதில் விழவில்லை. பசியால் வருந்திய குழந்தை கோபமுற்று, எந்த சாதாரண குழந்தையும் செய்வதுபோல் கால்களைத் தூக்கி உதைக்கத் தொடங்கினார். குழந்தை கிருஷ்ணர் ஒரு சகட வண்டியின் கீழ் படுக்க வைக்கப்பட்டிருந்ததால், அவர் கால்களை உதைத்தபோது வண்டியின் சக்கரத்தில் பட்டு அது பல துண்டுகளாக நொறுங்கியது. அந்த சகடமானது ஒரு அரக்கன். கம்சனால் ஸ்ரீ கிருஷ்ணரைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டவன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிறு கால்களால் உதைக்கப்பட்டதும் அரக்கன் மாண்டு விழுந்தான். ஓசை கேட்டு வந்த யசோதை, குழந்தை கிருஷ்ணரை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு பிராமணர்களை அழைத்து, கொடிய தேவதைகளால் குழந்தைக்கு தீங்கு ஏற்படாமலிருக்க, வேத மந்திரங்களை ஓதும்படி கேட்டுக்கொண்டாள்.

குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் தன் திருவாயில் பிரமாண்டங்களைக் காண்பித்தல்

பலராமரும் கிருஷ்ணரும் குழந்தைகளாக இருந்தபோது, ஒருநாள் தம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லாச் சிறுவர்களும் ஒன்றுகூடி அன்னை யசோதையிடம் வந்து, கிருஷ்ணர் மண்ணைத் திண்றுவிட்டதாக புகார் செய்தனர். இதைக்கேட்ட யசோதை, கிருஷ்ணரது வாயைத் திறக்குமாறு கூறினாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரின் அன்னையான யசோதை அவ்வாறு பணித்தவுடன், அவர் ஒரு சாதாரண சிறுவன் செய்வதுபோல் தன் திருவாயைத் திறந்தார்.

அப்போது அன்னை யசோதை, தன் மகனின் திருவாயினுள் படைப்பின் முழுச்சிறப்பையும் கண்டாள். எல்லா திசைகளிலும் விரிந்திருந்த விண்வெளி, மலைகள், தீவுகள், சமுத்திரங்கள், கிரகங்கள், காற்று, நெருப்பு, சந்திரன், நட்சத்திரங்கள், முழுப் படைப்பின் பல்வேறான வடிவங்கங்கள் மற்றும் பிரபஞ்சப் படைப்புக்குத் தேவையான எல்லாம் தன் குழந்தையின் வாயினுள் இருப்பதைக் கண்டாள். அத்துடன் யசோதை கிருஷ்ணரைத் தன் மடியில் வைத்துக்கொண்டு அவருக்குப் பாலூட்டுவதையும் அந்த வாயினுள் கண்டு வியந்தாள். பகவானுடைய கிருபையால் மீண்டும் பழைய நிலையை அடைந்து தன் அன்புக் குழந்தையை தழுவிக்கொண்டாள். நளகூவரன் மற்றும் மணிக்கிரீவன் சாப விமோசனம்

வெண்ணெய் திருடி, தயிர் பானையை உடைத்த கண்ணனை, தாய் யசோதை உரலில் கட்டினாள். மகனைக் கட்டிப் போட்டுவிட்டு அன்னை யசோதை வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். அவ்வாறு மர உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், தன் முன் இரண்டு அர்ஜுன மரங்கள் நிற்பதைக் கவனித்தார். இந்த இரண்டு அர்ஜுன மரங்களும் பிரபலமான தேவர்களான நளகூவரனும் மணிக்கிரீவனும், தேவர்களின் பொக்கிஷதாரனும் சிவபெருமானின் பெரும் பக்தனுமான குவேரனின் இரு மகன்கள் ஆவார்கள்.


குவேரனின் இவ்விரு மைந்தர்களும் மது, மாது விடயங்களில் நாடியிருந்தனர். ஒரு முறை நாரதர் முன் இவ்விருவரும் இழி நிலையிலிருந்ததால் அவர்கள் இருவர் மீதும் கருணை கொண்டு, அவர்கள் நற்கதி அடைய வேண்டும் என்பதற்காக அவ்விருவரும் மரங்களாக, தேவர்களின் காலக் கணக்கின்படி நூறு ஆண்டுகளுக்கு இருந்து, பின்னர் முழுமுதற் கடவுளை நேருக்கு நேர் கண்டு நற்பேறு அடைய வேண்டுமென்று நாரதரால் சபிக்கப்பட்டிருந்தார்கள்.


அந்த இரு தேவர்களும் இரட்டை அர்ஜுன மரங்கள் என்று பெயர் பெற்ற மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளாந்து, ஸ்ரீ கிருஷ்ணரை நேரில் காணும் நல் வாய்ப்பைப் பெற்றார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டதும் அதை பலமாக இழுத்தார். அப்போது மரங்கள் வேரோடு சாய்ந்ததும் அவைகளில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரை பலமுறை வலம் வந்து, சிரம் தாழ்த்தி வணங்கி துதித்து மறைந்தனர்.


சத்தத்தைக் கேட்டு நந்த மகாராஜாவும் கோகுலவாசிகளும் ஓடி வந்தனர். கிருஷ்ணர் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், தேவர்கள் தோன்றியதை கூறினார்கள். நந்தகோபர், கிருஷ்ணரை உரலில் இருந்து விடுவித்து மார்புடன் அணைத்துக் கொண்டார்.


பழக்காரிக்கு அனுக்கிரகம்

ஒரு நாள் ஒரு பழக்காரி நந்தகோபரின் வாயிலுக்கு வந்தாள். "பழம் வேண்டியவர்கள் வந்து வாங்கிக் கொள்ளலாம்" என்று அவள் கூவியதைக் கேட்ட குழந்தை கிருஷ்ணர், சிறிது தானியத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பழம் வாங்க சென்றார். அக்காலத்தில், கொடுக்கல் வாங்கல் பண்டமாற்று முறையில் நடைபெற்றது. அவரின் தாய் தந்தையர் அவ்வாறு பண்டமாற்றம் செய்ததைக் கவனித்திருந்து அவரும் அப்படியே செய்ய முற்பட்டார். ஆனால் அவரின் கைகள் மிகவும் சிறியவையாக இருந்ததால், தானியங்கள் கீழே சிதறின. இதைக் கண்ட பழக்காரி, குழந்தை கிருஷ்ணரின் அபார அழகில் மனதைப் பறிகொடுத்து, அவர் கையிலிருந்த தானியத்தின் அளவைப் பற்றிக் கவலைப்படாமல் பழங்களைக் கை நிறையக் குழந்தை கிருஷ்ணருக்கு கொடுத்தாள்.

அதே சமயத்தில் அப்பழக்காரியின் கூடை முழுவதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால், ஆபரணங்களாலும், பொன்னாலும் மணியாலும் நிறைந்து விட்டது. உண்மையான அன்பும் பாசமும் நிறைந்த, உள்ளத்தால் கொடுக்கப்பட்ட பழங்களுக்காக பகவான் அவளுக்கு செல்வம் கொடுத்து அனுக்கிரகித்தார்.

வத்ஸாசுர வதம்

ஒரு நாள், கிருஷ்ணரும் பலராமரும் யமுனை நதிக்கரையில் விளையாடிக் கொண்டு இருந்தபோது, வத்ஸாசுரன் என்ற பெயருடைய அரக்கன் ஒரு கன்றின் வடிவை மேற்கொண்டு இரு குழந்தைகளையும் கொல்லும் நோக்கத்தோடு அங்கு வந்தான். கன்றின் வடிவை எடுத்திருந்ததால் அவன் மற்றக் கன்றுகளுடன் சேர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர் இதைக் கவனித்து விட்டார். உடனே அரக்கன் வந்திருந்ததை பலராமருக்குத் தெரிவித்தார்.

பின்னர் இரு சகோதரர்களும் ஓசை படாமல் அரக்கனை அணுகினார்கள். கிருஷ்ணர், அரக்கனான கன்றின் இரு பின் கால்களையும் வாலையும் பிடித்து, சுழற்றி அடித்து, ஒரு மரத்தின் மேல் வீசி எறிந்தார். அரக்கன் உயிரிழந்து மரத்தின் உச்சியிலிருந்து தரையில் விழுந்தான்.அரக்கன் தரையில் இறந்து கிடந்ததைக் கண்ட கிருஷ்ணரின் தோழர்கள் அவரைப் பாராட்டினார்கள். தேவர்கள் மனமகிழ்ந்து ஆகாயத்திலிருந்து மலர் மாரி பொழிந்தனர். இவ்வாறு, பிரபஞ்சப் படைப்பின் பாதுகாவலர்களான கிருஷ்ணரும் பலராமரும் ஒவ்வொரு நாட் காலையிலும் கன்றுகளை அழைத்துச் சென்று, விருந்தாவனத்தின் இடைச் சிறுவர்களாக, பால்ய லீலைகளில் களித்திருந்தனர்.

பகாசுர வதம்

ஆயர் குலச் சிறுவர்கள் எல்லோரும் தினமும் கன்றுகளுக்குத் தண்ணீர் காட்டுவதற்காக அவைகளை யமுனை நதிக்கரைக்கு அழைத்துச் செல்வது
வழக்கம். கன்றுகள் யமுனை நதியில் தண்ணீர் குடிக்கும்போது சிறுவர்களும் நீர் அருந்துவார்கள். அவ்வாறு ஒரு நாள் நீர் அருந்திவிட்டு நதிக்கரையில் அவர்கள் அமர்ந்திருந்தபோது, உருவத்தில் வாத்தைப் போலவும், ஆனால் மலைபோல் பெரியதுமான ஒரு மிருகத்தைக் கண்டனர். அதன் அசாதாரன வடிவத்தைக் கண்டு அவர்கள் பயந்து போனார்கள். கம்சனின் நண்பனான அம்மிருகத்தின் பெயர் பகாசுரன் ஆகும்.

அவன் திடீரென்று கிருஷ்ணரைத் தன் கூரிய அலகுகளினால் தாக்கி, வேகமாக விழுங்கினான். கிருஷ்ணரை அரக்கன் விழுங்குவதைக் கண்ட பலராமரும் அவரது தோழர்களும் என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்துவிட்டார்கள். ஆனால் பகாசுர அரக்கன் ஸ்ரீ கிருஷ்ணரை விழுங்கியபோது தொண்டையில் ஏதோ எரிவது போல் உணர்ந்தான். பகவான் ஸ்ரீ கிருஷ்ஷரின் ஒளிமிகு சக்தியினாலேயே அரக்கனின் தொண்டையில் அவ்வாறு எரிச்சல் ஏற்பட்டது.

உடனே அரக்கன் கிருஷ்ணரை வெளியில் உமிழ்ந்துவிட்டு, தன் கூரிய அலகுகளால் அவரைக் குத்திக் கொல்ல முயன்றான். அப்போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அந்த மாபெரும் பறவையின் அலகுகளைப் பிடித்து, ஒரு குழந்தை புல்லைப் பிளப்பதுபோல், எளிதாக, தன் கோபால நண்பர்களின் முன்னிலையில் அரக்கனின் வாயைப் பிளந்தார். ஆகாயத்தில் இருந்து சுவர்க்க வாசிகளான கந்தர்வர்கள், சாமேலி போன்ற நறுமணம் மிக்க மலர்களைத் தூவி, குழந்தை கிருஷ்ணரைப் பாராட்டினார்கள். மலர் மாரியுடன் தாரைகளும் தப்பட்டைகளும், சங்கங்களும் ஒலித்தன.

அகாசுர வதம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம் தோழர்களுடன் பால்ய லீலைகளில் திளைத்திருந்த போது, அகாசுரன் என்ற அரக்கன் மிகவும் பொறுமை அற்று இருந்தான். கிருஷ்ணர் விளையாடியதை அவனால் பொறுத்துக் கொள்ள
முடியவில்லை. எனவே, அந்தச் சிறுவர்கள் எல்லோரையும் கொல்லும் எண்ணத்துடன், அவன் அவர்களின் முன்பு தோன்றினான். வானுலகத்தினர் எல்லோரும் பயப்படும் அளவிற்கு அவன் பயங்கரமான தோற்றம் உடையவனாக இருந்தான். அகாசுரன் என்ற அந்த அரக்கன் பூதகி மற்றும் பகாசுரனின் சகோதரன் ஆவான். கிருஷ்ணர், தன் சகோதரனையும் சகோதரியையும் கொன்றதற்கு பழி வாங்குவற்காக, கிருஷ்ணரையும் அவரது நண்பர்களையும் கன்றுகளையும் கொல்ல வேண்டுமென்று வந்தான். அவன் கம்சனின் நண்பனும் ஆவான்.

உடனே அசுரன், மஹிமா எனும் யோக சக்தியின் உதவியால் தன் உருவத்தை எட்டு மைல் அளவுக்குப் பெரிதாக்கிக் கொண்டு, மிகவும் பெரிய உடலை உடைய பாம்பின் வடிவத்தை எடுத்தான். அந்த அதிசய உடலை எடுத்தவுடன், தனது வாயை ஒரு பெரிய மலைக்குகையின் அளவிற்குத் திறந்தான். ஒரே சமயத்தில் கிருஷ்ணரையும் பலராமரையும் மற்றைய சிறுவர்களையும் சேர்த்து விழுங்கத் திட்டமிட்டான். மிப்பெரிய பாம்பின் உருவத்தை மேற்கொண்டிருந்த அசுரன், தன் உதடுகளை தரையில் இருந்து ஆகாயம் வரை விரியும் படியாக வாயைப் பிளந்தான். அவனின் கீழ் உதடு தரையையும் மேல் உதடு வானத்தையும் தொட்டன. வாய் ஒரு பெரிய மலைக் குகையைப் போலவும் பற்கள் மலை உச்சியைப் போலவும், நாக்கு பெரியதொரு ரத வீதியைப் போலவும் காணப்பட்டன. புயல்காற்றைப் போல மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். கண்கள் நெருப்பைக் கக்கின. சிறுவர்கள், முதலில் அந்த அசுரனை பெரியதொரு சிலை என்று நினைத்தனர். நன்றாக கவனித்த போது, ஒரு பெரிய பாம்பு வாயைப் பிளந்து கொண்டு படுத்திருக்கிறது என முடிவெடுத்தார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தங்களை எப்பொழுதும் காப்பாற்றுவார் என்ற தைரியத்தில் கிருஷ்ணரின் நண்பர்கள் விளையாட்டாக அகாசுரன் என்னும் பாம்பு அரக்கனின் வாயில் பயமின்றி நுழைந்தனர். பின்னர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அசுரனைக் கொன்று கோபாலச் சிறுவர்களையும் கன்றுகளையும் காப்பாற்று வதற்காக தானும் அசுரனின் வாயில் புகுந்தார். அசுரன், கிருஷ்ணரையும் அவரது நண்பர்களையும் நொறுக்க முயற்சித்த போது, கிருஷ்ணர் உடனே அரக்கனின் தொண்டைக்குள் தன் உருவத்தைப் பெரிதாக்கினார்.அசுரன் மலை அளவிலான உடலைக் கொண்டிருந்த போதிலும் பெரிதாகி வரும் கிருஷ்னரின் உருவத்தால் அவனுக்கு மூச்சு அடைத்தது. கண்கள் பிதுங்கின. உயிர் மூச்சு எவ்வழியிலும் வெளி வரமுடியாமல் போனதால் அவனது தலை வெடித்து உயிர் மூச்சு வெளிப்பட்டது. அசுரன் இறந்து வீழ்ந்தான். ஸ்ரீ கிருஷ்ணர் தமது திவ்யமான பார்வையை செலுத்தியதும் அவரது நண்பர்களும் கன்றுகளும் உணர்வு பெற்று, அரக்கனின் வாயில் இருந்து வெளி வந்தனர். தேவர்கள் பேருவகை பூத்து முழுமுதற் கடவுளாகிய கிருஷ்ணரின் மேல் மலர்மாரி பொழிந்து அவரை வணங்கினார்கள். வானுலக வாசிகள் மகிழ்ச்சியால் நடனமாடினார்கள். பிராமணர்கள் வேதம் ஓதினார்கள்.

சிறுவர்களையும் கன்றுகளையும் பிரம்மா திருடுதல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அகாசுரனை வதம் செய்ததும் தேவர்கள் சந்தோசத்தால் எழுப்பிய மங்களகரமான இனிய ஒலி அதிர்வுகள், உயர்நிலை கிரகங்களை எட்டியபோது, அவற்றைக் கேட்ட பிரம்மா, என்ன நடந்தது என்று
பார்ப்பதற்காக கீழே இறங்கி வந்தார். அசுரன் கொல்லப்பட்டு கிடப்பதைக் கண்டு, முழுமுதற் கடவுளின் அசாதாரண மற்றும் மகிமை மிக்க லீலைகளைக் கண்டு வியந்தார். அகாசுர வதம் நடைபெற்ற போது கிருஷ்ணரும் அவருடைய நண்பர்களும் ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களாக இருந்தனர்.

யமுனை நதிக்கரையில் கன்றுகள் புல் மேய, கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் மதிய உணவை உண்பதற்காக, கிருஷ்ணர் நடுவில் அமர, அவரைச் சுற்றி மற்றவர்கள் உட்கார்ந்தனர். அனைவரும் உணவு உண்பதற்கு ஆரம்பிக்கும் போது அருகாமையில் புல் மேய்ந்து கொண்டிருந்த கன்றுகள் புதிய புல்லைத் தேடி காட்டுக்குள் வெகு தூரம் சென்று விட்டன. அப்போது கிருஷ்ணர், தன் நண்பர்கள் சாப்பிடுவதை விட்டு விட்டு கன்றுகளைத் தேடப் போவதை விரும்பவில்லை. எனவே அவர், தன் நண்பர்களைத் தொடர்ந்து சாப்பிடும் படியாகவும் தான் கன்றுகளைத் தேடிப் போவதாகவும் கூறிச் சென்றார்.

அகாசுரன் கொல்லப்பட்ட நிகழ்ச்சியை தேவர்கள் பெரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து பிறந்தவரான பிரம்மாவும் அந்த சம்பவத்தை பார்க்க வந்திருந் பிரம்மா, கிருஷ்ணரின் மகிமை மிக்க லீலைகளை மேலும் காணும் விருப்பத்துடன் கன்றுகள் எல்லாவற்றையும் திருடி வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று விட்டார். கிருஷ்ணர் எவ்வளவு தேடியும் கன்றுகளைக் கண்டு பிடிக்க முடியவல்லை. அவர் நீண்ட தூரம் சென்றதால் அவரது நண்பாகளுடனான தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. ஆனால் அவர் முழுமுதற் கடவுளான படியால் சிறுவர்களையும் கன்றுகளையும் பிரம்மா திருடி இருந்ததை அறிந்தார். பிரம்மா, சிறுவர்களையும் கன்றுகளையும் கொண்டு போய் விட்டதால், தான் மட்டும் எப்படி விருந்தாவனம் செல்வது? தாய்மார்கள் கவலைப் படுவார்களே என கிருஷ்ணர் நினைத்தார்.

தன் நண்பர்களின் தாய்மார்களை திருப்திப் படுத்துவதற்காகவும் முழுமுதற் கடவுளின் சக்தியை பிரம்மா உணரும்படி செய்வதற்காகவும் கிருஷ்ணர், உடனடியாகத் தன்னை இடைச் சிறுவர்களாகவும் கன்றுகளாகவும் தன்னை விரிவு படுத்திக்கொண்டார். அந்த சிறுவர்களது தோற்றம், நடை, உடை, பாவனை போன்று மாற்றிக் கொண்டார். இந்த விஷயங்கள் கிராம வாசிகளுக்கு தெரியாது. விருந்தாவனத்தை அடைந்த பிறகு, கன்றுகள் எல்லாம் தத்தம் கொட்டிலை அடைந்தன. சுpறுவர்களும் தத்தமது தாய்மார்களிடம் வீட்டிற்குச் சென்றார்கள். சிறுவர்கள் எல்லோரும் தாய், தந்தையருடன் வழக்கம் போலவே பழகினார்கள். அவர்களிடம் எந்தவித வேறுபாடுகளும் காண முடியவில்லை. ஒரு வருடமாக கிருஷ்ணர் இவ்வாறு கன்றுகளாகவும் ஆயர்குலச் சிறுவர்களாகவும் வியாபித்திருந்து மேய்ச்சல் நிலங்களுக்குச் சென்று வந்தார்

பிரம்மாவின் ஒரு கணம், நமது கணக்குப்படி ஒரு வருடம். பிரம்மா தனது ஒரு கணத்தின் பின், தாம் சிறுவர்களையும், கன்றுகளையும் திருடியதால் ஏற்பட்ட குழப்பத்தை வேடிக்கை பார்ப்பதற்காக திரும்பி வந்தார். தான் முதலில் கண்ட படியே கன்றுகளும், சிறுவர்களும் கிருஷ்ணரோடு விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார். உண்மையில் அவர், அவைகளை எடுத்துக் கொண்டு போய், தன் மந்திர சக்தியால் உறங்க வைத்திருந்தார். பிரம்மாவுக்கு இது பெரிய குழப்பமாக இருந்தது.

அங்கிருந்த பசுக்களும் கன்றுகளும் சிறுவர்களும் உண்மையானவை அல்ல என்பதை பிரம்மாவுக்கு உணர்த்துவதற்காக கிருஷ்ணர், அவற்றை நீல நிற மேனியோடு சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை நான்கு கைகளில் வைத்திருக்கும் விஷ்ணு வடிவங்களாக மாறுபடச் செய்தார். பிரம்மா, முழுமுதற்கடவுளின் அற்புதமான சக்தியைக் கண்டு வியந்தார். உடனேயே பிரம்மா தம் வாகனமான ஹம்ஸத்தில் இருந்து இறங்கி வந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, தனது பிரார்த்தனையை செலுத்தி விட்டு கிருஷ்ணரை மூன்று முறை வலம் வந்து, பிரம்மலோகம் சென்றார்.

பிரம்மா சென்றவுடன் ஸ்ரீ கிருஷ்ணர், கன்றுகளும் சிறுவர்களும் மறைந்த அன்று எப்படி இருந்தாரோ, அதே தோற்றத்தை உடன் மேற்கொண்டார். யமுனை நதிக்கரையில் உணவருந்திக் கொண்டிருந்த அவரது நண்பர்களை, அவர் விட்டுச் சென்று சரியாக ஒரு வருடத்தின் பின்பு அங்கு வந்த போதிலும் அவர் ஒரு நிமிடத்தில் திரும்பி விட்டதாக கிருஷ்ணரது நண்பர்கள் நினைத்தார்கள். பின்பு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.

உணவை முடித்து விட்டு கிருஷ்ணரும் நண்பர்களும் கன்றுகளுடன் தம் வீடுகளுக்கு திரும்பினார்கள். போகும் வழியில் அகாசுரன் பெரும் பாம்பின் வடிவில் இறந்து கிடந்ததைப் பார்த்து மகிழ்ந்தார்கள். கிருஷ்ணரின் மகிமைகளைப் பாடினார்கள். சிறுவர்கள், தாம் பயங்கரமான பாம்பின் வாயிலிருந்து தப்பியதை விருந்தாவன வாசிகள் அனைவருக்கும் கூறினார்கள். உண்மையில் அகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நிகழ்வு, பிரம்மா, சிறுவர்களையும் கன்றுகளையும் திருடியதால் ஒரு வருடத்திற்குப் பின்பே அனைவருக்கும் தெரிய வந்தது.

தேனுகாசுர வதம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரினதும் பலராமரினதும் நண்பர்களான, ஸ்ரீ தாமா, ஸூபலா, ஸ்தோக கிருஷ்ணா ஆகியோர் கிருஷ்ணரையும் பலராமரையும் பார்த்துக் கூறினார்கள்:அன்பான பலராமரே, நீர் மிகுந்த சக்தி வாய்ந்தவர். உமது கைகள் மிகுந்த பலமுடையவை. அன்பான கிருஷ்ணா, தொல்லை தரும் பல வகையான அரக்கர்களைக் கொல்வதில் நீர் வல்லவர். விருந்தாவனத்திற்கு அருகில் தாளவனம் எனும் ஒரு பெரிய காடு உள்ளது. அந்தக் காட்டில் பல ஈச்ச மரங்கள் உள்ளன. அவற்றில் பழங்கள் மிகுதியாக உள்ளன. ஆனால் பெரிய அரக்கனான தேனுகாசுரன் அங்கு இருப்பதால் அங்கு போவது மிகவும் கடினம். அந்த அசுரனும் அவனது நண்பர்களும் கழுதையின் உருவத்தில் அங்கு இருக்கிறார்கள். அதனால் பழங்களை பறிக்க யாரும் அந்த மரங்களை அணுக முடியாது. உங்களைத் தவிர வேறுயாரும் பயமின்றி அங்கு செல்ல முடியாது. அந்த அசுரர்களைக் கொல்லக் கூடியவர்கள் உங்களைத் தவிர யாரும் இல்லை. அங்கு மிருகங்கள் கூடப் போவதில்லை. பறவைகள் அங்கு உறங்குவதில்லை. அவையெல்லாம் அங்கிருந்து சென்று விட்டன. அந்தப் பழங்களை பறித்து உண்டு அவற்றின் சுவையை அனுபவித்தவர்கள் யாரும் இல்லை. நாம் எல்லோரும் அங்கு சென்று பழங்களை உண்டு களிக்கலாம். என்று கிருஷ்ணரினதும் பலராமரினதும் நண்பர்கள் கூறினார்கள்.

தம் நெருங்கிய நண்பர்கள் புன்னகையுடன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்ததைக் கேட்ட பலராமரும் கிருஷ்ணரும் அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக, எல்லோரும் காட்டை நோக்கிப் புறப்பட்டர்கள். தாளவனத்தில் நுளைந்ததும் பலராமர் யானையின் பலம் கொண்ட தம் கைகளால் மரங்களைப் பிடித்து உலுக்கினார். அவர் மரங்களை அசைத்த போது பழுத்த பழங்கள் கீழே விழுந்தன. அங்கு கழுதையின் உருவத்தில் இருந்த தேனுகாசுரன், பழங்கள் விழுந்த சத்தத்தைக் கேட்டு வெகு வேகமாக அங்கு வந்தான். அவன் அங்கு வந்த வேகத்தில் ஏற்பட்ட அதிர்வால் நிலம் முழுவதும் பூகம்பம் ஏற்பட்டது போல் நடுங்கி, மரங்களெல்லாம் ஆட்டம் கண்டன.

அசுரன் முதலில் பலராமரின் முன்பு வந்து அவரது மார்பில் தன் பின் கால்கள் படும்படியாக உதைத்தான். முதலில் பலராமர் எதுவும் கூறவில்லை. கோபம் கொண்ட அசுரன் மிகுந்த பலம் கொண்டு மேலும் வேகத்தோடு மோதினான். பலராமர் தன் ஒரு கையால் அவனின் பின் கால்களைப் பிடித்து, மூன்று முறை சுழற்றி, அக்கழுதையை ஈச்ச மர உச்சியின் மேல் எறிந்த போது அவன் உயிரிழந்தான். அவனின் பாரத்தைத் தாங்க முடியாமல் அந்த மரம் மற்ற மரங்களின் மேல் சரிந்து பல மரங்கள் கீழே விழுந்தன. கிரகங்களை எல்லாம் தம் கோடிக் கணக்கான தலைகளில் தாங்கி நிற்கும் பலசாலியான அனந்த சேஷன் எனப்படும் முழுமுதற் கடவுளாகிய பலராமர் இவ்வாறு பலப் பிரதர்சனம் செய்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. இரண்டு நூல் சரடுகள் நெய்யப்பட்ட துணியைத் தாங்கி நிற்பது போல் பிரபஞ்சத் தோற்றம் முழுவதையும் அவர் தாங்கி நிற்கிறார்.

அசுரன் மரங்களில் வீசி எறியப்பட்ட பின்பு, தேனுகாசுரனின் நண்பர்கள் ஒன்று கூடி பலராமரையும் கிருஷ்ணரையும் மிகுந்த பலத்துடன் தாக்கினார்கள். ஆனால் பலராமரும் கிருஷ்ணரும் முன்பு போலவே கழுதைகளின் பின் கால்களைப் பிடித்து சுழற்றி ஈச்ச மரங்களின் மேல் எறிந்து அவற்றைக் கொன்றார்கள். கழுதைகளின் சடலங்கள் ஆங்காங்கே விழுந்து கிடந்தது வினோதமாக காட்சியளித்தது. பல நிறங்களிலான மேகங்கள் மரங்களில் தங்கியிருப்பது போல் தோன்றியது. இந்த மகத்தான சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட தேவர்கள், மேல் நிலைக் கிரகங்களில் இருந்து கிருஷ்ணரின் மீதும் பலராமரின் மீதும் மலர் மாரி பொழிந்து துதி பாடினார்கள். துந்துபிகள் முழங்கின. தேனுகாசுரன் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மக்கள் தாளவனத்துக்கு வந்து பழங்களைச் சேகரிக்கத் தொடங்கினார்கள். மிருகங்கள் பயமின்றி வந்து அங்கிருந்த நேர்த்தியான புல்லை மேய்ந்தன.

காளிங்கனின் மீது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நடனமாடுதல்

யமுனை நதியின் அடியில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அந்த ஏரியில் காளிங்கன் என்ற மிகப் பெரிய விஷப் பாம்பு ஒன்று வசித்து வந்தது. அதன் விஷம் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் தூய்மை கெட்டு, நச்சுக் கலந்திருந்தது. அங்கு ஒரு பறவை பறந்தால் அது உடனே மடிந்து கீழே விழும். யமுனையில் இருந்து வெளிவந்த நச்சு வாயுவின் பாதிப்பால் யமுனைக் கரையிலிருந்த மரங்களும் புற்களும் பட்டுப் போய்விட்டது. அப்பெரிய பாம்பின் விஷத்தால் ஏற்பட்ட கேட்டைக் கிருஷ்ணர் கவனித்தார். விருந்தாவனத்தை அடுத்து ஓடிய நதி முழுவதும் உயிருக்கு அபாயம் விளைவிக்கக் கூடியதாக இருந்தது.

உலகில் கேடு விளைவிக்கும் சக்திகளைக் களைவதற்கென்றே அவதரித்துள்ள ஸ்ரீகிருஷ்ணர், யமுனை நதியின் கரையிலிருந்த ஒரு பெரிய கடம்ப மரத்தின் மீது ஏறினார். கடம்பம் எனும் வட்டமான மஞ்சள் நிற மலர், பொதுவாக விருந்தாவனப் பகுதியில் மட்டும் காணப்படும் ஒரு மலர் வகை. மரத்தின் உச்சியில் ஏறியபின் அவர் தன் அரைக் கச்சையை இறுக்கிக் கொண்டு, மல்யுத்தம் செய்பவனைப் போல் கைகளை ஆட்டிக் கொண்டு நச்சு மிகுந்த அந்த ஏரியினுள் குதித்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஏறிய அந்தக் கடம்ப மரம் ஒன்று மட்டுமே அப்பகுதியில் பட்டுப் போகாமல் தப்பியிருக்கிறது. இந்தியாவின் விருந்தாவனத்துக்குச் செல்பவர்கள் அந்த கடம்ப மரம் 5000 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் இருப்பதைக் காணலாம். ஸ்ரீகிருஷ்ணரின் கால் பட்டதும் மரம் உடனே உயிர் பெற்றதென்று சில உரையாசிரியர்கள் கூறுகிறார்கள். சில புராணங்களில், இம்மரத்தில் கிருஷ்ணர் வருங்காலத்தில் ஏறுவாரென்று அறிந்திருந்த கருடர், அது பட்டுப் போகாமல் இருக்க அதன் மீது அமிர்தத்தைத் தெளித்திருந்தார் என்று கூறுகின்றன.

கிருஷ்ணர் நதியில் குதித்தபோது நீர் கரை புரண்டு ஓடியது. அதனால் எழுந்த பேரொலி, கரு நாகமான காளிங்கனின் காதில் விழுந்தது. தன் இருப்பிடத்தை யாரோ தாக்க வந்திருக்கிறார் என்பதை அது புரிந்து கொண்டு, கிருஷ்ணரின் முன் வந்தது. அழகிய முகத்தில் புன்னகையுடன், அவர் மிகுந்த பலத்துடன் யமுனை நதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் அதற்கு கோபம் வந்தது. தன் பலம் மிக்க உடம்பின் சுருள்களுக்கிடையே காளிங்கன், கிருஷ்ணரைப் பிடித்து அழுத்தியது. பாம்பின் பயங்கரமான பிடியில் தப்ப முடியாத வகையில் கிருஷ்ணர் அகப்பட்டுக் கொண்டிருந்ததை கண்டதும், அவரிடம் அன்பு கொண்டிருந்த ஆயர் குலச் சிறுவர்களும் மற்ற விருந்தாவன வாசிகளும் பயத்தால் அதிர்ந்து போனார்கள்.

அவர்களால் நதிக்கரையில் நின்று அழமுடிந்ததே தவிர, கிருஷ்ணருக்கு உதவும் வகையில் எதுவும் செய்ய முடியவில்லை. அன்னை யசோதை வந்தபோது, அவள் யமுனையில் குதிக்க விரும்பினாள். மற்றவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவள் மூர்ச்சையடைந்தாள். தம் உயிரைக் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்திருந்த நந்தகோபரும் மற்றவர்களும் நீரில் குதிக்க எண்ணினார்கள். ஆனால் பிரபு பலராமர் அவர்களைத் தடுத்தார். எவ்வித அபாயமும் இல்லையென்பது பலராமருக்குத் தெரியும்.

இரண்டு மணி நேரங்களுக்குக் கிருஷ்ணர் காளிங்கனின் பிடியில் ஒரு சாதாரணக் குழந்தையைப் போல் இருந்தார். ஆனால் தன் தாயும், தந்தையும் கோபியரும், சிறுவர்களும், பசுக்களும் கன்றுகளும் மற்ற கோகுல வாசிகளும் ~மரணத்தின்| தருவாயில் காப்பவரின்றி இருந்ததைக் கண்டதும் கிருஷ்ணர், தம்மை உடனே விடுவித்துக் கொண்டார். அவர் தம் உடலை விரிவடையச் செய்தார். பாம்பு அவரைக் கட்டிப் பிடிக்க சிரமப்பட்டது. அதனால் அதன் பிடி தளர்ந்து, கிருஷ்ணராகிய முழுமுதற் கடவுளைத் தன் பிடியிலிருந்து விடுவித்தது.

காளிங்கன் மிகுந்த கோபமடைந்து, தனது பெரிய படங்களை விரித்தது. மூக்குகளில் இருந்து நச்சுக் கலந்த மூச்சை வெளியிட்டது. அதன் கண்கள் நெருப்பாய் தகித்தது. வாயிலிருந்து அனல் வீசியது. கிருஷ்ணரைப் பார்த்தபடி அது சிறிது நேரம் அசையாமல் நின்றது. பிளவுபட்ட நாக்குகளால் உதடுகளை நக்கியபடி கண்களில் விஷம் பொங்க அவரைப் பார்த்தது. பாம்பின் மீது கருடன் பாய்வதுபோல, கிருஷ்ணர் அதன்மீது பாய்ந்தார். காளிங்கன் தன் விஷப் பற்களால் கிருஷ்ணரைக் கடிக்க முயன்றான். ஆனால் கிருஷ்ணர், அதன் தலைகளை அழுத்திப் பிடித்து அவற்றின் மேல் ஏறினார். பாம்பின் தலையில் இருந்த ரத்தினங்களின் ஒளியினால் பிரபுவின் பாதங்கள் சிவந்து காணப்பட்டன. பின்பு, கலைஞர்களுக்கு எல்லாம் ஆதி கலைஞரான ஸ்ரீகிருஷ்ணர், விஷப் பாம்பான காளிங்கனின் மீது நடனமாடினார். இதைக் கண்ட வாணவர்கள், பூச்சொரிந்து, மத்தளங்கள் முழக்கி, குழல்களை இசைத்து, துதிகளையும் பாடல்களையும் பாடினார்கள். இவ்வாறாக வானுலக வாசிகளான கந்தவர்கள், சித்தர்கள் மற்றும் தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

கிருஷ்ணர் தன் தலைகளில் நடனமாடியபோது, காளிங்கன் அவரைத் தன் மற்ற தலைகளால் கீழே தள்ள முயற்சித்தான். காளிங்கனுக்கு நூறு தலைகள் இருந்தன. ஆனால் கிருஷ்ணர் அவற்றை எல்லாம் கட்டுப்படுத்தி, தன் காலால் அதன் தலைகளில் அடித்தபோது, காளிங்கனால் அந்த அடிகளைத் தாங்கி கொள்ள முடியவில்லை. அது உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டு, தன்னில் இருந்த விஷத்தைக் கக்கியபோது அதன் பாவங்கள் குறையத் தொடங்கின. பன்பு அது, விஷத்துக்குப் பதிலாக இரத்தத்தை கக்கத் தொடங்கியது.

அப்போது, காளிங்கனின் மனைவிகளான நாகபத்தினிகள், கிருஷ்ணர் தம் கணவனை உதைத்து அடக்குவதைக் கண்டனர். அவர்கள் கிருஷ்ணரைச் சரண் அடைந்து, தம் கணவனான காளிங்கனை தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு பிரார்த்தித்தனர். கிருஷ்ணர் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று, காளிங்கனை நோக்கி, உடனே அந்த இடத்தை விட்டு தாமதிக்காமல்; மனைவி பிள்ளைகளுடன் சமுத்திரத்திற்குப் போய்விடுமாறும், யமுனையின் நீரை அசுத்தப் படுத்த வேண்டாமெனவும், பசுக்களும் சிறுவர்களும் அந்நீரைப் பருகுவதில் தடை ஏற்படக்கூடாதெனவும் கட்டளை இட்டார். காளிங்கனும் அவனது மனைவி பிள்ளைகளும் அந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் சென்றனர். அப்போது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நானும் என் நண்பர்களும் நீராடிய காளிங்க ஏரியில் ஒருவர் நீராடினாலும், ஒரு நாள் உபவாசமிருந்து அந்நீரால் மூதாதையருக்கு சிரார்த்தம் கொடுத்தாலும் அவரின் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்று கூறினார்.

காட்டுத் தீயை அணைத்தல்

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் காலிங்கன் மீது நடனமாடிவிட்டு யமுனை நதியில் இருந்து வெளி வந்தபோது இரவாகி விட்டதால் விருந்தாவன வாசிகளும், பசுக்களும், கன்றுகளும் மிகவும் களைப்படைந்து, யமுனை நதிக் கரையிலலேயே ஓய்வெடுத்துக் கொள்வதென்று தீர்மானித்தார்கள். இவ்வாறு அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் திடீரென்று காட்டில் நெருப்புப் பற்றிக் கொண்டது. விரைவில் விருந்தாவன வாசிகள் எல்லோரும் நெருப்புக்கு இரையாகி விடக்கூடுமென்ற அச்சம் ஏற்பட்டது.

நெருப்பின் உஷ்ணம் அவர்களைத் தகிக்கத் தொடங்கியதும் அவர்கள் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரிடம், அப்போது அவர் ஒரு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த போதும், சரணடைந்தார்கள். அவரிடம் அவர்கள் கூறினார்கள் அன்பான கிருஷ்ணா, முழுமுதற் கடவுளானவரே, பலத்தின் சிகரமான பலராமரே, கோரமான இந்த நெருப்பு எல்லாவற்றையும் அழிக்கக் கூடியது. அதிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள். உங்களைத் தவிர எங்களுக்கு வேறு புகலிடம் இல்லை. இந்த நாசகாரத் தீ எங்களை எல்லாம் விழுங்கி விடும். இவ்வாறு அவர்கள் கிருஷ்ணரின் பாதகமலங்களைத் தவிர வேறு புகலிடம் இல்லையென்று கூறி, அவரிடம் பிரார்த்தித்தார்கள்.

தம் ஊர்வாசிகளிடம் மிகுந்த கருணை கொண்ட கிருஷ்ணர், உடனே காட்டுத் தீ முழுவதையும் விழுங்கி, அவர்களைக் காப்பாற்றினார். இது கிருஷ்ணரால் முடியாத காரியமல்ல. ஏனெனில் அவர் வரம்பற்ற சக்தியை உடையவர். தாம் விரும்பிய எதையும் செய்ய வல்லவர். நாசகாரத் தீயை அணைத்த பின்னர் கிருஷ்ணர், நண்பர்களும், உறவினர்களும், பசுக்களும், எருதுகளும் புடைசூழ்ந்து அவரின் புகழ் பாடிவர, எப்போதும் பசுக்களால் நிறைந்திருந்த விருந்தாவனத்தை மீண்டும் அடைந்தார்.

பிரலம்பாசுர வதம்
ஒரு நாள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் பலராமரும் மற்றும் கோபாலச் சிறுவர்களும் விருந்தாவனத்தின் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பிரலம்பாசுரன் என்ற பெயருடைய அரக்கன் அவர்களிடையே புகுந்து பலராமரையும் கிருஷ்ணரையும் கொல்ல விளைந்தான். கிருஷ்ணர் அப்போது ஆயர்குலச் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்தார் என்றாலும், முழுமுதற் கடவுளாகிய அவர் முக் காலங்களையும் உணர்ந்தவர் அல்லவா? எனவே, பிரலம்பாசுரன் அவர்களிடையே வந்து புகுந்ததும் அவனை எப்படிக் கொல்வதென்று முடிவெடுத்தார். வெளிப்படையாக, ஒரு நண்பனைப் போல் வரவேற்று,அன்பான நண்பனே, எங்களின் விளையாட்டில் கலந்து கொள்ள நீயும் வந்திருப்பது நல்லதாயிற்று என்று கூறி, நண்பர்களை அழைத்து,இப்போது நாம் ஜோடி ஜோடியாக விளையாடலாம், ஒருவருக்கொருவர் சவால் விடலாம் என்று கூறினார்.

சிறுவர்கள் ஒன்று கூடி சிலர் கிருஷ்ணரின் பக்கமும், சிலர் பலராமரின் பக்கமும் சேர்ந்து கொண்டார்கள். எதிர்க் கட்சிகள் ஜோடி ஜோடியாக யுத்தம் செய்ய வேண்டும். வென்றவர்களைத் தோற்றவர்கள் முதுகில் சுமக்க வேண்டும் என்பது நிபந்தனை. விளையாடியபடியே அவர்கள் பசுக்களையும் கவனித்துக் கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் பாண்டீர வனம் எனும் காட்டினூடே சென்றனர். ஸ்ரீ தாமனும் விருஷபனும் இருந்த பலராமனின் கட்சி வெற்றி பெற்றது. கிருஷ்ணரின் கட்சி அவர்களை சுமந்து கொண்டு பாண்டீர வனத்தில் நடக்க வேண்டியதாயிற்று. கிருஷ்ணர், ஸ்ரீ தாமனையும் பத்ரசேனர் விருஷபனையும் அங்கு ஆயர்குலச் சிறுவனின் தோற்றத்தில் வந்திருந்த பிரலம்பாசுரன் பலராமரையும் முதுகில் சுமக்க வேண்டியதாயிற்று.

பிரலம்பாசுரன் அசுரர்களுள் மிகப் பெரியவன். அங்கிருந்த ஆயர்குலச் சிறுவர்களுள் கிருஷ்ணர் மிகுந்த பலசாலியென்பதை அவன் யூகித்திருந்தான். கிருஷ்ணரின் அருகில் இருக்க விரும்பாமல் பிரலம்பாசுரன், பலராமரை வெகு தூரம் தூக்கிச் சென்றான். அந்த அசுரன் பலத்திலும் சக்தியிலும் மிகுந்தவன். ஆனால், ஒரு மலைக் குகைக்குச் சமமான பலராமரை அவன் தூக்கிச் சென்றான். எனவே அவன் களைப்புற்று பாரத்தைச் சுமக்க முடியாமல் போனதால் அவனது உருவம் மேக மண்டலம் வரை விரிந்து, கண்கள் அனலெனப் பளிச்சிட கூரிய பற்கள் வெளிப்பட அவன் தோன்றியதை பலராமர் கவனித்தார்.

அசுரனின் தோற்றத்தைக் கண்டு பலராமர் ஆச்சரியப் பட்டார். தன்னை அந்த அசுரன், தன் நண்பர்களிடமிருந்து தூரமாக எடுத்துச் சென்று கொல்ல நினைக்கிறான் என்பதை அறிந்தார். உடனே அவர், இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் ஒரு மலையைத் தாக்குவது போல் அசுரனின் தலையில் தன் முஷ்டியால் ஓங்கித் தாக்கினார். பலராமரின் தாக்குதலைத் தாங்க மாட்டாமல், தலை நசுக்கப்பட்ட பாம்பைப் போல், அசுரன் கீழே விழுந்து இறந்தான். அவனின் வாயிலிருந்து இரத்தம் கொட்டியது. சிறுவர்களெல்லாம் அந்த இடத்துக்கு விரைந்தார்கள். கோரமான காட்சியைக் கண்டதும் பலராமருக்குசபாஷ் என்று கூறிப் பாராட்டினார்கள். தேவர்கள் மனமுவந்து பலராமர் மீது பூக்களைத் தூவி, ஆசி வழங்கி, பிரலம்பாசுரனைக் கொன்றதற்காகப் பாராட்டினார்கள்.

யாகங்கள் நடத்திய அந்தணர்களின் மனைவியருக்கு முக்தி அளித்தல்

வழக்கம்போல கிருஷ்ணரும் பலராமரும் அவர்களது நண்பர்களுடன் யமுனை நதிக் கரைக்குச் சென்றிருந்தபோது, ஆயர் சிறுவர்கள் காலை உணவு உண்டிராததால் மிகவும் பசியாக இருந்தார்கள். அவர்கள் கிருஷ்ணரையும் பலராமரையும் அணுகி இவ்வாறு கூறினார்கள்: "அன்பான கிருஷ்ணா, பலராமா, நாங்கள் இன்று பசியாக இருக்கிறோம். எங்கள் பசியைப் போக்குவதற்கான உபாயம் ஏதாவது கூறுங்கள்". என்று கூறினார்கள்.

நண்பர்கள் இவ்வாறு வேண்டிக் கொண்டபோது கிருஷ்ணரும் பலராமரும் அச்சமயம் யாகங்கள் நடத்திக் கொண்டிருந்த சில பிராமணர்களின் மனைவியரின் மீது கருணை கொண்டார்கள். அம்மனைவியர்கள் பிரபுவின் சிறந்த பக்தைகள். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு, கிருஷ்ணர் அவர்களை ஆசீர்வதிக்க விரும்பினார். கிருஷ்ணர் நண்பர்களிடம் கூறினார்:அன்பான நண்பர்களே, பக்கத்திலுள்ள பிராமணர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் உணவு கேளுங்கள். இப்போது அவர்கள் வேத முறைப்படியானஆங்கிரஸ எனும் யாகங்களை நடத்துவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்தப் பிராமணர்கள் வேதப் பண்களை இசைப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். ஆனால், வேத அறிவின் நோக்கம் என்னை அறிவது என்பதை அவர்கள் மறந்திருக்கிறார்கள். என்று கிருஷ்ணர் தம் நண்பர்களுக்குக் கூறினார்.கிருஷ்ணரின் கட்டளையை ஏற்று சிறுவர்கள் பிராமணர்களிடம் சென்று,கிருஷ்ணரும் பலராமரும் அருகாமையில் பசுக்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களுடன் வந்திருக்கிறோம். அந்தணராகிய நீங்கள் தர்மங்களை அறிந்தவர்கள். எங்களுக்கு உணவு தரலாமென நீங்கள் எண்ணினால், நீங்கள் தரும் உணவை நாங்கள், கிருஷ்ணருடனும் பலராமருடனும் பகிர்ந்து உண்கிறோம். என்று; கூறினார்கள். அவர்களைப் பற்றி அவ்வந்தனர்கள் கவலைப் படாமல் சிறுவர்களிடம் பேச மறுத்து விட்டார்கள். பிராமணர்கள் தங்களிடம் பேச மாட்டார்கள் என்பதை அறிந்த சிறுவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன்; திரும்பிச் சென்று கிருஷ்ணரிடமும் பலராமருடனும் நடந்ததை விவரித்தார்கள்.

அவர்கள் கூறியதைக் கேட்ட கிருஷ்ணர் கூறினார்: "பிராமணர்கள் தானம் தர மறுத்ததை எண்ணி வருந்தக் கூடாது. ஏனெனில் யாசகம் அப்படிப்பட்டது. யாசிப்பவன் செல்லும் இடங்களில் எல்லாம் ஏதாவது நிச்சயமாகக் கிடைக்குமென்று எதிர்பார்க்கக் கூடாது. சில இடங்களில் ஏமாற்றமடைய நேரிடலாம். அதற்காக மனம் வருந்தக் கூடாது. நீங்கள் மீண்டும் அந்தணர்களின் இருப்பிடத்துக்குச் சென்று அந்தணர்களின் மனைவியரைச் சந்தித்து, அவர்களிடம் என் பெயரையும் பலராமரின் பெயரையும் சொல்லி உணவு கேளுங்கள். உங்களுக்கு வேண்டிய அளவு உணவை அவர்கள் நிச்சயமாகத் தருவார்கள்." என்று கிருஷ்ணர் கூறினார்.

கிருஷ்ணரின் கட்டளைப்படி சிறுவர்கள் உடனே அந்தணர்களின் மனைவியரிடம் சென்றார்கள். அவர்கள் தத்தம் வீடுகளில் இருந்தார்கள். சிறுவர்கள் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கூறினார்கள்:அன்பான அன்னையரே, கிருஷ்ணரும் பலராமரும் அருகாமையில் பசுக்களுடன் வந்திருக்கிறார்கள். அவர்களின் கட்டளைப்படி நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம். நாங்கள் எல்லோரும் மிகவும் பசியாக இருக்கிறோம்.

எனவே, உணவை வேண்டி உங்களிடம் வந்திருக்கிறோம். கிருஷ்ணரும், பலராமரும் நாங்களும் உண்பதற்கு ஏதாவது உணவு தாருங்கள். என்று கூறினார்கள். இதைக் கேட்ட அந்தண மனைவியர், கிருஷ்ணரையும் பலராமரையும் பற்றிக் கவலைப் பட்டார்கள். உடனே அவர்கள் பல பாத்திரங்களில் நேர்த்தியான உணவு வகைகளையும், யாகத்திற்காகத் தயாரிக்கப்பட்ட சுவையான உணவு வகைகளையும் எடுத்துக் கொண்டு கிருஷ்ணரையும் பலராமரையும் சந்திப்பதற்கு சென்றார்கள். கிருஷ்ணர் அவர்களைச் சந்தித்து, அவர்கள் அன்புடன் கொண்டுவந்த உணவுகளை ஏற்று, அவர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்தபின் அந்தணர்களின் மனைவிமார் தங்களது வீடுகளுக்கு திரும்பிச் சென்றார்கள்.

எப்போதும் ஆனந்த நிலையிலிருக்கும் ஸ்ரீ கோவிந்தன், சாதாரணக் குழந்தையாக வந்து தன் லீலைகளைக் காட்டி, அந்தணர்களின் மனைவியர் கொடுத்த உணவை உண்டு மகிழ்ந்தார். கிருஷ்ணரிடமிருந்து மனைவியர் திரும்பிய பின், யாகங்களை நிறைவேற்றிய அந்தணர்கள் முழுமுதற் கடவுளுக்கு உணவளிக்க மறுத்த குற்றத்திற்காக மனம் வருந்தி, தமது தவறை உணர்ந்து கொண்டார்கள்.

அந்தப் பிராமணர்கள் கூறினார்கள்: "கிருஷ்ணரையும் பலராமரையும் பற்றி அந்த ஆயர் சிறுவர்கள் நமக்கு நினைவூட்டியும், அவர்களை நாம் அசட்டை செய்து விட்டோம். நமது நன்மைக்காக, நம்மிடம் கருணை கூர்ந்து முழுமுதற் கடவுள் தம் நண்பர்களின் மூலம் நம்மிடம் உணவு கேட்டு அணுப்பினார். இல்லாவிடில் அவர் அவர்களை அனுப்பி இருக்கத் தேவையில்லை. அவர் நினைத்த மாத்தித்தில் அவர்களின் பசியைத் தீர்த்திருக்க முடியும். ஆனால், நம்மைப் போல் குறுகிய நோக்கில்லாத நம் மனைவியர் கிருஷ்ணருக்கு புனிதமான பக்தித் தொண்டாற்றி இருப்பதால் நம்மைவிட உயர்ந்த நிலையிலிருக்கிறார்கள் என்பதை எண்ணி நாம் பெருமை அடைகிறோம். எனவே, நாமும் இப்போது அவரது பாத கமலங்களில் பணிவோமாக." என்று அந்தப் பிராமணர்கள் கூறினார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவருக்கு அன்புடன் உணவளித்த அந்தணர்களின் மனைவியருக்கு முக்தி அளித்தார்.

கோவர்த்தன கிரியைப் பூஜித்தல்

விருந்தாவன வாசிகள் இந்திரனைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு யாகத்தை நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். இந்திரனைத் திருப்திப் படுத்தினால் மழை வருமென்று நம்பப்பட்டது. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட கிருஷ்ணர், தன் தந்தை நந்தமகாராஜாவிடம் அதுபற்றிப் பணிவுடன் கேட்டார். நந்தமகாராஜா சிறிது நேரம் மௌனமாக இருந்தார். யாகத்தின் நுணக்கங்களைச் சிறுவனான கிருஷ்ணரால் புரிந்துகொள்ள முடியாதென்று அவர் நினைத்தார். ஆனால் கிருஷ்ணர் விடவில்லை. அந்த விபரங்களை விரிவாகக் கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

அதற்கு நந்தமகாராஜா கூறினார்: "இச்சடங்கு பரம்பரை பரம்பரையாகச் செய்யப்பட்டு வருகிறது. மழை இந்திரனின் கருணையால் ஏற்படுவதாலும், மேகங்கள் அவரது பிரதிநிதிகள் ஆகையினாலும், தண்ணீர் நமது வாழ்வுக்கு மிக முக்கியமானதாலும், மழையில்லாமல் நாம் பயிரிடவோ, தானியங்களை விளைவிக்கவோ இயலாது. மழை பெய்யாவிட்டால் நாம் வாழ முடியாது. எனவேதான், இந்த யாகம் செய்யப்படுகிறது", என்று நந்தமகாராஜா கூறினார். இதைக் கேட்டபின் கிருஷ்ணர் பேசிய விதம் இந்திரனை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கியது. யாகத்தை நடத்த வேண்டாமென கிருஷ்ணர் விவாதித்தார். அதற்காக அவர் கூறிய காரணங்கள் இரண்டு. முதலாவதாக பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது போல், இகவுலக நலன்களுக்காக தேவர்களை வழிபடத் தேவையில்லை. தேவர்களை வழிபட்டுப் பெறப்படும் நன்மைகள் தற்காலிகமானவை. இரண்டாவதாக, தேவர்களை வழிபடுவதால் கிடைக்கும் தற்காலிகமான நன்மைகளும் முழுமுதற்கடவுளால் வழங்கப்படுபவை. அவரின் அனுமதியின்றி யாரும் யாருக்கும் எந்த நன்மையும் வழங்க இயலாது.

கிருஷ்ணர் மேலும் கூறினார்: "சுவர்க்க லோகத்தின் ஆளுனர் பதவியில் இருப்பதால் கர்வம் கொண்டிருந்த இந்திரனுக்கு பாடம் கற்பிப்பதற்காக, இந்திரனுக்கு செய்யும் யாகத்தை நிறுத்தி, கோவர்த்தன கிரிக்கான பூஜையை மேற்கொள்ள வேண்டும். நாம் விருந்தாவனத்தில் வாழ்வதில் திருப்தி காண்கிறோம். நமது உறவு குறிப்பாக கோவர்த்தன கிரியுடனும் விருந்தாவனத்துடனும் ஏற்பட்டது. நமது ஊரிலுள்ள பிராமணர்களையும் கோவர்த்தன கிரியையும் திருப்திப் படுத்துவதற்கான யாகத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்". எனப் பணிவாகக் கேட்டுக் கொண்டார். இறுதியில் நந்தமகாராஜா கிருஷ்ணரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு யாகத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.

அன்று முதல் இன்றுவரை ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கோவர்த்தன பூசை நடத்தப்பட்டு வருகிறது. விருந்தாவனத்திலும், மற்ற இடங்களிலும், உலகெங்கிலும் உள்ள இஸ்கான் ஆலயங்களிலும் உணவு பெருமளவில் தயாரிக்கப்பட்டு பிரசாதமாக மக்களுக்கு வினியோகிக்கப் படுகிறது. நந்தமகாராஜாவும் ஏனைய ஆயர்களும் கோவர்த்தன பூசையை நிறைவேற்றி, மலையை வலம் வந்தார்கள். இந்த மரபையொட்டி இப்போதும் விருந்தாவனத்தில் இந்தப் பூஜை தினத்தன்று நன்றாக உடையுடுத்து, தம் பசுக்களுடன் கோவர்த்தன மலைக்குச் சென்று, பூஜையை நிறைவேற்றி மலையை வலம் வருகிறார்கள். கிருஷ்ணரின் ஆலோசனைப்படி கற்றறிந்த அந்தணர்களை வரவழைத்து வேதம் ஓதச் செய்து, கோவர்த்தன பூசையை நடத்திப் பிரசாதம் வழங்கினார்கள். விருந்தாவன வாசிகள் ஒன்றுகூடி, பசுக்களை அலங்கரித்து, அவற்றிற்குப் புல் கொடுத்தார்கள். பசுக்களுடன் கோவர்த்தன கிரியை வலம் வந்தார்கள்.

கோவர்த்தன பூசையை நடத்தி வைத்த அந்தணர்கள், கோபாலர்களையும், கோபியரையும் ஆசிர்வதித்தார்கள். எல்லாம் சரிவர நடந்தேறிய பின், கிருஷ்ணர் மிகப் பிரமாண்டமான உருவத்தை மேற்கொண்டு, கோவர்த்தன கிரிக்கும் தமக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை, இரண்டும் ஒன்றே, என்பதை அங்கிருந்த மக்களுக்கு உணர்த்தினார். பின்னர், அங்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு முழுவதையும்; கிருஷ்ணர் உண்டார். கோவர்த்தன கிரியும் கிருஷ்ணரும் ஒன்றே என்ற கருத்து இன்றும் மதிக்கப் படுகிறது. அம்மலையின் கற்களை எடுத்துச் சென்று வீடுகளில் வைத்து கிருஷ்ணராக அவற்றைப் பூஜிக்கிறார்கள். உணவு முழுவதையும் உண்ட கிருஷ்ண வடிவமும், கிருஷ்ணர் தாமும் வெவ்வேறாக விழங்கி நின்றதால் கிருஷ்ணர் தாமும் மற்ற விருந்தாவனவாசிகளும் அந்த மாபெரும் மூர்த்திக்கும் கோவர்த்தன மலைக்கும் ஒருங்கே வழிபாடு நடத்தினார்கள். இவ்வாறு கோவர்த்தன பூசையை நடத்திய விருந்தாவன வாசிகள், வசுதேவர் மைந்தனான கிருஷ்ணரின் கட்டளைகளை நிறைவேற்றிய பின் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.

கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தல்

விருந்தாவனத்தின் ஆயர்கள் இந்திரனுக்காக ஏற்பாடு செய்திருந்த யாகத்தைக் கிருஷ்ணர் தடுத்து விட்டார் என்று அறிந்தபோது இந்திரன் மிகுந்த கோபம் கொண்டு, தன் கோபத்தை விருந்தாவன வாசிகளின் மீது காட்டினான். யாகம் நிறுத்தப்பட்டதற்கு கிருஷ்ணரே காரணம் என்பதை அறிந்திருந்த போதிலும், பழியை நந்தமகாராஜாவின் தலைமையிலான ஆயர்களின் மீது தீர்க்க முற்பட்டான். பலவகையான மேகங்களின் அதிபதியான இந்திரன், ஸாங்வர்த்தக என்ற மேகத்தை அழைத்தான். இந்த மேகம் பிரபஞ்சம் முழுவதையும் அழிப்பதற்கான தேவை ஏற்படும் போதுதான் அழைக்கப்படும்.

விருந்தாவனத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரும் வெள்ளத்தில் மூழ்கடிக்கும் படி இந்திரன் ஸாங்வர்த்தக மேகத்துக்கு கட்டளையிட்டபோது அப்பொறுப்பை ஏற்க அவை மிகவும் அஞ்சின. ஆனால் தேவேந்திரன், நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள் நானும் என் யானை மீது ஆரோகணித்து பெரும் புயல்கள் புடை சூழ உங்களுடன் வருகிறேன். விருந்தாவன வாசிகளைத் தண்டிப்பதில் என் சக்தி முழுவதையும் செலவிடத் தீர்மானித்திருக்கிறேன். என்று உறுதியளித்து மேகங்களை ஊக்குவித்தான்.

இந்திரனின் கட்டளைப்படி பலவகையான, மிகவும் அபாயகரமான மேகங்கள் விருந்தாவனத்தின் மேல் தோன்றி தம் பலம் முழுவதையும் பிரயோகித்து இடைவிடாது மழையைப் பொழிந்தன. தொடர்ந்து இடியிடித்தது. மின்னல் மின்னியது, பலமான காற்று வீசிற்று. கூரிய அம்புகள் போல் நீர் தாரைதாரையாக வர்ஷித்தது. சற்று நேரத்தில் விருந்தாவனத்தின் நிலப் பகுதிகள், மேடு பள்ளம் தெரியாத வண்ணம் நீரால் நிரம்பின. நிலமை மிக மோசமாயிற்று. குறிப்பாக மிருகங்கள் பெருத்த அவதிக்குள்ளாயின. மழையோடு கடும் காற்று வீசியதால் விருந்தாவனத்தின் ஒவ்வொரு ஜீவராசியும் குளிரில் நடுங்கின. அத் தொல்லைகளில் இருந்து விடுபட முடியாத மக்கள் கோவிந்தனின் பாத கமலங்களில் சரணடைந்தனர். அப்போது விருந்தாவன வாசிகள் எல்லோரும் கிருஷ்ணரை நோக்கி அன்புள்ள கிருஷ்ணா, நீர் மிகவும் சக்தி வாய்ந்தவர், பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர். இந்திரனின் கோபத்துக்கு ஆளாகித் தவிக்கும் எங்களைக் காப்பாற்றுவீராக. எனப் பிரார்த்தித்தார்கள்.

இந்தப் பிரார்த்தனையைக் கேட்ட கிருஷ்ணர், காலம் தவறிப் பெரும் மழை பெய்ததும், கடும் காற்று வீசியதும் தனக்குச் சேரவேண்டிய யாகம் நடைபெறாததால் கோபம் கொண்ட இந்திரனின் செயலால் ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டார். இந்திரன் திட்டமிட்டு தன் கோபத்தை இவ்வாறு காட்டுகிறான். இந்த தேவன் தானே மிகப் பெரியவன் என்று எண்ணிக்கொண்டு தன் பலத்தைக் காட்டுகிறான். ஆகையால் என் தகுதியை நான் அவனுக்கு உணர்த்த வேண்டும். பிரபஞ்சக் காரியங்களை நடத்துவதில் அவன் தனியுரிமை பெற்றவனல்ல என்பதையும், நானே மேலாளரான உயரதிகாரி என்பதையும் உணர்த்தி, அவனது கர்வத்தை அடக்கி, விருந்தாவனத்திலுள்ள என் தூய பக்தர்களை நான் காப்பாற்ற வேண்டும். எனக் கிருஷ்ணர் நினைத்தார்.

பின்பு பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஒரு குழந்தை தரையில் இருந்து குடைக் காளானைப் பிடுங்குவதுபோல், கோவர்த்தன கிரியைத் தன் ஒரு கையில் தூக்கிக் கொண்டார். இது கிருஷ்ணர் கோவர்த்தன கிரியைத் தூக்கிய பரமான லீலையாகும். மலையைக் கையில் ஏந்தியவாறு தம் பக்தர்களிடம் கிருஷ்ணர் கூறினார்: அன்புள்ள சகோதரர்களே, அன்புள்ள தந்தையே, எனதருமை விருந்தாவன வாசிகளே, இப்போது நீங்கள் பத்திரமாக இந்த கோவர்த்தன கிரியாகிய குடையின் கீழ் வரலாம். என் கையிலிருந்து மலை நழுவி விழுந்து விடலாமென்று நீங்கள் அஞ்ச வேண்டாம். பலத்த மழையாலும் சூறாவளிக் காற்றாலும் நீங்கள் பெருத்த அவதிக்குள்ளாகி இருக்கிறீர்கள். எனவே நான் இந்த மலையைத் தூக்கி அதை உங்களுக்காக குடையாகப் பிடித்திருக்கிறேன். இந்தக் குடையின் கீழ் உங்களின் பசுக்களுடன் இப்போது நின்மதியாக இருங்கள். என்று கிருஷ்ணர் கூறியதும் விருந்தாவன வாசிகள் அப்பெரிய மலையினடியில் ஒன்று கூடி, தங்கள் உடைமைகளுடனும் மிருகங்களுடனும் பத்திரமாக இருந்தார்கள்.

விருந்தாவன வாசிகளும் அவர்களது பசுக்களும் அம்மலையின் அடியில் ஒரு கிழமை பசி, தாகம் இன்றி, வேறு எவ்விதமான கவலையும் இல்லாமல் இருந்தார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தமது இடது கையின் சுண்டு விரலின் நுனியில் அவ்வளவு பெரிய மலையை ஒரு வார காலம் நிறுத்தியிருந்ததைக் கண்டு ஆயர்கள் ஆச்சரியமடைந்தார்கள். அப்போது கிருஷ்ணருக்கு ஏழு வயதே நிரம்பியிருந்தது. கிருஷ்ணரின் அசாதாரணமான யோக சக்தியைக் கண்டு சுவர்க்கத்தின் அதிபதியான இந்திரன், இடியால் தாக்கப்பட்டவனைப் போல் திகைப்படைந்து உறுதி குலைந்தான். உடனே, அவன் மேகங்களையெல்லாம் விலகிச் செல்லும்படி கட்டளையிட்டான். மேகங்கள் எல்லாம் கலைந்து ஆகாயம் தெளிவு பெற்றதும் பலத்த காற்று வீசுவது நின்றது. அப்போது கோவர்த்தன கிரிதாரி என்ற பெயரைப் பெற்ற முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் கூறினார்: என்னருமை ஆயர்குல மக்களே, இப்போது நீங்கள் உங்கள் மனைவியரையும், குழந்தைகளையும், பசுக்களையும் அழைத்துக் கொண்டு உங்கள் உடமைகளுடன் வீட்டுக்குச் செல்லலாம். வெள்ளம் குறைந்து விட்டது. எனவே, நீங்கள் இங்கிருந்து செல்லலாம். என்று கூறினார். எல்லா மக்களும் தத்தம் உடைமைகளை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றார்கள். அவர்கள் அங்கிருந்து சென்றதும் பிரபுவாகிய கிருஷ்ணர் மெதுவாக கோவர்த்தன கிரியை கீழே இறக்கி அதன் உரிய இடத்தில் முன்பிருந்தபடி வைத்தார்.

எல்லாம் முடிந்த பின்பு விருந்தாவன வாசிகள் அனைவரும் கிருஷ்ணரை அணுகி அவரை மனமாரத் தழுவிப் பேருவகை அடைந்தார்கள். சுவர்க்கத்தில் ஸித்தலோகம், கந்தர்வ லோகம், சாரணலோகம் ஆகியவற்றைச் சேந்தவர்கள் தம் திருப்தியைத் தெரிவித்து பூமியின் மீது மலர் மாரி பொழிந்து பல வகையான சங்குகளையும் வாத்தியங்களையும் இசைத்தனர். இறுதியில் சுவர்க்க லோகத்தில் இருந்து தேவேந்திரன் வந்து, தான் இழைத்த குற்றத்தை உணர்ந்து, கிருஷ்ணரின் பாதகமலங்களில் விழுந்து வணங்கி, அவரைத் துதித்ததும் இந்தினின் கர்வம் அடங்கியது. பின் கிருஷ்ணரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு இந்திரன் சுவர்க்க லோகத்திற்கு திரும்பிச் சென்றான்.

இந்தியாவின் விருந்தாவனத்துக்குச் செல்பவர்கள், விருந்தாவனத்திலிருந்து ஏறக்குறைய 22 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இடது கையின் சுண்டுவிரலின் நுணியில் குடையாகத் தூக்கி வைத்திருந்த கோவர்த்தன கிரியைத் தரிசிக்கலாம்.

வருணனின் பிடியிலிருந்து நந்த மகாராஜாவை விடுவித்தல்

கோவர்த்தன பூஜை அமாவாசையன்று நடைபெற்றது. அதன் பின் இந்திரன் ஏழு நாட்களுக்குப் பலத்த மழையும் புயலும் விழைவித்தான். சுக்ல பஷத்தின் ஒன்பது நாட்களுக்குப் பின் பத்தாவது நாள் தேவேந்திரன் கிருஷ்ணரை வழிபட்டபின் எல்லாம் திருப்தியாக முடிவடைந்தது. பின், பதினொன்றாம் நாள் ஏகாதசி வந்தது. அன்று முழுவதும் நந்தமகாராஜா உபவாசமிருந்து,
மறுநாள் துவாதசியன்று அதிகாலை யமுனை நதியில் நீராடச் சென்றார். அவர் நதியின் ஆழமான இடத்துக்குச் சென்றபோது வருணதேவனின் ஆள் ஒருவன் அவரைத் தடுத்து, வருணதேவனின் முன்பு கொண்டு போய் நிறுத்தினான். தவறான நேரத்தில் நதியில் நீராடியதாக நந்தரின் மேல் குற்றம் சாட்டப்பட்டது. வான சாஸ்திரத்தின் படி அவர் நீராடியவேளை அசுர வேளையாகும். அதிகாலையில் சூரியோதயத்துக்கு முன்பு நதியில் நீராட வேண்டுமென்று விரும்பிய நந்தர் எப்படியோ, மேலும் முன்பாகவே வந்துவிட்டதால், அசுப வேளையில் நீராடி விட்டார். அதனால் அவர் வருணனின் சிறையில் அடைக்கப் பட்டார்.

வருணனின் ஆட்கள் நந்த மகாராஜாவைப் பிடித்துச் சென்றபோது அவரது நண்பர்கள், கிருஷ்ணரையும் பலராமரையும் கூவி அழைத்தார்கள். நந்த மகாராஜாவை வருணன் பிடித்துச் சென்றிருப்பதை கிருஷ்ணரும் பலராமரும் அறிந்து, உடனே வருணனின் இருப்பிடத்துக்குச் சென்றார்கள். வருணதேவன் கிருஷ்ணரையும் பலராமரையும் மிகுந்த மரியாதையுடன் வரவேற்று இவ்வாறு கூறினான்: அன்பான பிரபுவே, உமது வருகையால் நான் ஜட நிலையிலிருந்து விடுபட்டு நிற்கிறேன். நீருனுள் இருக்கும் எல்லாச் செல்வங்களுக்கும் நானே அதிகாரியென்றாலும் வாழ்வின் வெற்றி, அவற்றில் அடங்கி இருக்கவில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் உம்மைக் காணும் இந்நேரத்தில் என் வாழ்வு வெற்றியடைந்து விட்டதாக நான் உணர்கிறேன்.

ஏனெனில் உம்மைக் காணும் எவரும் மேற்கொண்டு ஜடப்பிறவியை அடைவதில்லை. எல்லா உயிர்களிலும் உள்ள பரமாத்மாவே, எனது பணிவான வணக்கங்கள் உமக்கு உரித்தாகுக. எனது மடமையால் எது செய்யலாம், எது செய்யக் கூடாதென்பதை அறியாமல், உமது தந்தையான நந்த மகாராஜாவை நான் சிறைப் பிடித்து விட்டேன். எனது ஏவலர்களின் தவறுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். இங்கு வந்து உமது கருணையை எனக்கு வழங்க வேண்டுமென்பதற்காக நீர் இதைத் திட்டமிட்டு செய்திருக்கிறீர் போலும். அன்பான கிருஷ்ணா, என் மீது கருணை காட்டும்- இதோ உம் தந்தை. அவரை நீர் உடனே அழைத்துச் செல்லலாம். என்று வருணதேவன் கிருஷ்ணரை வேண்டிக் கொண்டான்.

இவ்வாறு கிருஷ்ணர் தம் தந்தையை வருணனிடம் இருந்து விடுவித்து, அவரின் நண்பர்களிடம் கொண்டு வந்தார். எல்லோரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். செல்வச் சிறப்பு மிக்க வருணதேவன், கிருஷ்ணரிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டது நந்த மகாராஜாவுக்கு வியப்பை அளித்தது. அவர் அந்நிகழ்ச்சியைத் தம் நண்பர்களிடம் ஆச்சரியத்துடன் விபரித்தார்.

வித்யாதரன் முக்தி

ஒரு சமயம் நந்தமகாராஜாவின் தலைமையிலான கோபாலர்கள் அம்பிகா வனம் சென்று சிவராத்திரி பூஜை செய்ய விரும்பினார்கள். அம்பிகா வனம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. அது சரஸ்வதி நதிக்கரையில் உள்ளதாகச் சொல்லப்படுவதுண்டு. சரஸ்வதி நதியின் கரையிலிருந்த அம்பிகா வனத்துக்கு நந்தமகாராஜாவும் ஆயர்களும் சென்றார்கள். அம்பிகா வனத்தை அடைந்ததும் விருந்தாவன ஆயர்கள் முதலில் சரஸ்வதி நதியில் நீராடினார்கள். புண்ணிய தலங்களுக்கு செல்பவர்கள் முதலில் அங்குள்ள தீர்த்தத்தில் நீராடுவார்கள். சில சமயங்களில் அவர்கள் முடியிறக்குவதும் உண்டு. நீராடுவது முதற் கடமை. நீராடிய பின் அவர்கள் அங்குள்ள தெய்வங்களை வணங்கித் தானங்கள் வழங்குவார்கள்.

விருந்தாவனத்திலிருந்து வந்திருந்த ஆயர்கள், தங்க ஆபரணங்களையும்
அழகிய மாலைகளையும் அணிந்திருந்த பசுக்களை பிராமணர்களுக்குத் தானமாக வழங்கினார்கள். நந்தமகாராஜாவும் மற்றவர்களும் அன்றிரவை சரஸ்வதி நதியின் கரையில் கழித்தார்கள். அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அருகிலிருந்த வனத்திலிருந்து வந்த ஒரு பெரிய பாம்பு நந்தரைப் பிடித்து விழுங்கத் தொடங்கியது. நந்தர் பரிதாபமாகக் கத்தலானார்: என் அருமை மகனே, கிருஷ்ணா, நீ உடனே வந்து என்னை இந்த அபாயத்திலிருந்து காப்பாற்ற வேண்டும். என்று நந்த மகாராஜா கூக்குரலிட்டதைக் கேட்ட ஆயர்கள் எழுந்து வந்து அங்கு நடந்ததைக் கண்டார்கள். அவர்கள் உடனே எரியும் நெருப்பு கொள்ளிகளைக் கொண்டு பாம்பை அடித்துக் கொல்ல முயற்சித்தார்கள். அப்படியும் பாம்பு நந்தரை விடுவதாயில்லை.

அப்போது கிருஷ்ணர் அங்கு தோன்றித் தனது பாத கமலங்களால் பாம்பைத் தொட்டார். கிருஷ்ணரின் திருப்பாதங்கள் பட்டதும் பாம்பு தன் சர்ப்ப உடலை நீக்கி மிகவும் அழகான, வித்யாதரன் என்ற பெயருடைய தேவனாக உருவெடுத்தது. உன்னத அழகுடன் அவன் காட்சி அளித்தான். அந்த தேவன் கிருஷ்ணருக்கு வணக்கத்தினைத் தெரிவித்து மிகுந்த பணிவுடன் நின்றிருந்தான். அப்போது அந்தத் தேவனைப் பார்த்து கிருஷ்ணர் கேட்டார்: நீ நல்ல தேவனாகத் தோன்றுகிhய். நீ இந்த வெறுக்கத் தக்க செயலைச் செய்ததெப்படி? பாம்பின் உடல் உனக்கு எப்படி வாய்த்தது? என்று கிருஷ்ணர் கேட்டபோது அந்தத் தேவன் தன் முந்திய வாழ்வின் கதையைக் கூறலானான்.

அன்பான பிரபுவே, முந்திய பிறவியில் என் பெயர் வித்யாதரன். உலகம் முழுவதும் என் பேரழகிற்காக நான் பிரசித்தி பெற்றிருந்தேன். புகழ் வாய்ந்தவன் என்பதால் நான் எங்கும் என் விமானத்தில் பறந்து செல்வது வழக்கம். அவ்வாறு பறந்து செல்லும்போது ஒருநாள் ஆங்கிரா என்ற மகா முனிவரைக் கண்டேன். அவர் அழகில்லாதவராக இருந்தார். நான் என் அழகில் மிகுந்த கர்வம் கொண்டிருந்ததால் அவரைக் கண்டதும் சிரித்து விட்டேன். அந்தப் பாவத்திற்காக முனிவர் என்னை பாம்பாகும்படி சாபமிட்டார், நான் பாம்பானேன். என்று கூறிய அந்தத் தேவன் மேலும் கூறினான்: முனிவர் எனக்கிட்ட சாபம் ஒரு சாபமேயல்ல என்பதை இப்போது நான் உணர்கிறேன். அவர் என்னைச் சபித்திருக்காவிடில் நான் பாம்பின் உடலைப் பெற்று, உமது பாத கமலங்களால் உதைக்கப் படாமலிருந்தால், நான் ஜட நிலையிலிருந்து விடுபட்டிருக்க மாட்டேன்.

இப்போது நான் பாவங்களின் விளைவுகளில் இருந்து விடுபட்டிருப்பதாக எண்ணுகிறேன். யோகிகளில் எல்லாம் சிறந்தவர், ஆதி புருஷனான முழுமுதற் கடவுள், பக்தர்களின் எஜமானர். நீர் பிரபஞ்சங்களைப் பரிபாலிப்பவர். உமது நாமத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பவர்கள் பாவச் செயல்களின் விளைவுகளிலிருந்து விடுதலை பெறுகிறார்கள் என்பதை நான் அறிவேன். நான் சுவர்க்கத்திலுள்ள என் இருப்பிடத்துக்குச் செல்ல உம் அனுமதியை வேண்டுகிறேன். என்று கூறி, வித்யாதரன் சுவர்க்கத்திற்குத் திரும்பச் செல்வதற்கான அனுமதியை கிருஷ்ணரிடமிருந்து பெற்று, கிருஷ்ணரை வலம் வந்து பணிவுடன் வணங்கி, சுவர்க்கத்திற்குத் திரும்பினான்.

நந்த மகாராஜாவும் பாம்பினால் விழுங்கப்பட இருந்த அபாயத்திலிருந்து தப்பினார். சிவபெருமானை வழிபடுவதற்காக அம்பிகா வனம் வந்திருந்த ஆயர்கள் தம் காரியத்தை முடித்துக் கொண்டு விருந்தாவனத்துக்குத் திரும்பிச் செல்லத் தயாரானார்கள். திரும்பும் வழியில் அவர்கள் கிருஷ்ணரின் லீலைகளை எண்ணியபடி சென்றார்கள்.

சங்காசுர வதம்

வித்யாதரன் முக்திக்குப் பின் ஒரு நாள் இனிமையான இரவில் எண்ணற்ற பலசாலிகளான பலராமரும் கிருஷ்ணரும் விருந்தாவனக் காட்டிக்குச் சென்றார்கள். அவர்களுடன் விரஜ பூமியின் நங்கையரும் சென்றிருந்தார்கள். அந்நங்கையர் நேர்த்தியான ஆடைகளை அணிந்திருந்தார்கள். சந்தனம் பூசப் பெற்று, மலர்களால் தம்மை அலங்கரித்திருந்தார்கள். ஆகாயத்தில் சந்திரன், நட்சத்திரங்கள் புடை சூழப் பிரகாசித்துக் கொண்டிருந்தான். சூழலின் இனிமையில் கிருஷ்ணரும் பலராமரும் இனிமையாகப் பாடினார்கள்.

அப்போது குபேரனின் நண்பனான ஒரு அசுரன் அங்கு தோன்றினான். அவன் தலையில் சங்கு வடிவிலான விலை உயர்ந்த மணியைத் தரித்திருந்ததால் அவனுக்கு சங்காசுரன் என்ற பெயர் வழங்கியது. குபேரனின் இரு மகன்கள் செல்வத்தால் செருக்கடைந்து நாரத முனியை அசட்டை செய்தது போல் சங்காசுரனும் செல்வச் செருக்கு காரணமாக, கிருஷ்ணரையும் பலராமரையும் ஆயர்குலச் சிறுவர்களென எண்ணினான். சங்காசுரன், தான் செல்வம் மிகுந்தவனும், குபேரனின் நண்பனுமாகையால் அங்கிருந்த விரஜ நங்கையர்களை அனுபவிக்க எண்ணி அப்பெண்களைக் கைப்பற்ற விரும்பினான்.

அவர்களிடையே அவன் தோன்றி, அப்பெண்களை வடக்கு திசையை நோக்கி கடத்திச் செல்லலானான். கிருஷ்ணரும் பலராமரும் இருந்தும்கூட சங்காசுரன் தானே அவர்களின் கணவன், உடைமையாளன் என்பது போல் அதிகாரம் செய்தான். சங்காசுரனால் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்ட பெண்கள், தம்மைக் காப்பாற்றும்படி கிருஷ்ணரையும் பலராமரையும் பெயர் சொல்லிக் கூவியழைத்தார்கள். சகோதரர்கள் இருவரும் பெரிய கட்டைகளைக் கைகளில் எடுத்துக் கொண்டு விரைவாக சங்காசுரனைப் பின் தொடர்ந்தார்கள்.

அவர்களின் பலத்தை எண்ணி அஞ்சிய சங்காசுரன், கோபியர்களை விட்டுவிட்டு உயிருக்குப் பயந்து ஓடினான். ஆனால் கிருஷ்ணர் அவனை விடவில்லை. கோபியர்களை பலராமரின் பாதுகாப்பில் விட்டுவிட்டு கிருஷ்ணர் அசுரன் சென்ற இடமெல்லாம் அவனைத் துரத்திப் பிடித்து, அவனின் தலையில் தன் முஸ்டியால் அடித்து, அவனைக் கொன்றார். பின்னர் அவனின் தலையில் இருந்த சங்கு வடிவிலான மணியை எடுத்துக் கொண்டு திரும்பினார். விரஜ பூமியின் நங்கையர்களின் முன்னிலையில் கிருஷ்ணர் அம்மணியைத் தம் சோதரனான பலராமருக்கு அளித்தார்.

அரிஷ்டாசுரன் வதம்

ஒரு நாள் அரிஷ்டாசுரன் என்ற அரக்கன் பெருத்த உடலும் கொம்புகளுமுடைய மிகப் பெரிய எருதின் வடிவில் விருந்தாவன கிராமத்தினுள் நுழைந்து, காலால் பூமியைக் கிளறியபடி குழப்பம் விளைவிக்கலானான். பெரும் பூகம்பம் ஏற்பட்டது போல் நிலம் அதிர்ந்தது. அவன் பயங்கரமாக உறுமிக் கொண்டு நதிக்கரையில் பூமியைக் கிளறிய பின் கிராமத்தினுள் நுழைந்தான். அவனின் உறுமல் மிகவும் பயங்கரமாக இருந்ததால் அதைக் கேட்ட கர்ப்பிணிப் பெண்கள் சிலருக்கும், சினையுற்றிருந்த பசுக்களுக்கும் கர்ப்ப சேதம் ஏற்பட்டது. எருதின் உடல் மிகப் பெரியதாகவும், பலமுள்ளதாகவும் இருந்ததால், மலையின் முகட்டில் மேகங்கள் சூழ்ந்திருப்பது போல் காணப்பட்டது. அரிஷ்டாசுரனின் பயங்கர உருவத்தைக் கண்டு ஆண், பெண், யாவரும் பெரும் அச்சம் கொண்டனர். பசுக்களும் மற்ற மிருகங்களும் கிராமத்தை விட்டு ஓடின.

நிலமை மிகவும் பயங்கரமாயிற்று. விருந்தாவன வாசிகள் எல்லோரும், கிருஷ்ணா, எங்களைக் காப்பாற்றும் என்று ஓலமிட்டனர். பசுக்களும் ஓடுவதைக் கண்ட கிருஷ்ணர், பயப்படாதீர்கள், என்று எல்லோருக்கும் அபயமளித்தார். அரிஷ்டாசுரனைக் கிருஷ்ணர் விளித்துக் கூறினார்: நீ மிகவும் இழிந்த பிராணி. கோகுல வாசிகளை ஏன் பயமுறுத்துகிறாய்? இதனால் உனக்கு ஏற்படும் நன்மை என்ன? என் அதிகாரத்திற்கு நீ சவால் விட எண்ணியிருந்தால் நான் உன்னோடு யுத்தம் செய்யத் தயார். இவ்வாறு கிருஷ்ணர் அசுரனுக்கு சவால் விட்டார்.

கிருஷ்ணரின் சொற்களைக் கேட்ட அசுரன் மிகவும் கோபமுற்றான். கிருஷ்ணர் ஒரு நண்பனின் தோளில் கை வைத்தபடி எருதின் முன் வந்து நின்றார். எருது மிகுந்த கோபத்துடன் கிருஷ்ணரை நோக்கி முன்னோறியது. நிலத்தைத் தன் கால்களால் கிளறியபடி அரிஷ்டாசுரன் வாலை உயர்த்தினான். வாலின் நுனியின் மேல், மேகம் ஒன்று சுற்றி வருவது போல் தோன்றியது. அவனின் கண்கள் சிவந்து கோபத்தால் சுழன்றன. கிருஷ்ணரை நோக்கி கொம்புகளைக் குறி வைத்தபடி இந்திரனின் வஜ்ராயுதம் போல் அசுரன் அவரைத் தாக்கினான். ஆனால் கிருஷ்ணர் உடனே அசுரனின் கொம்புளைப் பிடித்து, பெரிய யானை ஒன்று சிறிய எதிரி யானையைத் தாக்குவது போல், அசுரனைத் தூக்கி எறிந்தார்.

அசுரன் மிகவும் களைப்படைந்தான். அவனுக்கு வியர்த்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிலத்திலிருந்து எழுந்து, மிகுந்த கோபத்துடனும் பலத்துடனும் மீண்டும் கிருஷ்ணரைத் தாக்கினான். கிருஷ்ணரைத் தாக்க விரைந்த போது அவனுக்கு கடுமையாக மூச்சு வாங்கியது. மீண்டும் கிருஷ்ணர் அவனின் கொம்புகளைப் பிடித்து அவனைத் தரையில் எறிந்த போது, கொம்புகள் உடைந்தன. ஈரத்துணியைத் தரையில் துவைப்பது போல் கிருஷ்ணர் அசுரனைக் காலால் உதைத்தார். உதை பட்ட அரிஷ்டாசுரன், புரண்டு விழுந்ததும் அவனின் உடலில் இருந்து ரத்தம் வெளி;யேறி, கண்கள் பிதுங்கி அவன் மரணமடைந்தான். கிருஷ்ணரின் வியத்தகு சாதனையைப் பாராட்டி தேவர்கள் மலர்மாரி பொழிந்தார்கள்.

வியோமாசுர வதம்

ஒரு நாள் காலையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் கோவர்த்தன கிரியின் உச்சியில் விளையாடுவதற்காகச் சென்றார்கள். கள்வர்களும் காவலர்களுமாக அவர்கள் நடித்து விளையாடினார்கள். சிலர் கள்வர்களாகவும் சிலர் ஆட்டுக் குட்டிகளாகவும் பங்கேற்றார்கள். இவ்வாறு அவர்கள் குழந்தைகளாக விளையாடி மகிழ்கையில் வியோமாசுரன் என்ற பெயருடைய ஒரு அரக்கன் அங்கு தோன்றினான். வியோமாசுரன் என்றால் ஆகாயத்தில் பறக்கும் அசுரன் என்று பொருள். அவன் மற்றொரு மாபெரும் அசுரனான மாயா என்பவனின் மகன். இவ்வரக்கர்கள் பல மாயச் செயல்களைப் புரியக் கூடியவர்கள்.

வியோமாசுரன் இடைச் சிறுவனாக உருவம் தாங்கி விளையாட்டில் காவலர்களாக நடித்த சிறுவர்களோடு கலந்து கொண்டு, ஆட்டுக் குட்டிகளாக நடித்த பல சிறுவர்களைக் கவர்ந்து சென்றான். ஒருவர் பின் ஒருவராகப் பல சிறுவர்களை அசுரன் கடத்திச் சென்று, அவர்களை மலைக் குகைகளினுள் பதுக்கி வைத்து, கற்களால் குகைகளின் வாய்களை மூடிவிட்டான். அசுரனின் தந்திரத்தைக் கிருஷ்ணர் அறிந்து கொண்டார்.

உடனே அவர், சிங்கம் ஆட்டுக் குட்டியைப் பிடிப்பது போல் அசுரனைப் பிடித்து விட்டார். அவரின் பிடியிலிருந்து தப்புவதற்காக அசுரன் ஒரு பெரிய மலையின் அளவிற்குத் தன் உருவத்தைப் பெரிதாக்கினான். ஆனாலும் கிருஷ்ணர் தன் பிடியைத் தளர்த்தவில்லை. மிகுந்த பலத்துடன் அசுரனைத் தரையில் வீழ்த்திக் கொன்றார். வியோமாசுரனைக் கொன்ற பின் கிருஷ்ணர், தம் நண்பர்களையெல்லாம் குகைகளில் இருந்து விடுவித்தார். அவரது வியத்தகு செயல்களுக்காக அவரின் நண்பர்களும் தேவர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பாராட்டினார்கள். அதன் பின் கிருஷ்ணர், தன் நண்பர்களுடனும் பசுக்களுடனும் விருந்தாவனத்துக்குத் திரும்பிச் சென்றார்.

கேசி வதம்

பகவான் ஸ்ரீகிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சன் தன் நண்பனான கேசி என்ற அரக்கனை விருந்தாவனம் செல்லுமாறு கட்டளையிட்டான். கம்சனின் கட்டளையைப் பெற்றதும் கேசி அசுரன் பயங்கரமான ஒரு குதிரையின் வடிவத்தை மேற்கொண்டு விருந்தவனப் பகுதிக்குள் நுழைந்தான். பிடரி மயிர் காற்றில் பறக்க, அவன் உரக்க கனைத்த ஒலி கேட்டு உலகமே நடுங்கியது. விருந்தாவன வாசிகள் பயந்து நடுங்கும்படி அவன் கனைத்து, வாலை ஆகாயத்தில் பெரும் மேகம் போல் சுழற்றியதைக் கிருஷ்ணர் கண்டார். குதிரை வடிவிலிருந்த அசுரன் தன்னை போருக்கு அழைக்கிறான் என்பதைக் கிருஷ்ணர் புரிந்து கொண்டார்.

அவர் அசுரனைப் போரிட அழைத்த போது அவன் சிங்கம் போல் கர்ஜித்தபடி அவரை நோக்கி முன்னேறினான். மிகுந்த வேகத்துடன் முன்னேறிய கேசி, தன் பலம் மிக்க, கற்களைப் போல் கடினமான கால்களால் கிருஷ்ணரை மிதித்துக் கொல்ல முயற்சித்தான். ஆனால் கிருஷ்ணர் உடனே அவனுடைய கால்களைப் பற்றிக் கொண்டு அவனைத் திகைக்கச் செய்தார். பின் கேசியினுடைய கால்களைப் பிடித்த படி அவனைச் சுழற்றினார். சில சுற்றுக்களக்குப் பின், கருடன் பெரிய பாம்பை எறிவது போல், கிருஷ்ணர் கேசியை நூறு கஜ தூரத்துக்கு அப்பால் எறிந்தார்.

அவ்வாறு எறியப்பட்டதும் குதிரை வடிவில் இருந்த கேசி நினைவிழந்தான். என்றாலும் சிறிது நேரத்தில் மீண்டும் உணர்வு பெற்று, மிகுந்த கோபத்துடன், வாயைப் பிழந்தபடி கிருஷ்ணரை நோக்கி வேகமாகச் சென்று தாக்க முற்பட்டான். அவன் அருகில் வந்ததும் கிருஷ்ணர் தம் இடது கையை கேசியான குதிரையின் வாயில் திணித்தார். கிருஷ்ணரின் கை, காய்ச்சிய இரும்பு போல் சுடுவதை உணர்ந்த கேசி, வலியால் துடித்தான். அவனின் பற்கள் வெளிவந்தன.

அவனின் வாயினுள் இருந்த கிருஷ்ணரின் கை உருவத்தில் பெரிதாகியதால் அவனுக்குத் தொண்டை அடைத்து, மூச்சுத் திணறி, உடம்பெல்லாம் வியர்த்தது. கால்களை அங்கும் இங்கும் உதைத்தான். இறுதி மூச்சு வெளிப்பட்ட போது அவனின் குதிரை விழிகள் பிதுங்கி அவனின் உயிர் மூச்சு வெளியேறியது. குதிரை இறந்ததும் அதன் வாய் தளர்ந்ததால் கிருஷ்ணர் தன் கையை எளிதாக விடுவித்துக் கொண்டார். கேசி இவ்வாறு விரைவில் மரணமடைந்தது கண்டு கிருஷ்ணர் வியப்படையவில்லை. ஆனால் தேவர்கள் ஆச்சரியப்பட்டு, அவரை பாராட்டும் வகையில் ஆகாயத்திலிருந்து பூக்களைத் தூவினார்கள்.

அக்ரூரர் விருந்தாவனத்திலிருந்து திரும்பும்போது யமுனை நதியிலிருந்த விஷ்ணு லோகத்தைக் காணல்

கம்சன் தனுர் யாகம் ஒன்றினைச் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தான். அதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவிற்கு அழைத்து வருமாறு அக்ரூரரை அனுப்பினான். கிருஷ்ணரும் பலராமரும் மதுராவிற்கு வந்தபின் அவர்களைக் கொல்வதென்று முடிவெடுத்தான். அக்ரூரர் கம்சனின் நம்பிக்கைக்குரிய நண்பனாக இருந்தார். அதேவேளை அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிக உயர்ந்த பக்தருமாவார். விருந்தாவனம் சென்ற அக்ரூரர் கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவிற்கு கம்சனால் அழைக்கப்பட்டிருந்த செய்தியைக் கூறினார்.

கிருஷ்ணரும் பலராமரும் மதுராவிற்குச் செல்கிறார்கள் என்பதை அறிந்த கோபியர்கள் கவலையடைந்தார்கள். தம்மை விட்டுக் கிருஷ்ணர் பிரிவதை எண்ணி மிகவும் வருந்தினார்கள். கிருஷ்ண, பலராமர் ஆகியோருடன் மேலும் சில கோபாலர்களும் தனுர் யாகத்தைக் காண்பதற்காக மதுரா செல்லப் புறப்பட்டார்கள். சூரியன் உதயமானதும் அக்ரூரர் நீராடி முடித்து, தேரில் ஏறி, கிருஷ்ணருடனும் பலராமருடனும் மதுராவுக்குப் புறப்பட்டார். நந்த மகாராஜாவும் மற்ற ஆயர்களும் மாட்டு வண்டிகளில் தயிர், பால், நெய் போன்ற பால் பண்டங்களை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணர் மற்றும் பலராமர் சென்ற தேரைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.

கோபியர்களெல்லாம் கிருஷ்ணரும் பலராமரும் வீற்றிருந்த தேரைச் சூழ்ந்து கொண்டு வழியை மறைக்க வேண்டாமென்று அவர்கள் கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தாமல், கண்களில் பரிதாபத்துடன் கிருஷ்ணரையும் பலராமரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கோபியரின் துயரம் கிருஷ்ணரை வெகுவாகப் பாதித்தது. ஆனால் மதுராவிற்குச் செல்வதை அவர் தன் முக்கிய கடமையாகக் கருதினார். ஏனெனில் கிருஷ்ணர் மதுரா சென்றால்தான் கம்சனை வதம் செய்ய முடியும். எனவே கிருஷ்ணர் கோபியருக்கு சமாதான வார்த்தைகள் கூறி, அவர்கள் வருந்தத் தேவையில்லை, தன் கடமையை முடித்துவிட்டு விரைவில் திரும்புவதாகவும் கூறினார். ஆனாலும் அவர்கள் வழியை விட்டு விலகுவதாகக் காணவில்லை.

என்றாலும் தேர் புறப்படத் தொடங்கி, மேற்கு நோக்கிச் சென்றது. தேரின் மேலிருந்த கொடி கண்ணுக்குத் தெரிந்த வரை அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அக்ரூரரும் பலராமரும் உடனிருக்க, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யமுனை நதியின் கரையை நோக்கி மிகுந்த வேகத்துடன் தேரைச் செலுத்தினார். யமுனையில் நீராடிய மாத்திரத்தில் ஒருவன் தன் பாவச் சுமைகளைக் களையலாம்.

கிருஷ்ணரும் பலராமரும் நதியில் நீராடி முகம் கழுவிக் கொண்டார்கள். யமுனையின் பளிங்கு போன்ற தெளிவான நீரைச் சிறிது அருந்தி விட்டு, அவர்கள் இருவரும் மீண்டும் தேரில் அமர்ந்திருந்தார்கள். உயர்ந்த மரங்களின் நிழலில் தேர் நின்று கொண்டிருந்தது. பின்னர் அக்ரூரர் அவர்களிடம் அனுமதி பெற்று, யமுனையில் நீராடச் சென்றார். வேத முறையின் படி ஒருவன் நதியில் நீராடியபின் இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

அக்ரூரர் இவ்வாறு நதியில் நின்ற போது அவர் திடீரென்று கிருஷ்ணரும் பலராமரும் நீரில் நின்று கொண்டிருக்கக் கண்டார். இது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் கிருஷ்ணரும் பலராமரும் தேரில் உட்கார்ந்திருப்பதை அவர் நன்கறிவார். எனவே அவர் குழப்படடைந்து, அவ்விரு சிறுவர்களும் எற்கிருந்தார்களென்பதைப் பார்க்க நீரிலிருந்து வெளியேறினார். அவர்களிருவரும் முன்பு போலவே தேரில் அமர்ந்திருக்கக் கண்டு அவர் மேலும் ஆச்சரியமடைந்தார். அவர்களைத் தேரின் மேல் பார்த்தபோது, நீரில் அவர்களைக் கண்டது உண்மைதானா என்று அவர் எண்ணமிடலானார்.

எனவே அவர் மீண்டும் நதிக்குச் சென்றார். இம்முறை அவர் நதியில் கிருஷ்ணரையும் பலராமரையும் தவிர பல்வேறான தேவர்களையும், சித்தர்களையும், சாரணர்களையும், கந்தவர்களையும் கண்டார். அவர்கள் எல்லோரும் பிரபுவின் முன் நின்றிருந்தார்கள். பிரபு நீரில் படுத்திருந்தார். ஆயிரம் தலைகளைக் கொண்ட சேஷ நாகரையும் அக்ரூரர் கண்டார். சேஷ நாகப் பிரபு நீல நிற ஆடைகளை அணிந்திருந்தார். அவரின் கழுத்துக்கள் பால் வண்ணமாகக் காட்சியளித்தன. சேஷ நாகரின் வெள்ளைக் கழுத்துக்கள் பனி மூடிய மலைச் சிகரங்களைப் போலவும் தோன்றின. சேஷ நாகரின் வளைவான மடியின் மேல் கிருஷ்ணர் நான்கு கைகளுடன் நிதானமாக அமர்ந்திருப்பதை அக்ரூரர் கண்டார்.

பலராமர் சேஷ நாகராவும் கிருஷ்ணர் மகா விஷ்ணுவாகவும் உரு மாறி அக்ரூரருக்குக் காட்சியளித்தார்கள். புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் நான்கு கைகளுடன் மிக அழகாகப் புன்னகைத்திருப்பதை அக்ரூரர் கண்டார். பிரபுவின் தரிசனத்தால் எல்லோரும் மகிழ்ந்திருந்தார்கள். அவரும் மிகுந்த பிரியத்துடன் எல்லேரையும் நோக்கிக் கொண்டிருந்தார். விஷ்ணு மூத்திக்குரிய விசேஷ சின்னங்களான சங்கு, சக்கரம், கதை, தாமரை, ஆகியவற்றை நான்கு கைகளிலும் ஏந்தி அவர் மிக அழகாகக் காட்சியளித்தார். விஷ்ணுவுக்கு உரித்தான குறிகள் அவரின் மார்பில் விளங்கின.

பிரபுவின் நெருங்கிய தோழர்களும், நான்கு குமாரர்களுமான, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோரும், சுனந்தர், நந்தர் போன்ற மற்றத் தோழர்களும், பிரம்மா, சிவன் போன்ற தேவர்களும் பிரபுவைச் சூழ்ந்திருப்பதை அக்ரூரர் கண்டார். மகா பண்டிதர்களான ஒன்பது மகரிஷிகளும் அங்கிருந்தார்கள். பிரகலாதர், நாரதர் போன்ற பெரும் பக்தர்கள் திறந்த உள்ளங்களுடனும், புனிதமான சொற்களாலும் பிரபுவைத் துதித்துக் கொண்டிருந்தார்கள். புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் பரமான ரூபத்தைக் கண்டவுடன் அக்ரூரர் மகிழ்ச்சியில் திளைத்தவராய் பக்தி மேலீட்டால் உடல் முழுவதும் பரமாhனந்தம் பரவுவதை உணர்ந்தார். அவர் கண நேரம் திகைப்படைந்தாலும், உணர்வைத் தெளிவாக்கிக் கொண்டு பகவானின் முன் தலை வணங்கிக், கைகளைக் கூப்பியபடி, நெகிழ்ந்த குரலில் பிரார்த்திக்கலானார்.

பூ வியாபாரிக்கு அனுக்கிரகம் அளித்தல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் மதுராவின் வீதிகளில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது சுதாமா என்ற பெயருடைய பூக்கடைக் காரரிடம் சென்றார்கள். அவர்கள் கடையை அணுகியதும் பூ வியாபாரி வெளியே வந்து மிகுந்த பக்தியுடன் அவர்களின் காலில் விழுந்து வணங்கினார். பின், கிருஷ்ணரையும் பலராமரையும் தகுந்த ஆசனங்களில் இருக்கச் செய்து, உதவியாளர்களைப் பூவும் தாம்பூலமும் கொண்டு வரும்படி பணித்தார். வியாபாரியின் வரவேற்பால் கிருஷ்ணர் மிகவும் திருப்தி அடைந்தார்.

மிகுந்த பணிவுடன் பூ வியாபாரி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தார்: அன்பான பிரபுவே, நீர் என் இருப்பிடத்துக்கு வந்திருப்பதால் என் மூதாதையர்களும், வணக்கத்துக்குரிய பெரியவர்களும் முக்தி அடைந்தவர்களாக வேண்டும். இப் பிரபஞ்சத்தில் காரணங்களுக் கெல்லாம் காரணமானவர் நீரே. ஆனால் உமது பக்தர்களைப் பாதுகாத்து, அசுரர்களை அழித்து, இவ்வுலக வாசிகளுக்கு நன்மையளிப்பதற்காக உமது சக்திகளுடன் நீர் வந்திருக்கிறீர்.

நண்பரென்ற முறையில் எல்லா உயிர் வாழிகளையும் சமமாக நோக்குகிறீர். நீர் பரமாத்மா. நண்பன் - பகைவன் என்ற வேறுபாடு உமக்கில்லை. என்றாலும் உமது பக்தர்களுக்குப் பக்தியில் சிறப்புப் பலன்களை நீர் வழங்குகிறீர். பிரபுவே, நான் என்ன செய்ய வேண்டும், கட்டளையிடும். நான் உமது நிரந்தர சேவகன். ஏதாவது செய்ய நீர் அனுமதித்தால் நான் தன்யனாவேன். இவ்வாறு சுதாமா பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தார்.

கிருஷ்ணரும் பலராமரும் தன் இருப்பிடத்தில் வரப்பெற்ற சுதாமா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதனால் தனக்கு மிகவும் பிடித்தமான மலர்களைக் கொண்டு மிக அழகாக இரண்டு மாலைகளைத் தொடுத்து அவர்களுக்கு அர்ப்பித்தார். அவருடைய உண்மையான பக்தித் தொண்டை கிருஷ்ணரும் பலராமரும் மெச்சினார்கள்.

சரணடையும் ஆத்மாக்களுக்குத் தாம் எப்போதும் வழங்கும் ஆசிகளைக் கிருஷ்ணர் சுதாமாவுக்கு வழங்கினார். சுதாமா, தாம் எப்போதும் கிருஷ்ணரின் நிரந்தர சேவகராக இருக்க வேண்டுமென்றும், அப்படிப்பட்ட பக்தித் தொண்டின் மூலம் பிற உயிர்களுக்கும் சேவை செய்ய வேண்டுமென்றும் பிரார்த்தித்தார். பூ வியாபாரியிடம் திருப்தியடைந்த கிருஷ்ணர், அவர் வேண்டிய வரங்களுக்கான ஆசிகளை நல்கியது மட்டுமன்றி அதற்கும் மேலாக எல்லா சுக போகங்களையும், நீண்ட ஆயுளையும் வழங்கினார்.

கம்சனின் வேலையாளை சிரச்சேதம் செய்தல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் மதுரா நகரின் வீதிகளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு சலவைத் தொழிலாளியைக் கண்டார்கள். அவன் உடுப்புகளுக்குச் சாயம் போடுபவன். கிருஷ்ணர் அவனிடம் சில நேர்த்தியாகச் சாயம் போடப்பட்ட உடுப்புகளைக் கொடுத்தால் அவனுக்கு எல்லா நலன்களும் பெருகுமென்று அவனிடம் கூறினார். கிருஷ்ணரிடம் உடுப்புக்கள் இல்லையென்று இல்லை. அவருக்கு உடுப்புக்கள் தேவைப்படவுமில்லை. ஆனால் அவர் வேண்டுவதைக் தர எல்லோரும் தயாராக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துவதற்காகவே அவ்வாறு கேட்டார். கிருஷ்ணர் வேண்டுவதைத் தர எல்லோரும் முன் வர வேண்டும். அதுவே கிருஷ்ண உணர்வு.

துரதிஷ்ட வசமாக அவன் கம்சனின் வேலையாளாக இருந்ததால் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரின் வேண்டுகோளை அவன் புரிந்து கொள்ளவில்லை. இது சகவாச தோஷத்தால் ஏற்படுவது. அவனுக்கு எல்லா நலன்களையும் தருவதாக வாக்களித்த முழுமுதற் கடவுளுக்கு அவன் உடனே உடுப்பைக் கொடுத்திருக்கலாம். பாவாத்மாவான அந்த அரக்கன் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக அவன் கோபம் கொண்டு அரசனுக்குரிய ஆடையை நீ எப்படிக் கேட்கலாம்? என்று கேட்டான். பின் அவன் கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் ஆலோசனை கூறினான்: சிறுவர்களே, இனி இவ்வாறு அரசனுக்குரிய ஆடையைக் கேட்கும் அகம்பாவச் செயலைச் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் அரசனின் ஆட்கள் உங்களைக் கைது செய்து தண்டனை வழங்குவார்கள். நீங்கள் மிகவும் துன்பப்பட நேரிடும். எனக்கு இந்த அனுபவம் உண்டு என்று கூறினான்.

இதைக் கேட்டதும் தேவகி நந்தனான கிருஷ்ணர், சலவையாளிடம் மிகுந்த கோபம் கொண்டு அவனைத் தம் கையால் ஓங்கி அடித்து, அவனைச் சிரச் சேதம் செய்தார். அவன் பூமியில் இறந்து விழுந்தான். கிருஷ்ணரின் ஒவ்வொரு அங்கமும் அவர் விரும்புவது போல் செயல் படக்கூடியதென்பதை இது நிரூபிக்கின்றது. வாளின் உதவியின்றி கையாலேயே அவனின் தலையை அவர் கொய்தார். அவர் எது செய்ய நினைத்தாலும் வெளிப் பொருட்களின் உதவியின்றிச் செய்யக் கூடியவர். இந்தக் கோர நிகழ்சி;சிக்குப் பின் அவனது நண்பர்கள் துணிகளைக் கீழே போட்டுவிட்டுக் கலைந்து சென்றார்கள். கிருஷ்ணரும் பலராமரும் அவற்றை எடுத்துத் தம் விருப்பம்போல் அணிந்து கொண்டு, மற்றவற்றைத் தம் கோபால நண்பர்களுக்கு வழங்கினார்கள். வேண்டாத உடுப்புக்களை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார்கள்.

தையல்காரனுக்கு முக்தி வழங்குதல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கம்சனின் வேலையாளைச் சிரச்சேதம் செய்தபின் பலராமருடனும் அவர்களது கோபால நண்பர்களுடனும் மதுராவின் வீதிகளில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தனான தையல்காரன் ஒருவன் சில அழகிய ஆடைகளைத் தைத்துக் கொண்டு வந்தான். இவ்வாறு அழகாக உடுத்துக் கொண்ட கிருஷ்ணரும் பலராமரும் அழகிய வண்ண ஆடைகளைத் தரித்த யானைகளைப் போல் காட்சியளித்தார்கள்.

தையல்காரனின் செயல் கிருஷ்ணருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனுக்கு ஸாருப்ய முக்தி அளித்தார். அதாவது, அவன் உடலை நீத்தபின் வைகுண்டத்தில் நான்கு கைகளுடைய நாராயணரின் ரூபத்தைப் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பான். அவன் வாழ்நாள் முழுவதும் புலனின்பங்களை நன்கு அனுபவிப்பதற்குத் தேவையான செல்வத்தைப் பெறுவானென்றும் கிருஷ்ணர் வரம் அருளினார்.

இந் நிகழ்ச்சியின் மூலம், கிருஷ்ண உணர்வுள்ள பக்தர்கள் இகவுலக இன்பங்களிலோ, புலன் திருப்தியிலோ குறைந்தவர்களாக மாட்டார்களென்பதைக் கிருஷ்ணர் நிரூபித்துக் காட்டினார். இவ்வுலகில் அவர்கள், இகவுலக வாழ்வை நீத்தபின் வைகுண்ட லோகம் அல்லது கிருஷ்ணலோகம், அல்லது கோலோக விருந்தாவனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

கூனியாக இருந்த பெண்ணை அழகிய இளம் பெண்ணாக மாற்றுதல்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் பூ வியாபாரியின் இடத்தை விட்டுச் சென்றபின், கூனுடைய ஒரு இளம் பெண் சந்தனக் குழம்பு நிரம்பிய ஒரு கோப்பையைத் தெருவில் எடுத்துச் செல்வதைக் கண்டார்கள். ஆனந்தத்தின் இருப்பிடமான கிருஷ்ணர் அந்தக் கூனியிடம் ஹாஸ்யமாகப் பேசித் தம் நண்பர்களை மகிழ்விக்க விரும்பினார். கிருஷ்ணர் அவளிடம் கூறினார்: உயர்ந்த இளம் பெண்ணே நீ யார்? யாருக்காக இச் சந்தனத்தை எடுத்துச் செல்கிறாய்? இதை நீ எனக்குத் தருவது பொருந்துமென நான் எண்ணுகிறேன். அவ்வாறு செய்தால் நிச்சயமாக உனக்கு நண்மை உண்டாகும். எனக் கூறினார்.

முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் அக் கூனியைப் பற்றிய எல்லா விபரங்களையும் அறிந்திருந்தார். அவளை அவ்வாறு கேட்டபோது, ஒரு அசுரனுக்குச் சேவை செய்வதில் பயனில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். அதைவிட கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் சேவை செய்தால் பாவங்களெல்லாம் களையப் பெறலாம்.

அந்தப் பெண் கிருஷ்ணரிடம் கூறியதாவது: அன்புள்ள சியாம சுந்தரா, நான் கம்சனின் வேலைக்காரி. அவருக்கு நான் தினமும் சந்தனம் தயாரித்து அளித்து வருகிறேன். இவ்வளவு நேர்த்தியான சந்தனத்தை நான் கொடுப்பதால் கம்சன் என்னிடம் திருப்தி கொண்டிருக்கிறார். ஆனால் அந்தச் சந்தனத்தைப் பெறுவதற்கான தகுதியை உடையவர் சகோதரர்களான உங்களிருவரையும் தவிர வேறு யாரும் இருக்க முடியாதென்பதை நான் இப்போது உணர்கிறேன். என்று கூறினாள்.

கிருஷ்ணர் மற்றும் பலராமரின் அங்க லட்சணங்களாலும், புன்னகையாலும், கண் பார்வையாலும், மற்ற அம்சங்களாலும் கவரப்பட்ட அக்கூனிப் பெண் சந்தனக் குழம்பை எடுத்து அவர்களின் உடல்களின் மீது மிகுந்த பக்தியுடனும் திருப்தியுடனும் பூசத் தொடங்கினாள். கிருஷ்ணரும் பலராமரும் சந்தனம் பூசப்பட்டதும் மேலும் அழகாகக் காட்சியளித்தார்கள். இந்தத் தொண்டு கிருஷ்ணரை மிகவும் மகிழ்வித்தது. அவளுக்கு என்ன வெகுமதி அளிக்கலாமென்று கிருஷ்ணர் சிந்திக்கலானார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் கால் விரல்களால் கூனியின் பாதங்களை அழுத்தியபடி, கைவிரல்களால் அவளின் முகவாயைத் தாங்கிக் கொண்டு, ஒரே அசைவில் அவளின் கூனை நிமிர்த்தினார். அவள் கூன் நீங்கப் பெற்று நிமிர்ந்து நின்றபோது ஓர் அழகிய இளம் பெண்ணாகக் காட்சியளித்தாள். கூனியான அப்பெண்ணின் சேவையில் திருப்தியடைந்த கிருஷ்ணரின் கைகள் பட்ட உடனே அவள் பெண்களில் சிறந்த அழகியாக உருமாறினாள். அவளின் பக்தி கிருஷ்ணரைக் கவர்ந்தது. கிருஷ்ணருக்குச் சேவை செய்யும் பக்தன் உடனடியாக மிகவுயர்ந்த நிலையை அடைகிறானென்பதை இந்நிகழ்ச்சி நிரூபிக்கின்றது.

யாகமேடையில் வில்லை முறித்தல்

கம்சன் தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். இந்த யாகத்தின் நோக்கத்தைக் குறிப்பால் உணர்த்துவதற்காக கம்சன் யாக பீடத்தினருகில் மாபெரும் வில் ஒன்றை வைத்திருந்தான். அந்த வில் மிகப் பெரிதாகவும், அதிசயமாகவும், வானவில்லைப் போன்றதாகவும் இருந்தது. யாகப் பிரதேசத்தினுள் அந்த வில் கம்சனால் நியமிக்கப்பட்ட காவலர்களின் பாதுகாப்பில் இருந்தது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் வில்லின் அருகில் சென்றபோது, காவலர்கள் அவர்களை எச்சரித்தார்கள். ஆனால் கிருஷ்ணர் அதைச் சட்டை செய்யவில்லை. அவர் பலவந்தமாக உள்ளே சென்று வில்லைத் தனது இடது கையில் எடுத்தார். அங்கு குழுமியிருந்த மக்களின் முன்பு கிருஷ்ணர் வில்லில் நாணை ஏற்றி, வில்லை வழைத்து இரு பகுதிகளாக, யானை கரும்பை ஒடிப்பது போல் ஒடித்தார். கிருஷ்ணரின் சக்தியை மக்கள் வியந்து பாராட்டினார்கள்.

வில் ஒடிந்த போது எழுந்த ஒலி பூமியிலும் ஆகாயத்திலும் எங்கும் எதிரொலித்தது. அந்த ஒலியைக் கம்சனும் கேட்டான். நடந்ததை அறிந்தபோது அவன் தன் உயிருக்காக அஞ்சினான். வில்லைக் காவல் காத்தவன் மிகுந்த கோபமடைந்து, கிருஷ்ணரைப் பிடிக்குமாறு ஏவலர்களுக்குக் கட்டளையிட்டபடி தானும் அவரை நோக்கிப் பாய்ந்தான். பிடியுங்கள், கொல்லுங்கள் என்று கத்தினான்.

கிருஷ்ணரையும் பலராமரையும் அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். காவலர்களின் அபாயகரமான எண்ணங்களை உணர்ந்ததும் கிருஷ்ணரும் பலராமரும் மிகுந்த கோபம் கொண்டு, ஒடிந்த வில்லின் இரு பகுதிகளையும் கையில் ஏந்தியபடி காவலர்களின் தாக்குதலைச் சமாளித்தார்கள்.

இந்தக் குழப்பம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காவலர்களுக்கு உதவியாக கம்சன் மேலும் சில படைவீரர்களை அனுப்பி வைத்தான். கிருஷ்ணரும் பலராமரும் அவர்கள் எல்லோரையும் போரில் கொன்றார்கள். இதன் பின் கிருஷ்ணரும் பலராமரும் யாகப் பகுதிக்குள் மேலும் பிரவேசிக்காமல் வாயிலின் வழியாகத் தம் இருப்பிடத்துக்குத் திரும்பினார்கள்.

குவாலயபீட யானையைக் கொல்லல்

கம்சன் தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாலும் அதற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் கொல்வதுதான் கம்சனின் திட்டம். எனவே அவன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மல்யுத்தப் போட்டி ஒன்றிற்கான ஏற்பாட்டைச் செய்தான். மல்யுத்தக் களம் நேர்த்தியாகத் துப்பரவு செய்யப்பட்டு கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. போட்டி நடக்கவிருந்ததைப் பறையடித்து அறிவித்தார்கள். அரசர்கள், பிராமணர்கள், சத்திரியர்கள் என்று பல் வேறான உயர் பிரிவினருக்குத் தனியான ஆசனங்கள் அமைக்கப் பட்டிருந்தன.

இறுதியில் கம்சன் வந்து சேர்ந்தான். அவனுடன் பல மந்திரிகளும், பிரதானிகளும், காரியஸ்தர்களும் வந்து அமர்ந்தார்கள். கம்சன் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்தான். எல்லா ஏற்பாடுகளும் நிறைவேறியபின் சபையின் முன் தம் திறமைகளைக் காட்ட வந்திருந்த மல்லர்கள் கோதாவுக்குள் இறங்கினார்கள். அவர்கள் பிரகாசமான ஆபரணங்களையும், ஆடைகளையும் அணிந்திருந்தார்கள். அவர்களுள் பிரசித்தி பெற்ற மல்லர்களான சாணூரன், முஷ்டிகன், சாலன், கூடன், தோசாலன் ஆகியவர்களும் இருந்தனர்.

நந்தரின் தலைமையில் வந்திருந்த ஆயர் குல மக்களையெல்லாம் கம்சன் வரவேற்றான். அவர்களும் தாங்கள் கொண்டு வந்திருந்த பால் பண்டங்களைக் கம்சனுக்குப் பரிசாக அளித்துத் தத்தம் ஆசனங்களில் அமர்ந்தார்கள். காலையில் நீராடி, மற்றக் காலைக் கடன்களை முடித்துவிட்டுக் கிருஷ்ணரும் பலராமரும் தயாராக இருந்தபோது மல்யுத்தக் களத்தில் ஒலித்த பறைகளின் ஓசை அவர்களின் காதில் விழுந்தது. உடனே வேடிக்கை பார்க்க அவ்விடத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

மல்யுத்தக் களத்தை அவர்கள் அடைந்தபோது அங்குள்ள வாயிலில் குவாலயபீட என்ற மாபெரும் யானையொன்று நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டார்கள். பணியாட்கள் யானையைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். வழியை மறைக்கும்படியாக வேண்டுமென்றே காவலர்கள் யானையை நிறுத்தியிருந்ததைக் கிருஷ்ணர் கண்டார். காவலர்களின் நோக்கத்தை உணர்ந்த கிருஷ்ணர் யானையைத் தாக்குவதற்கு முன்பாகத் தம் உடைகளை இறுக்கிக் கொண்டார். பின், மேகம் போல் கர்ஜிக்கும் குரலில் யானையின் காவலனிடம் கிருஷ்ணர் பேசினார்: கயவனே, வழியை மறித்தால் உன்னையும் உன் யானையையும் யமலோகம் அனுப்புவேன்.

கிருஷ்ணரால் அவமதிக்கப்பட்ட காவலன் கோபமடைந்து ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அவரைத் தாக்கும்படி யானையை ஏவினர். யானை கிருஷ்ணரை நோக்கி முன்னேறியது. அவரை நோக்கி விரைந்து வந்து துதிக்கையால் அவரைப் பிடிக்க முயற்சித்தது. ஆனால் கிருஷ்ணர் வெகு சாமர்த்தியமாக யானையின் பின்பக்கம் சென்று தப்பித்துக் கொண்டார். தன் துதிக்கைக்கு அப்பால் பார்க்க முடியாத யானையால் பின்பக்கம் ஒளிந்திருந்த கிருஷ்ணரைக் காணமுடியவில்லை. என்றாலும் அவரைப் பிடிக்கும் நோக்கத்துடன் துதிக்கையால் துளாவியது. மீண்டும் கிருஷ்ணர் விரைவாக இடம்மாறி யானையின் பிடியிலிருந்து தப்பினார். இம்முறை அவர் யானையின் வாலைப் பிடித்து இழுத்தார்.

மிகுந்த பலத்துடன் இழுத்ததால் கருடன் பாம்பை இழுத்துச் செல்வதுபோல் கிருஷ்ணர் யானையைச் சிறிது தூரம் இழுத்துச் சென்றார். கிருஷ்ணர் சிறு வயதில் கன்றுகளை வாலைப் பிடித்து இழுத்தது போல் யானையையும் வாலைப் பிடித்து அப்படியும் இப்படியுமாக இழுத்தார். அதன்பின் அவர் யானையின் முன்புறம் சென்று அதன் தாடையில் பலமாக அடித்தார். அடித்தபின் அவர் மீண்டும் யானையின் பார்வையிலிருந்து மறைந்து அதன் பின்புறமாகச் சென்று, கீழே குனிந்து, அதன் கால்களிடையே புகுந்து அதைத் தடுமாறி விழச் செய்தார்.

அவ்வாறு செய்துவிட்டுக் கிருஷ்ணர் உடனே விலகிக் கொண்டார். அவர் கீழேயே இருப்பதாக எண்ணிய யானை அவரைக் கொல்லும் நோக்கத்துடன் கொம்பை அவர்மீது பாய்ச்சியதாக எண்ணிக்கொண்டு தரையில் ஆழமாகச் செலுத்தியது. யானை மிகவும் அலைக்களிந்து கோபமுற்றிருந்தாலும் அதன் பாகன் அதை மேலும் விரட்டினான். யானை மதம் கொண்டு கிருஷ்ணரை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்தது.

கிருஷ்ணர் யானையின் துதிக்கையைப் பிடித்து இழுத்தார். யானையும் பாகனும் கீழே விழுந்தபோது கிருஷ்ணர் யானையின் மீது தாவிக் குதித்து ஏறி, யானையையும் பாகனையும் கொன்றார். யானையைக் கொன்ற பின் கிருஷ்ணர் அதன் தந்தத்தை எடுத்துத் தன் தோளின் மேல் வைத்துக் கொண்டார். வியர்வைத் துளிகளும் யானையின் இரத்தத் துளிகளும் அவரின் மேனியை அழகு செய்ய, கிருஷ்ணர் ஆனந்த மயமாகக் காட்சியளித்தார். அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் கிருஷ்ணரைப் புகழ்ந்து பாராட்டினார்கள்.

மல்யுத்தப் போட்டியில் பல மல்லர்களைக் கொல்லுதல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குவாலயபீட யானையைக் கொன்றபின் பலராமருடனும் நண்பர்களுடனும் மல்யுத்தக் களத்தினுள் பிரவேசித்தபோது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் செய்த செயல்கள் பற்றி மக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மல்யுத்தப் போட்டி தொடங்க இருப்பதை அறிவிக்கும் வாத்ய முழக்கங்கள் அவர்களின் செவிகளில் விழுந்தன. பிரசித்தி பெற்ற மல்யுத்த வீரனான சாணூரன் கிருஷ்ணரிடமும் பலராமரிடமும் பேசினான்:

அன்பான கிருஷ்ணா, பலராமா, உங்கள் முந்திய செயல்கள் பற்றி நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். நீங்கள் பெரும் வீரர்கள். எனவே அரசர் உங்களை அழைத்துள்ளார். அரசரும் இங்கு கூடியுள்ளவர்களும் உங்களின் மல்யுத்த திறமைகளைக் கான ஆவலாயிருக்கிறார்கள். ஒரு குடிமகன் எப்போதும் அரசனின் மனதையறிந்து பணிவுடன் நடக்க வேண்டும்.


அவ்வாறு நடக்கும் குடிமகன் எல்லா நலன்களையும் பெறுவான். பணியாமல் நடப்பவன் அரசனின் கோபத்திற்கு ஆளாகித் துன்பம் அனுபவிக்கிறான். நீங்கள் ஆயர் குலச் சிறுவர்கள். பசுக்கள் மேய்க்கும்போது ஒருவரோடு ஒருவர் மல்யுத்தம் செய்து மகிழ்வதாகக் கேள்விப் பட்டிருக்கிறோம். எனவே எங்களுடன் நீங்கள் மல்யுத்தப் போட்டியயில் கலந்து கொண்டால் இங்குள்ள மக்களும் அரசனும் மகிழ்ச்சியடைவார்கள். என்று சாணூரன் கூறினான்.

சாணூரன் கூறியதன் நோக்கத்தைக் கிருஷ்ணர் புரிந்து கொண்டார். ஆனால் காலத்தையும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு கிருஷ்ணர் பேசினார்: நீ போஜராஜனின் பிரஜை, காட்டில் வாழும் நாங்களும் அவர்களின் பிரஜைகளே. இயன்றவரை அரசனைத் திருப்திப் படுத்த முயல்கிறோம். மல்யுத்தத்திற்கு அவர் எங்களுக்கு வாய்ப்பளித்தது அவர் எங்களிடம் காட்டும் கருணையாகும். ஆனால் நாங்கள் சிறுவர்கள். சில வேளைகளில் விருந்தாவனத்தில் எங்கள் வயதினரான நண்பர்களுடன் நாங்கள் விளையாடியதுண்டு. ஒரே வயதும் பலமும் கொண்டவர்களோடு போட்டியிடுவதில் நன்மையுண்டு. ஆனால் உங்களைப் போன்ற மாமல்லர்களோடு நாங்கள் போட்டியிடுவது பார்ப்பவர்களுக்கு நன்றாயிருக்காது. அவர்களின் தர்மத்துக்கும் அது முரண்படுவதாகும். என்று கூறினார்.

பிரசித்தி பெற்றவர்களும் பலவான்களுமான அந்த மல்லர்கள் சிறுவர்களான பலராமரையும் கிருஷ்ணரையும் போட்டிக்கு அழைப்பது முறையல்லவென்பதைக் கிருஷ்ணர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலாக சாணூரன் கூறினான்: அன்பான கிருஷ்ணா, நீர் குழந்தையோ இளைஞனே அல்லவென்பதை நாங்கள் அறிவோம். நீரும் உமது மூத்த சகோதரனான பலராமரும் எல்லோரையும் விட உயர்ந்தவர்கள். குவாலயபீட என்ற யானையைக் கொன்றிருக்கிறீர்கள். மற்ற யானைகளிடம் சண்டையிட்டு அவற்றைத் தோற்கடிக்கக் கூடிய யானையை அதிசயிக்கத் தக்க வகையில் நீர் கொன்றீர். இதிலிருந்து நீர் பலம் மிக்கவரென்பது தெரியவருகிறது.

எனவே எங்களில் பலம் மிகுந்தவர்களுடன் யுத்தம் செய்யும் தகுதி உமக்கும் உமது மூத்த சகோதரனான பலராமருக்கும் உண்டு. நான் உம்முடனும் பலராமர் முஷ்டிகனுடனும் சண்டையிடலாம். என்று சாணூரன் கூறினான். கம்சனின் மல்லர்கள் தம் விருப்பத்தைத் தெரிவித்ததும், மது என்ற அரக்கனைக் கொன்றவராகிய முழுமுதற் கடவுள் சாணூரனை எதிர்த்தும், ரோகிணியின் மகனான பலராமர் முஷ்டிகனை எதிர்த்தும் மல்யுத்தம் செய்தார்கள். கிருஷ்ணரும் சாணூரனும், அதேபோல் பலராமரும் முஷ்டிகனும், கையோடு கை, காலோடு கால் பின்னிக் கொண்டு, வெற்றி பெறும் நோக்கத்தோடு ஒருவரை மற்றவர் அழுத்த முயற்சித்தார்கள்.

உள்ளங் கைகளையும் கால்களையும், தலைகளையும், மர்ர்புகளையும் பிணைத்துக் கொண்டு, ஒருவரையொருவர் அடித்துத் தள்ளியபோது சண்டையின் வேகம் அதிகரித்தது. ஒருவர் மற்றவரைப் பிடித்துத் தரையின் மீது வீழ்த்தினால், மற்றவர் பின்னிருந்து பிடித்து அழுத்த முயற்சித்தனர். படிப்படியாக யுத்தத்தின் வேகம் அதிகரித்தது. பிடிப்பதும், இழுப்பதும், தள்ளுவதுமாக கைகளையும் கால்களையும் பிணைத்துக் கொண்டு சண்டையிட்டார்கள். ஒருவரையொருவர் தோற்கடிக்க முயன்றபோது மல்யுத்தக் கலையின் நுணுக்கங்கள் அத்தனையும் அங்கு வெளிப்படுத்தப்பட்டன.

ஆனால் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குத் திருப்தியில்லை. ஏனெனில் கிருஷ்ணரையும் பலராமரையும் எதிர்த்து மலைபோன்ற உருவமும் பலமும் கொண்ட முஷ்டிகனும் சாணூரனும் போரிடுவது நியாயமல்லவென்று பலர் கருதினார்கள். கிருஷ்ணரிடமும் பலராமரிடமும் அனுதாபம் கொண்ட சிலர், இது அபாயகரமானது. அரசனின் முன்னிலையில் சமமில்லாதவர்களிடையே இப்படி ஒரு போட்டி நடக்கலாகாது, என்று பேசிக் கொண்டார்கள். பார்வையாளர்கள் உற்சாகமின்றி இருந்தார்கள். சபையிலிருந்தவர்கள் தமக்காக கவலைப் படுகிறார்கள் என்பதை அறிந்த பரமாத்மாவாகிய ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் யுத்தத்தைத் தொடராமல் உடனே மல்லர்களை கொல்வதென்று முடிவு செய்தார். கிருஷ்ணர் மற்றும் பலராமரின் பெற்றோர்களான நந்த மகாராஜா, யசோதை, வசுதேவர், தேவகி ஆகியோரும் தம் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடாதென்று கவலையடைந்திருந்தார்கள்.

கிருஷ்ணர் மிகக் கடுமையாக சாணூரனை தன் முஷ்டியால் அடித்தார். சபையோர் ஆச்சரியப்படும் வகையில் அந்த மாபெரும் மல்லன் அதிர்ந்து போனான். கடைசி முறையாக சாணூரன் ஒரு பருந்து மற்றொன்றைத் தாக்குவது போல் கிருஷ்ணரைத் தாக்கினான். ஆனால் மலர்மாலையால் அடிபட்ட யானைபோல் கிருஷ்ணர் சிறிதும் பாதிக்கப் படாமல் இருந்தார். அவர் வேகமாகச் சாணூரனின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு அவனைச் சக்கரம் போல் சுழற்றியபோது, சாணூரன் உயிரிழந்தான். கிருஷ்ணர் அவனைத் தரையில் எறிந்தார். இந்திரனின் கொடியைப் போல் சாணூரன் வீழ்ந்தான்.

அவன் அணிந்திருந்த ஆபரணங்கள் எல்லாம் அங்குமிங்குமாகச் சிதறின. முஷ்டிகனும் பலராமரை அடித்தபோது அவர் மிகுந்த பலத்துடன் பதிலடி கொடுத்தார். முஷ்டிகன் நடுக்கம் கொண்டு இரத்தமாகக் கக்கினான். மிகவும் துன்பப் பட்டவனாய் அவன் உயிரிழந்து புயலில் சரியும் மரம் போலக் கீழே விழுந்தான். மேலும் இரு மல்லர்கள் சண்டையிட முன் வந்தார்கள். பலராமர் அவனை உடனடியாகத் தனது இடது கையால் பிடித்து அனாயாசமாகக் கொன்றார். சாலன் என்ற மல்லன் முன்வந்த போது கிருஷ்ணர் அவனை உதைத்து, அவனின் தலையை உடைத்தார். தோசாலா என்ற மல்லன் சண்டையிட வந்தபோது அவனும் அதே முறையில் கொல்லப் பட்டான்.

இவ்வாறு மாபெரும் மல்லர்கள் யாவரும் கிருஷ்ணர் மற்றும் பலராமரால் கொல்லப்பட்டார்கள். எஞ்சியிருந்த மல்லர்கள் உயிருக்குப் பயந்து கோதாவை விட்டு ஓடினார்கள். கிருஷ்ணரின் நண்பர்களான ஆயர் குலச் சிறுவர்கள் அவரையும் பலராமரையும் அணுகி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களின் வெற்றியைப் பாராட்டினார்கள். அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் கரவொலி எழுப்பினார்கள். அவர்களின் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. பிராமணர்கள் மனமுவந்து கிருஷ்ணரையும் பலராமரையும் புகழ்ந்து பேசினார்கள்.

 கம்சன் வதம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும்; மல்யுத்தக் களத்தினுள் மாபெரும் மல்லர்கள் யாவரையும் கொன்றபின் எஞ்சியிருந்த மல்லர்கள் உயிருக்குப் பயந்து கோதாவை விட்டு ஓடினார்கள். கிருஷ்ணரின் நண்பர்களான ஆயர் குலச் சிறுவர்கள் அவரையும் பலராமரையும் அணுகி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களின் வெற்றியைப் பாராட்டினார்கள். அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் கரவொலி எழுப்பினார்கள். அவர்களின் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. பிராமணர்கள் மனமுவந்து கிருஷ்ணரையும் பலராமரையும் புகழ்ந்து பேசினார்கள்.

கம்சன் மட்டும் வாளாவிருந்தான். அவன் கைதட்டவுமில்லை, கிருஷ்ணரையும் பலராமரையும் வாழ்த்தவுமில்லை. கிருஷ்ண பலராமரின் வெற்றியைப் பாராட்டும் வகையில் முரசுகள் ஒலித்ததை அவன் விரும்பவில்லை. மல்லர்கள் கொல்லப்பட்டதும் எஞ்சியவர்கள் உயிருக்குப் பயந்து ஓடியதும் அவனுக்கு மன வருத்த்தைத் தந்தது. அவன் உடனே முரசுகள் ஒலிக்கப் படுவதை நிறுத்தும்படி கட்டளையிட்டு, தன் நண்பர்களை நோக்கிப் பின் வருமாறு பேசினான்:

வசுதேவரின் இந்த இரு மகன்களும் உடனடியாக மதுராவிலிருந்து விரட்டப்பட வேண்டுமென்று நான் கட்டளையிடுகிறேன். அவர்களுடன் வந்திருக்கும் ஆயர்குலச் சிறுவர்களும் விரட்டப்பட்டு அவர்களின் உடமைகளெல்லாம் பறிக்கப்பட வேண்டும். நந்த மகராஜாவை அவரின் தந்திரமான நடத்தைக்காக உடனே கைது செய்து கொல்ல வேண்டும். அயோக்கியனான வசுதேவனும் உடனடியாகக் கொல்லப் படவேண்டும். என் விருப்பத்திற்கு எதிராக எப்போதும் என் எதிரிகளை ஆதரித்த என் தந்தையான உக்கிரசேனரும் உடனே கொல்லப்பட வேண்டும்.

இவ்வாறு கம்சன் பேசியதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மிகவும் கோபமடைந்து, கணப்பொழுதில் கம்சனின் காவலர்களைக் கடந்து கம்சனை அணுகினார். இதை எதிர்பார்த்திருந்த கம்சன் தன் வாளை உறையிலிருந்து எடுத்துக் கிருஷ்ணரை தாக்க முற்பட்டான். அவன் அப்படியும் இப்படியுமாக வாள் வீசியபோது மிகுந்த பலத்துடன் கிருஷ்ணர் அவனைப் பிடித்துக் கொண்டார். சிருஷ்டி முழுவதற்கும் துணையானவரும், தம் தொப்புளிலிருந்து பிரபஞ்சத்தை உண்டுபண்ணியவருமான முழுமுதற் கடவுள் கம்சனின் கிரீடத்தைக் கீழே தள்ளித் தரையில் உருளச் செய்தார்.

அதன்பின் கம்சனின் நீண்ட தலைமுடியைத் தம் கையில் பிடித்துக் கொண்டு, அவனை ஆசனத்திலிருந்து இழுத்து வந்து மல்யுத்த மேடையின் மீது எறிந்தார். அதன்பின் கிருஷ்ணர் உடனடியாகக் கம்சனின் மார்பின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு அவனை மீண்டும் மீண்டும் ஓங்கி அடித்தார். அவரின் முஷ்டியிலிருந்து புறப்பட்ட அடிகளைத் தாங்க மாட்டாமல் கம்சன் உயிர் நீத்தான். கம்சனின் எட்டு சகோதரர்கள் கொல்லப்படுதல்

கம்சனுக்கு எட்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களுள் மூத்தவர் கங்கர். எல்லோரும் கம்சனுக்கு இளையவர்கள். தம் மூத்த சகோதரனான கம்சன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கொல்லப் பட்டதை அறிந்ததும் அவர்கள் ஒன்று கூடிப் பெருங் கோபத்துடன் கிருஷ்ணரைத் தாக்கிக் கொல்ல விரைந்தார்கள். கம்சனும் அவனின் சகோதரர்களும் கிருஷ்ணரின் தாய் மாமன்மார் ஆவார்கள். அதாவது தேவகியின் சகோதரர்கள். எனவே கிருஷ்ணர் கொன்றது தனது தாய்மாமனான கம்சனை. இது வேதப் பண்பாடுகளுக்குப் புறம்பானது. கிருஷ்ணர் வேதக் கட்டளைகளுக்கு அப்பாற் பட்டவரென்றாலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும் அவர் வேதக் கோட்பாடுகளை மீறுகிறார்.

கம்சனை வேறு யாராலும் கொல்ல முடியாதாகையால் கிருஷ்ணர் அவனைக் கொல்ல வேண்டியதாயிற்று. கம்சனின் எட்டு சகோதரர்களைப் பொறுத்தவரை பலராமர் அவர்களைக் கொன்றார். பலராமரின் தாயாகிய ரோகிணி வசுதேவரின் மனைவியானாலும் கம்சனின் சகோதரி அல்ல. பலராமர் கைக்கெட்டிய ஆயதத்தைக் கொண்டு, சிங்கம், மான் கூட்டத்தை கொல்வது போல் கம்சனின் சகோதரர்களை ஒருவர் பின் ஒருவராகக் கொன்றார். இவ்வாறு கிருஷ்ணரும் பலராமரும், பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷணர் உறுதி செய்ததுபோல், பக்தர்களைக் காத்து, தேவர்களின் பகைவர்களான துஷ்ட அரக்கர்களை அழித்து தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக முழுமுதற் கடவுள் அவதரிக்கிறார் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள்.

உயர் நிலைக் கிரகங்களில் இருந்த தேவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் பாராட்டி மலர் மாரி பொழிந்தார்கள். கம்சன் மற்றும் அவனின் எட்டு சகோதரர்களின் மனைவியர் தம் கணவர்களின் திடீர் மரணத்தால் துக்கமடைந்து, கண்ணீர் வடித்தார்கள். தங்கள் கணவர்களின் உடல்களைக் கைகளில் அணைத்தபடி உரக்கக் கதறி அழுதார்கள். இறந்த சடலங்களுடன் அவர்கள் இவ்வாறு பேசினார்கள்:

அண்பார்ந்த கணவரே, நீங்கள் அன்பு மிகுந்து உங்களைச் சார்ந்தவர்களுக்கு ஆதரவாயிருந்தீர்கள். இப்போது உங்கள் மரணத்துக்குப் பின் நாங்களும் இறந்தவர்களாகி விட்டோம். எங்கள் மங்கலம் பறிக்கப்பட்டு விட்டது. உங்களது மரணத்தால் தனுர் யாகம் போன்ற மங்கள காரியங்களெல்லாம் தடைப்பட்டிருக்கின்றன. அன்புள்ள கணவர்களே, குற்றம் அற்றவர்களிடம் நீங்கள் அநியாயமாக நடந்து கொண்டீர்கள், அதனால் கொல்லப்பட்டீர்கள். நல்லவர்களுக்குத் தொல்லை தருபவர்கள் தண்டிக்கப்படுவது இயற்கை விதி.

கிருஷ்ணர் முழுமுதற் கடவுளென்பது தெரிந்ததே. அவரே எல்லாவற்றின் உன்னத அதிகாரி, உன்னத அனுபவிப்பாளர். எனவே அவரது அதிகாரத்துக்குப் பணியாத எவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அப்படிப்பட்டவனுக்கு உங்களுக்கு நேர்ந்தது போல் மரணம் சம்பவிக்கும். என்று புலம்பினார்கள். தன் மாமிகளிடம் அனுதாபம் கொண்ட கிருஷ்ணர் இயன்றவரை அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார். இறந்த அரச குமாரர்களுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சகோதரியின் மகனாகையால் ஈமச் சடங்குகளை அவரே நேரில் கவனித்தார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் தம்மை குழந்தைகளாக வியாபித்தல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் கம்சனை வதம் செய்துவிட்டு, கம்சனின் சகோதரர்கள் கொல்லப்பட்டதன் பின் கம்சனால் சிறைப்படுத்தப் பட்டிருந்த தம் தாய் தந்தையரான வசுதேவரையும் தேவகியையும் விடுவித்தார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அவர்களின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களின் மகனாகப் பிறந்த காரணத்தால் அவர்கள் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாக நேரிட்டது. ஏனெனில் தேவகியின் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும் என்று வசுதேவர், தேவகியின் திருமண ஊர்வலத்தன்று ஆகாயத்திலிருந்து அசரீரி கூறிற்று. அதன் காரணமாகவே கம்சன் அவர்களைத் துன்புறுத்தினான்.

தேவகியும் வசுதேவரும் கிருஷ்ணர் முழுமுதற் கடவுள் என்பதை நன்கு அறிந்திருந்தார்கள். எனவே கிருஷ்ணர் அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கினாலும் அவர்கள் அவரைத் தழுவிக் கொள்ளாமல் முழுமுதற் கடவுள் சொல்வதைக் கேட்பதற்கு ஆவலாய் நின்றிருந்தார்கள். வசுதேவரும் தேவகியும் மிகுந்த மரியாதையுடன் நின்று கொண்டிருந்ததைக் கண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவர்கள் தம்மையும் பலராமரையும் குழந்தைகளாகக் காணும்படி தம் யோகமாயையை வியாபிக்கச் செய்தார். அதன்பின் வசுதேவர் மற்றும் தேவகியுடன் மிகுந்த மரியாதையுடன் பேசலானார்:

அன்புள்ள தந்தையே, தாயே எங்கள் உயிரைப் பற்றி நீங்கள் இருவரும் மிகவும் கவலைப்பட்டிருந்தாலும், எங்களை உங்கள் குழந்தைகளாக, வளர்ந்து வரும் சிறுவர்களாக, இளைஞர்களாக நீங்கள் காணும் இன்பம் உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. என்று கூறினார்.

வசுதேவரும் தேவகியும் தம் மகன்களான கிருஷ்ணர் மற்றும் பலராமரின் பாதுகாப்பில் மிகுந்த கவலை கொண்டிருந்தார்கள். அதன் காரணமாகவே கிருஷ்ணர் தோன்றியவுடன் அவரை நந்தமகாராஜாவின் இல்லத்திற்கு இடம் மாற்றினார்கள். பலராரும் தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றப்பட்டார். கிருஷ்ணரும் பலராமரும் பத்திரமாக இருக்க வேண்டுமென்று வசுதேவரும் தேவகியும் எண்ணியதால் அவர்களின் குழந்தைப் பருவ லீலைகளை உடனிருந்து கண்டு மகிழ முடியாமற் போயிற்று.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் கூறினார்: துரதிஷ்ட வசமாக எங்கள் விதியின்படி, நாங்கள் எங்கள் பெற்றோர்களின் பார்வையில் பால்ய காலத்தை எங்கள் வீட்டில் கழித்து மகிழ முடியாமல் போயிற்று. அன்புள்ள தாய் தந்தையரே, பௌதிக இருப்பின் நன்மைகளைப் பெற்று அனுபவிக்கும் வாய்ப்பைத் தரும் இவ்வுடலை அளித்த பெற்றோர்களுக்கு ஒருவன் செலுத்த வேண்டிய நன்றிக் கடன் உண்டு. வேதக் கோட்பாட்டின்படி, மனித வாழ்வு ஒருவன் மதச் சடங்குகளை நிறைவேற்றவும், விருப்பங்களைப் பூர்த்தி செய்யவும், செல்வங்களைப் பெறவும் உதவுகிறது.

ஜட வாழ்விலிருந்து விடுதலை பெறுவதும் இம் மனித வாழ்வில் மட்டுமே சாத்தியமாகிறது. தாய் தந்தையரின் கூட்டுறவால் இவ்வுடல் உருப்பெறுகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் தாய் தந்தைக்குக் கடமைப்பட்டவன். அக்கடனை அவனால் தீர்க்க முடியாதென்பதையும் அவன் உணரவேண்டும். வளர்ந்த பின் தன் தாய் தந்தையருக்குத் திருப்தி தரும் வகையில் நடந்து கொள்ளாதவன், அல்லது அவர்களுக்குத் தேவையான பொருளுக்கு ஏற்பாடு செய்யாதவன் மரணத்துக்குப் பின் தன் சதையைத் தானே உண்ணும் தண்டனையைப் பெறுவது நிச்சயம்.

வயதான பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும், ஆன்மீக குருவுக்கும், பிராமணர்களுக்கும், தன்னைச் சார்ந்திருக்கும் பிறருக்கும் உதவக் கூடிய நிலையில் இருந்தும் உதவாமல் போனால் அவன் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாலும் மரித்தவனாகவே கருதப்படுகிறான். அன்புள்ள தாய் தந்தையரே, எங்கள் பாதுகாப்பில் எப்போதும் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக நாங்கள் உங்களுக்கு எவ்விதமான சேவையையும் செய்ய முடியாமற் போய்விட்டது. இன்றுவரை எங்கள் காலமெல்லாம் வீணாகிவிட்டது. எங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் நாங்கள் உங்களுக்குச் சேவை செய்ய இயலவில்லை. எனவே இந்தத் தவறுக்கு நீங்கள் எங்களை மன்னிக்க வேண்டும்.

இவ்வாறு முழுமுதற் கடவுள் அறியாத ஒரு குழந்தையைப் போல் இனிய சொற்களில் பேசுவதைக் கேட்ட வசுதேவரும் தேவகியும் குழந்தைப் பாசத்தால் உந்தப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் கிருஷ்ணரையும் பலராமரையும் தழுவிக் கொண்டார்கள். கிருஷ்ணரின் சொற்களைக் கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கியவர்களாய் அவர்கள் பேசவோ, கிருஷ்ணருக்குப் பதில் கூறவோ இயலாமற் போனார்கள். அவர்கள் இருவரையும் அன்புடன் தழுவிக் கொண்டு இடைவிடாது கண்ணீர் விட்டபடி இருந்தார்கள்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts