அக்பர் பீர்பால் கதைகள்

கொடுக்கும் கை கீழே – வாங்கும் கை மேலே! அக்பர் பீர்பால் கதை

அக்பர் சபையில் அமர்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு விநோதமான எண்ணம் தோன்றியது.


உடனே அமர்ந்திருந்த அமைச்சர்களை நோக்கி, பொதுவாக ஒருவர் தானம் கொடுக்கின்றார் என்றால் அவரது கை உயர்ந்தும், வாங்குபவரின் கை தாழ்ந்தும் இருப்பது உண்மை! ஆனால் தானம் தரும் சமயத்தில் கை தாழ்ந்தும் பெறுபவரின் கை உயர்ந்தும் இருப்பது எந்த சமயத்தில்? இதற்கு சரியான விளக்கம் கூறுங்கள் என்றார் அக்பர்.

சக்ரவர்த்தி கேட்ட கேள்விக்கு அமைச்சர்கள் எவ்வளவு யோசித்தும் விடை சரியாகக் கிடைக்கவில்லை. ஆதலால் மன்னனின் கேள்விக்கு பதில் சொல்லாது மவுனமாக இருந்தனர்.

அச்சமயம் பீர்பால் சபையில் வந்து அமர்ந்தார் மற்ற அமைச்சர்களிடம் கேட்ட அதே கேள்வியை பீர்பாலிடம் அக்பர் கேட்டார். பீர்பால் சிரித்துக் கொண்டே சக்ரவர்த்தி அவர்களே எல்லோரும் எளிதாகப் பதில் சொல்லி விடுவார்கள். இதற்கு விடையளிக்க வேண்டும் என்பதினால் விடையளிக்கிறேன்.

ஒருவர் மூக்குப் பொடி டப்பியைத் திறந்து மூக்குக்குப் பொடி போடும்போது மற்றொருவர் கொஞ்சம் மூக்குப் பொடி தாருங்கள் என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அச்சமயம் அவர் அந்த டப்பியை அவர் முன் நீட்டுவார். மூக்குப் பொடியை எடுப்பவர் கொடுப்பவரின் கையைவிட எடுப்பவரின் கை சற்று மேலே இருக்கும்.

ஆகையினால் மூக்குப் பொடி தானம் தரும் சமயம் கொடுப்பவரின் கை கீழேயும் – வாங்குபவரின்  கை மேலேயும் உயர்ந்திருக்கும் என்றார் பீர்பால்.

இந்த சின்ன விஷயம் கூட நமது அறிவுக்கு எட்டவில்லை என்று மற்ற அமைச்சர்கள் வருத்தப்பட்டனர்.

தன்னுடைய கேள்விக்கு சட்டென்று பதில் சொன்ன பீர்பாலை அக்பர் மிகவும் பாராட்டினார்.

முட்டாள்களிடம் எப்படி பேசுவது? – அக்பர் பீர்பால் கதை

அக்பர் ஒரு நாஷ் பீர்பாலிடம் பேசித் கொண்டிருக்கும் போது ஒரு புதுமையான கேள்வி ஒன்று எழுந்தது.உடனே பீர்பாலிடம் முட்டாள்களிடம் எப்படி பேசுவது? என்று அக்பர் கேட்டார்.


திடீரென்று அக்பர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்று எதிர்பாராமையால், மன்னர் பெருமானே இதற்கான பதிலை நாளைக்குக் கூறுகிறேன் என்றார் பீர்பால்.

மறுநாள் காலை – பீர்பால் டில்லிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று ஒருவனிடம் நான் சொல்வது போன்று செய்தால் நூறு வெள்ளிக்காசுகள் தருகிறேன் என்றார்.அவனும் பீர்பால் சொல்வது போன்று செய்வதாகக் கூறினான்.உன்னை நான் இப்போது மன்னரின் அரண்மனைக்கு அழைத்துச் சென்று மன்னரிடம் அறிமுகம் படுத்தி வைப்பேன். அச்சமயம் மன்னர் உன்னிடம் சில கேள்விகளைக் கேட்டார்.

மன்னர் என்ன கேள்விகள் கேட்டாலும் நீ வாய் திறந்து பதில் பேசாது மவுனமாக நின்று கொண்டிருக்க வேண்டும் என்றார்.
பீர்பால் கிராமத்தானை அரசவைக்கு அழைத்துச் சென்றார்.மன்னர் பெருமானே! இவன் எனது உறவினன், படித்தவன், உலக அறிவு மிக்கவன், தாங்கள் என்ன கேள்விகள் கேட்டாலும் இவனால் உடனடியாகப் பதில் கூற முடியும்! என்று அவனை மன்னரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் பீர்பால்.

மன்னர் அவனை நோக்கி, பீர்பாலிடம் கேட்ட அதே கேள்வியை, முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டார்.கிராமத்துக்காரன் பீர்பாலிடம் சொல்லியபடி மன்னர் கேட்ட கேள்விக்கு பதில் ஒன்றும் பேசாது மவுனமாக நின்றிருந்தான்.மன்னர் பலமுறை இதுபோன்று கேட்டும் அவன் பதில் கூறாது வாய்மூடி மவுனம் சாதித்தான்.

இதனால் அக்பர், பீர்பாலை நோக்கி, என்ன? உங்கள் உறவினரிடம் பலமுறை கேட்டும் இதற்குப் பதில் கூறாது மவுனம் சாதிக்கிறானே! நீங்கள் கூறியபடி இவன் அறிவாளியாக இருப்பான் என்று தெரியவில்லையே! என்றார்.பீர்பால், மன்னர் பெருமானே! தாங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் கூறி விட்டானே என்றார்.

நான் கேட்ட கேள்விக்கு எங்கே பதில் கூறினான் மவுனமாக நின்று கொண்டிருக்கிறானே! என்றார் அக்பர்.மன்னர் பெருமானே! நேற்றைய தினம் முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தானே கேட்டீர்கள். அதற்கான விடையைத் தான் தன்னுடைய மவுனத்தின் மூலம் விடை கூறியுள்ளான். அதாவது முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் மவுனமாக இருக்க வேண்டும் என்பதை தான் பேசாது வாய்மூடி மவுனமாக இருந்தான் என்றார் பீர்பால்.

முட்டாள்களுக்கு உதாரணமாக தன்னைக் குறிப்பிட்டாலும், முட்டாள்களிடம் எதனைப் பற்றிப் பேசினாலும் அவர்களுக்கு தக்க பதில் கூற முடியாது. ஆகையினால் அவர்களிடம் பேசாமல் இருப்பதே சிறந்ததாகும் என்பதை உணர்த்திய பீர்பாலின் நுண் அறிவைப் பாராட்டினார் அக்பர்.

ஆகாயத்தில் அழகிய மாளிகை – அக்பர் பீர்பால் கதை

ஒரு நாள் மாலை நேரத்தில் அரண்மனைத் தோட்டத்தில் தென்றல் காற்றை அனுபவித்தபடி அக்பரும் – பீர்பாலும் பேசிக்கொண்டு உலவிக் கொண்டிருந்தனர்.அச்சமயம் அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் ஆசை ஏற்பட்டு பீர்பால் அவர்களே! எனக்கு ஆகாயத்தில் அழகிய மாளிகை ஒன்றைக் கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா? என்று அரசர் கேட்டார்.

அரசரின் பேச்சைக் கேட்டதும் பீர்பால் திடுக்கிட்டார். என்றாலும் மன்னரிடம் எப்படி முடியாது என்று கூறுவது என்று தயங்கியபடியே முயன்றால் முடியும் மன்னா! என்றார்.எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. அதற்கான ஆக்கபூர்வமான வேலையில் இறங்கி வெகு சீக்கிரம் முடியுங்கள் என்றார் அரசர்.மன்னரின் ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டும் ஆசை எப்படி சாத்தியமாகும். அசட்டுத்தனமான இந்த ஆசை நிறைவேறவே வாய்ப்பு இல்லை. ஆகாயினால் இந்த வேலை முடியாதது என்பதை மன்னரே உணரந்து கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் பீர்பால்.

என்ன பீர்பால்…. நான் கேட்டதற்கு எந்த பதிலும் கூறாமல் மவுனமாக உள்ளீர்! என்றார்.அரசே! ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டுவதற்கு முன்னர் பல முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதனைச் செய்வதற்கே மூன்று மாதம் ஆகிவிடும். அதன் பின்னர் தான் கட்டிடம் கட்ட முடியும் என்றார் பீர்பால்.தாங்கள் கூறியபடியே ஏற்பாடுகளைச் செய்யுங்கள் நாளை காலை கஜானாவிலிருந்து அதற்கான பணம் வரும் என்றார் மன்னர்.

பீர்பால் கூறியபடியே மறுநாள் காலை வேடன் ஒருவன் வந்து சில கிளிகளைக் கொடுத்து விட்டுச் சென்றான்.வேடன் சென்றதும் கிளிகளை ஒரு கூண்டில் அடைத்து அதற்கு சில வார்த்தைகளைப் பேசக் கற்றுக் கொடுத்தார். அதன் பின்னர் ஆகாயத்தில் மாளிகை கட்டும் பணிக்கு ஆட்களை திரட்டி வர வெளியூர் சென்றிருப்பதாகவும் மன்னருக்கு தகவல் சொல்லியனுப்பினார் பீர்பால்.

மூன்று மாதங்கள் முடிந்ததும் அரண்மனைக்கு வந்து அரசரை சந்தித்தார் பீர்பால்.அரசே! ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்ட ஆட்களை தயார் செய்து விட்டேன். அவர்களை நீங்கள் வந்து பார்வையிட்டதும் வேலையைத் தொடங்கி விடலாம்! என்றார் பீர்பால்.பீர்பால் கூறியதைக் கேட்டு மன்னர் மகிழ்ச்சியடைந்தார். ஆர்வமிகுதியால் உடனே பீர்பாலுடன் புறப்பட்டுச் சென்றார் மன்னர்.கிளிகள் இருந்த அறைக்கு அரசரை அழைத்துச் சென்றார் பீர்பால். அந்த அறையில் அரசரும் பீர்பாலும் மட்டுமே இருந்தனர்.அரசரைப் பார்த்ததும் கிளிகள், சுண்ணாம்பு கொண்டு வா! செங்கல்லை கொண்டு வா! சாரத்தைக் கட்டு! கல்லை இந்தப் பக்கம் போடு! சுண்ணாம்பைப் பூசு! என்று ஒவ்வொன்றும் பேச ஆரம்பித்தது.

அரசருக்கு ஆச்சர்யமும், அதே சமயம் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டது. பீர்பால் இது என்ன? என்றார் கடுங்கோபத்துடன்.
மன்னர் பெருமானே! என்னை மன்னிக்க வேண்டும் ஆகாயத்தில் கட்டடம் கட்ட பறவைகளினால்தான் முடியும்! கையினால் தான் இவைகள் பேசுகின்றன. இவைகளெல்லாம் நல்ல பயிற்சி பெற்றவையாகும். ஆதலால் ஆகாயத்தில் மாளிகை கட்டும் வேலையை இப்போதே ஆரம்பித்து விடலாம் என்றார் பீர்பால்.

பீர்பால் கூறியதைக் கேட்டதும் மன்னருக்குப் புரிந்து விட்டது. ஆகாயத்தில் அந்தரத்தில் எப்படி மாளிகை கட்ட முடியும். இது நடக்க முடியாத விஷயம் என்பதை நாசுக்காக நமக்கு உணர்த்துகின்றார் என்பதை புரிந்து கொண்டு புன்னகைத்தார் மன்னர்.கட்டிடம் கட்டும் தொடர்பான வார்த்தைகளை சிரமப்பட்டு பீர்பால் கற்றுக் கொடுத்ததை எண்ணி பீர்பாலை மனதாரப் பாராட்டினார் அக்பர்.

ஆண்டவன் அளித்த தண்டனை – அக்பர் பீர்பால் கதை

 
அக்பரும் – பீர்பாலும நாட்டின் நிலைப்பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கும் போது வாக்கு வாதம் நீடித்து, மறுநாளும் தொடர்ந்தது.பீர்பால் மறுநாள் அரச சபைக்குச் சென்றால் மாறுபட்ட கருத்தை கூறும்போது மன்னருக்குக் கோபம் வந்து நாடு கடத்தினாலும் கடத்துவார் என நினைத்து, அவசர வேலையாக வெளியூர் செல்வதினால் வர இரண்டு மாதங்கள் ஆகும் என்பதை தெரிவித்துவிட்டு டில்லிக்குக் கிழக்கே உள்ள இருநூறு மைல் தொலைவில் இருந்த ஒரு ஊருக்குச் சென்று தற்காலிகமாக வசிக்கலானார்.

ஒருநாள் – அந்நாட்டின் அங்காடிக்குப் பக்கம் சென்றுக் கொண்டிருந்தார் பீர்பால்.அங்கே ஒருவன் “ஒரு உபதேசம் நூறு வெள்ளி காசுகள்” என்று கூவிர் கொண்டிருந்தான்.அவன் அருகில் சென்று உபதேசம் பற்றி விவரம் கேட்டார் பீர்பால்.அவன் “தன்னிடம் அருமையான நான்கு உபதேச மொழிகள் வைத்திருக்கிறேன். இந்த நான்குக்கும் நானூறு வெள்ளிக் காசுகள்” என்றான்.அது என்ன உபயோகமான உபதேச மொழிகள் – கேட்டுத்தான் பார்ப்போமே என நினைத்து அவனிடம் நூறு வெள்ளிக் காசுகளைக் கொடுத்து எனக்கு ஒரு உபதேச மொழியை உபதேசியுங்கள் என்றார் பீர்பால்.

“ஒரு விஷயம் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதனைச் சிறியது என்று எண்ணிவிடக் கூடாது!” என்றான். மீண்டும் நூறு வெள்ளிக் காசுகளைக் கொடுத்து. “இரண்டாவது உபதேச மொழியை உபதேசியுங்கள்” என்றார் பீர்பால் “எவரிடமாவுத் தாங்கள் குறை, குற்றம் கண்டால் அதனை மற்றவர்க்கு வெளிபடுத்தக் கூடாது!” என்றான்.இரண்டு உபதேசமும் பயனுள்ளதாக இருக்கிறதே. சரி மூன்றாவது உபதேசத்தைக் கேட்கலாம் என்று அவனிடம் மூன்றாவதாக மேலும் நூறு வெள்ளிக் காசுகளைக் கொடுத்தார்.

அவன், “தங்களை யாராவது விருந்திக்கு அழைத்தால் மறுப்பேதும் கூறாது கையில் எந்த வேலையிருந்தாலும் பின்பு வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று உடனே விருந்துக்குச் சென்றுவிட வேண்டும்” என்றான்.இன்னும் இருப்பது ஒரு உபதேச மொழிதான் என்று மறுபடியும் நூறு வெள்ளிக் காசுகளைக் கொடுத்து நான்காவது உபதேச மொழி என்ன? என்றார் பீர்பால். “யாரிடமும் அடிமையாக வேலைச் செய்யாதே!” என்றான்.

நாநூறு வெள்ளிக் காசுகளைக் கொடுத்து நான்கு உபதேச மொழிகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு சென்ரு கொண்டிருக்கும்போது. களைப்பு மேலிட ஒரு மரத்திந் நிழலில் உறங்கினார்.அவ்வழியாகக் குதிரையில் அந்நாட்டின் சிற்றரசன் வந்துக் கொண்டிருந்தான். மரத்தின் நிழலில் பீர்பால் உறங்குவதைக் கண்டு குதிரையிலிருந்து கீழே இறங்கி அவரிடம் சென்றான்.மதிப்பிற்குரிய பீர்பால் அவர்களே என்னைத் தெரிகிறதா என்று வினவினான்.ஏற்கெனவே அக்பரிடம் படைத் தலைவனாக இருந்து இந்நாட்டு மன்னாக ஆக்கப்பட்டவர் என்பது தெரிந்துள்ளமையால், தாங்கள் இந்நாட்டின் மன்னர் அல்லவா என்றார் பீர்பால்.

பீர்பாலின் மதிநுட்பமானப் பதிலைக் கண்டு தன்னுடைய அரசவையில் முக்கியப் பதவி வகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான் அவரும் அந்தப் பதவியை ஒப்புக் கொண்டார்.ஒருநாள் – பீர்பால், அரசாங்க அலுவல் காரணமாக அந்தப்புரத்திற்குச் செல்ல நேரிட்டது.அச்சமயம் காவல் அதிகாரியும், அந்தப்புரத்துப் பணிப்பெண் ஒருவளும் அளவுக்கு மீறி மது அருந்தி விட்டு நிலைத்தடுமாறி ஆடை இன்றி அருவெறுப்புடன் படுத்திருந்தனர்.

இவர்களின் அவல நிலையைக் கண்ட பீர்பால் தன்னுடைய மேல் சால்வையை அவர்களின் மீது போர்த்தி விட்டு சென்றார்.
மயக்கம் தெளிந்து பார்த்த அவர்கள், தங்கள் மீது பீர்பாலின் விலையுயர்ந்த சால்வை போர்த்தப்பட்டிருப்பதைக் கண்டு பீதியடைந்தனர்.இந்த விஷயம் மன்னருக்கு பீர்பால் தெரிவித்து விட்டால் மயங்கிய நிலையில் இருந்த இருவருக்கும் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்ற யோசனையுடன் பொய்யான புகார் ஒன்றைக் கூற அந்தப் பெண் மன்னரிடம் சென்றாள்.

மன்னர் அவர்களே அந்தப்புரத்தில் பணிப்புரிந்து கொண்டிருக்கும் போது பீர்பால் அவர்கள் பலவந்தப் படுத்தி என்னைக் கெடுத்து விட்டார். இதோ பாருங்கள் அவரது சால்வை என்று கூறினாள்.சால்வையுடன் பணிப்பெண் கூறிய குற்றச்சாட்டு உண்மையென்று எண்ணி சற்றும் யோசனை செய்யாமல் ஒரு கடிதம் எழுதி பீர்பாலிடமே கொடுத்து, இந்த ரகசிய கடித்த்தை சேனாதிபதியிடம் சேர்த்து விடுங்கள் என்றான் மன்னன்.மன்னன் கொடுத்த அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு சேனாதிபதியின் இருப்பிடத்திற்குச் சென்றார்.

செல்லும் வழியில் ஒரு நண்பர் பீர்பாலைப் பார்த்து மேன்மை மிக்கவரே தாங்கள் தயவு செய்து எனது வீட்டில் நடைபெறும் விருந்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.ஐயா எனக்கு முக்கியமான அரசாங்க வேலையுள்ளது. இந்தக் கடிதத்தை உடனடியாக சேனாதிபதியிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்றார் பீர்பால்.அச்சமயம் அந்தப்புரத்தில் அலங்கோலமாக பெண்ணுடன் மதியிழந்து படுத்திருந்த காவல் அதிகாரி அங்கு வந்திருந்தார்.

பீர்பால் அவர்களே அந்த அவசரக் கடித்தை இப்படிக் கொடுங்கள் அதோ வருகிறாரே காவல் அதிகாரி தனக்கு வேண்டியவர். அவரிடம் கொடுத்தால் உடனே சேனாதிபதியிடம் சேர்த்து விடுவார் என்று கூறி பீர்பாலிடம் இருந்த கடிதத்தை வாங்கி காவல் அதிகாரியிடம் கொடுத்தார் அந்த நண்பர்.காவல் அதிகாரியும், கடிதத்தை சேனாதிபதியிடம் உடன் சேர்த்து விடுகிறேன் என்று கூறி கடிதத்தைக் கொண்டு சென்றான்.பீர்பால் அவர்கள் நண்பரின் விருந்தில் தட்டாது கலந்து கொண்டார். விருந்தும் சிறப்பாக நடந்தது.கடிதத்தை வாங்கிச் சென்று சேனாதிபதியிடம் கொடுத்த காவல் அதிகாரியின் தலை வெட்டப்பட்டு தட்டில் வைத்து விருந்தில் இருந்த பீர்பாலிடம் கொடுத்தார் சேனாதிபதி.

பீர்பால் அவர்களே மன்னரின் கடிதப்படி இந்தக் கடிதத்தைக் கொண்டு வருபவரின் தலையைத் துண்டிக்கும்படி குறிப்பிட்டுள்ளமையால்த் துண்டித்துக் கொடுத்துள்ளேன் என்று தட்டுடன் துண்டித்த தலையைப் பீர்பாலிடம் சேனாதிபதி கொடுத்தான்.சேனாதிபதியிடம் தட்டைப் பெற்றுக் கொண்ட பீர்பால் நேராக மன்னரின் காலடியில் வைத்தார்.பீர்பாலை உயிருடன் கண்ட மன்னர் ஆச்சர்யமடைந்தார்.உங்களுடைய தலையை அல்லவா வெட்டும்படி கடிதம் எழுதி இருந்தேன். காவல் அதிகாரியின் தலை வெட்டுண்டது எப்படி? என வினவினார் மன்னர்.

அரசன் தவறு செய்யலாம் – ஆண்டவன் எப்போதும் தவறு செய்வதில்லை. பணிப்பெண்ணைக் கெடுத்தவன் இந்த காவல் அதிகாரிதான். உண்மையான குற்றவாளிக்கு ஆண்டவன் தந்த தண்டனையாகும் இது என்றார் பீர்பால்.முன்பின் யோசனை செய்யாமல் நடந்து கொண்டதற்கு மன்னன். பீர்பாலிடம் மன்னிக்கக் கோரி எப்போதும் போன்று தன்னிடம் இருக்க கோரினான்.இனி நான் இங்கே இருக்க முடியாதுய சக்ரவர்த்தியை விட்டு பிரிந்து வந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. ஆகையினால் நான் டில்லி செல்ல வேண்டும் என்று கூறி பீர்பால் புறப்பட்டார்.காசு கொடுத்து உபதேசம் பெற்றதுதான் இன்று தன் உயிரைக் காத்தது – இனி எவரிடமும் வேலை செய்யக் கூடாது என்று மனவுறுதியுடன் அக்பரின் அரசவையைச் சென்றடைந்தார் பீர்பால்.இரண்டு மாதம் கழித்து வந்த நண்பர் பீர்பாலைக் கண்டதும் அக்பர் பெருமகிழ்ச்சி கொண்டார்.
 
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் – அக்பர் பீர்பால் கதை

அக்பரின் அரசவையில் இருந்த பீர்பாலின் புகழ் இந்திய நாடு தவிர அயல்நாடுகளான பாரசீக நாட்டிலும் பரவியிருந்தது. ஆதலின் பாரசீக மன்னர் பீர்பாலை தனது நாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அனுப்பி வைக்கும்படி மன்னர் அக்பருக்கு ஒரு ஓலை அனுப்பினார்.
மன்னர் அக்பரும் சில பரிசு பொருட்களுடன் பீர்பாலை பாரசீக நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

பரிசு பொருட்களுடன் பாரசீகம் சென்ற பீர்பாலை ராஜமரியாதையோடு வரவேற்பளித்து விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர் பாரசீக அதிகாரிகள்.பீர்பாலின் அறிவாற்றலை சோதிக்க விருப்பம் கொண்ட பாரசீக மன்னர். பீர்பாலும் இதுவரையில் பாரசீக மன்னரை நேரில் பார்த்ததும் இல்லை. ஆதலின் அரசவையில் அரசரை சந்திக்க ஆவலுடன் காத்திருந்தார் பீர்பால்.

மறுநாள் – பீர்பாலை மிக மரியாதையுடன் அரசவைக்கு அழைத்துச் சென்றார் அதிகாரிகள்.

அரசவையில் அரசர் அமர்வதற்காகப் போடப்பட்டுள்ள ஆசனங்கள் ஐந்து போடப்பட்டு, ஒரே மாதிரியான தோற்றமுடைய ஐந்து பேர்கள் ஆசனத்தில் அமர்ந்துள்ளனர்.அரசவைக்குச் சென்ற பீர்பாலுக்கு ஆச்சர்யமாகி விட்டது. அரசர் அமரும் ஆசனங்கள் ஐந்துலிம் அரசர்கள் போன்று அமர்ந்திருப்பதைப் பார்த்தார். இந்த ஐவர்களில் எவர் அரசராக இருக்க முடியும் என்று யோசனை செய்தபடி நின்றிருந்தார்.

பின்னர் ஐந்து பேர்களையும் நன்றாக உற்றுப் பார்த்துவிட்டு மிகப் பணிவுடன் அரசர் அமர்ந்திருந்த ஆனசத்தின் அருகே சென்று மேன்மை மிகு பேரரசே! தங்களைப் பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன், என்று கூறி மன்னர் கொடுத்தனுப்பிய பரிசுப் பொருட்களை பாரசீக மன்னரிடம் அளித்தார் மாமேதை பீர்பால் அவர்கள்.

பாரசீக மன்னருக்கு பெரும் வியப்பாகி விட்டது. தான் தான் மன்னர் என்பதை எப்படி உடனடியாக பீர்பால் அறிந்து கொண்டார் என்று பீர்பாலைப் பார்த்து, எப்படி நான்தான் மன்னர் என்பதை அறிந்து கொண்டீர்கள்? என வினவினார்.

மேன்மைமிகு மன்னர் பெருமானே! இது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த நான்கு பேர்களின் கண்களும் தங்களின் மீதே பதிந்திருந்தது. அது மட்டுமின்றி அவர்களின் பார்வையில் ஒருவித மிரட்சி இருப்பதைக் கண்டேன்.

ஆனால் தாங்கள் மட்டுமே அரசர்களுக்கான கம்பீரமான பார்வையுடன் அமர்ந்து என்னை நேருக்கு நேராகப் பார்த்தீர்கள். அதனைக் கொண்டுதான் அமர்ந்திருந்த ஐவரில் தாங்கள் தான் அரசர் என்பதை அறிந்து கொண்டு வணங்கினேன். அதுமட்டுமின்றி என்னதான் நாம் போலியாக நடித்தாலும் நம்முடைய செயல்கள் முகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். இதனைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர் என்றார் பீர்பால் அவர்கள்.

பீர்பால் கூறியதைக் கேட்ட அரசர், அவரது பேராற்றலைப் பாராட்டி பரிசுகள் வழங்கி, சில நாட்கள் அரச விருந்தினராக இருக்கச் செய்து, டில்லிக்கு அனுப்பி வைத்தார் பாரசீக மன்னர்.

வேந்தராக இருந்தாலும் மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள்

மாமன்னர் அக்பர் தன் நாட்டின் நடப்பு நிலை எப்படி இருக்கிறது என்று தனது ஒற்றர்களின் மூலம் அறிந்து கொள்வது வழக்கம். இருப்பினும் ஒருநாள் தன் நாட்டு மக்கள் தம்மைப்பற்றி என்ன நினைக்கின்றார்கள். என்பதை தாமே நேரில் அறிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது.

மன்னர் தன் எண்ணத்தை பீர்பால் அவர்களிடம் கூறினார். மக்களின் மனநிலையை அறிந்து கொள்வது மன்னரின் கடமையாகும். ஆதலின் நேரில் போய் சந்திப்போம் என்றார் பீர்பால்.நீங்கள் சொல்வது போல் நேரில் சென்று சந்தித்தால் மக்கள் உண்மையை கூற தயங்குவார்கள் அல்லவா? என்றார் மன்னர்.மன்னர் பெருமானே, நேரில் போகலாம் என்று சொன்னது மாறுவேடத்தில். அப்படி சென்றால் யாருக்கும் அடையாளம் தெரியாது. மக்களும் மனம் திறந்து உண்மையைக் கூறுவார்கள் என்றார் பீர்பால்.பீர்பால் கூறியபடியே சாதாரண விவசாயிகள் போன்று மாறுவேடத்தில் நாட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர்.வெகுதூரம் சென்றதும் ஒரு ஒற்றையடிப் பாதைக் குறுக்கிட்டது. அந்தப் பாதை அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் செல்லும் வழியாகும். வெகு தூரம் வந்தமையால் மன்னருக்கு களைப்பு ஏற்பட்டது. அதனால் பீர்பாலிடம் இங்கு சற்று ஓய்வெடுத்துவிட்டு செல்லலாம் என்றார் மன்னர்.

பீர்பாலும் அப்படியே செய்வோம் என்று கூறி ஒரு பெரிய மரத்தின் நிழலில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அச்சமயம் காட்டிற்கு செல்லும ஒற்றையடிப் பாதையின் வழியாக விறகுகளை நன்கு கட்டி தலையில் சுமந்து கொண்டு ஒருவர் வந்து கொண்டிருந்தார்.அவர்கள் அருகில் அவர் வந்ததும். பீர்பால் அவர்கள், அய்யா வயதானவரே, இந்த கடுமையான வெயிலில் விறகை சுமந்து செல்வது சிரமமாக இல்லாயா? ஆகையினால் இங்கு சற்று ஓய்வெடுத்து விட்டு செல்லுங்கள் என்றார்.அந்த முதியவருக்கு இவர்கள் யார் என்பது தெரியாமையினால் எனது தலையிலுள்ள விறகு சுமையை கீழே இறக்கிவிட்டு ஓய்வெடுப்பது நல்லதுதான். ஆனால் இப்போது கீழே இறக்கும் சுமையை பின்னர் யார் தலையில் தூக்கி வைப்பது என்றார்.

முதியவரே கவலைப்பட வேண்டாம். நீங்கள் போகும் வரையில் நாங்கள் இங்குதான் இருப்போம். நாங்களே உங்கள் சுமையை தூக்கி தலையில் வைக்கிறோம் என்று கூறியப்படி பீர்பால் அந்த முதியவரின் தலையிலுள்ள விறகு சுமையை கீழே இறக்கி வைத்தார். மூவரும் மரத்தினடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சமயம் பீர்பால் அவர்கள் மன்னரின் காதில் இரகசியமாக ஏதோ கூறினார். மன்னரும் சரி என்று தலையாட்டினார்.

பீர்பால் அவர்கள் அந்த முதியவரைப் பார்த்து, அய்யா! தங்களுக்கு இன்று நடந்த விஷயம் தெரியுமா? என கேட்டார்.
என்ன நடந்தது? என்றார் முதியவர்.நமது மன்னர் இன்று இயற்கை எய்தி விட்டார் என்றார் பீர்பால்.இதனைக் கேட்ட முதியவர் அதிர்ச்சி அடைந்தவராக, நமது மன்னர் இயற்கை எய்தி விட்டாரா? இது எப்படி நிகழ்ந்தது? எவராவது சூழ்ச்சி செய்து விட்டார்களா? இது உண்மையா? என்று மிகப் பதட்டத்துடன் கேட்டார்.மன்னர் இயற்கை எய்திவிட்டார் என்றதும் ஏன் இவ்வளவு பதட்டம் அடைகின்றீர்? என்றார் பீர்பால்.

பதட்டப்படாமல் என்ன செய்ய? நமது மன்னர் நாட்டிற்கு பல நன்மைகள் செய்துள்ளார். இன்று நமது நாடு செழிப்புடன் விளங்குவதற்குக் காரணம் நமது மன்னரின் நிர்வாகத் திறமை. அது மட்டுமின்றி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நலமுடன் வாழ பல சலுகைகள் வழங்கிய நல்லிதயம் படைத்தவர். அவருக்கா இந்நிலை. இவரைப் போன்று நம்நாட்டிற்கு எந்த மன்னரும் வாய்க்க முடியாது என்று கவலையுடன் கூறினார் முதியவர்.இவ்வளவு கூறுகின்ற நீங்கள் காட்டில் விறகு வெட்டி விற்றுதானே வாழ்கின்றீர்கள், இருப்பினும் தங்களுக்கு மன்னர்மீது இவ்வளவு நல்லெண்ணம் கொண்டுள்ளீர்கள் என்பது ஆச்சர்யம் தான் என்றார் பீர்பால்.

காட்டில் விறகு வெட்டி விற்பதனால் என் குடும்பத்திற்கு எந்தவித கஷ்டமும் இல்லை. நல்ல வருமானமும் கிடைக்கிறகு. எனது குடும்பம் கஷ்டத்தில் வாழ்ந்தால் தானே மன்னரை குறை கூற முடியும்? என்றார் முதியவர்.முதியவர் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு விடைப் பெற்றார். பீர்பால் அந்த விறகு சுமையை மீண்டும் அந்த முதியவரின் தலையில் ஏற்றிவிட்டு அவர்களும் புறப்பட்டுச் சென்றனர்.மன்னர் பெருமானே! இந்த மாறுவேட பயணத்தினால் அந்த விறகு வெட்டியான முதியவர் மனதில் நீங்கள் ஆழப் பதிந்துள்ளீர்கள் என்பது அறிய முடிகிறது. இதனை கேட்ட எனக்கும் மனமகிழ்வை அளிக்கின்றது என்றார் பீர்பால்.

அரசரும் – பீர்பாலும் பேசியபடி நகர வீதியை அடைந்தனர். நடந்து வந்த களைப்பால் மன்னருக்கு தாகம் எடுத்தது. பீர்பால் அவர்களே, தாகத்திற்கு ஏதாவது அருந்திவிட்டு செல்லலாம் என்றார் அக்பர்.அப்படியே செய்யலாம் என்று பீர்பால் கூறிக் கொண்டிருக்கும்போதே வீதியில் மோரு….. மோரு….. என்று கூவியப்படி ஒரு பெண் தலையில் மோர் பானையுடன் வந்துக் கொண்டிருந்தார்.அந்த மோர்காரப் பெண்ணைப் பார்த்து பீர்பால், மோர்காரப் பெண்ணே, எங்கள் இருவருக்கும் இரண்டு குவளை மோர் கொடு என்று கூறி மோருக்கானப் பணத்தைக் கொடுத்தார்.அரசரும் – பீர்பாலும் மோரைக் குடித்தனர்.

பீர்பால் மோர்காரப் பெண்ணைப் பார்த்து, என்ன இவ்வளவு சாதாரணமாக இருக்கிறாய்? நம் மரியாதக்குரிய மன்னர் இன்று இயற்கை எய்திவிட்டார். என்கிற செய்தி உனக்குத் தெரியாதா? என்று கேட்டார்.அதற்கு மோர்காரப் பெண். மன்னர் இருந்தால் என்ன? மறைந்தால் என்ன? மன்னராகப் பிறந்தாலும் இயற்கையை வெல்ல முடியாது. நல்ல வேளை செய்தியை இப்போது சொன்னீர்கள் மன்னரின் மறைவைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள் அங்கு சென்றால் எனக்கு நல்ல வியாபாரம் ஆகும் மேலும் ஒரு மோர் குடம் விற்றுவிடும் என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டாள்.

பீர்பால் அவர்களே, நாம் சந்தித்த இருவரும் இருவிதமான எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனரே இதற்கு என்ன காரணம்? என்றார் அக்பர்.மன்னர் பெருமானே, விறகு வெட்டி பழுத்த முதியவர். மன்னரான தங்களின் மீது பெரும் மதிப்பை வைத்துள்ளார். அதனால் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியினால் மிகவும் வேதனையடைந்தார்.மோர் விற்ற பெண்ணிடம் கொஞ்சம் கூட நாட்டுப்பற்று கிடையாது. சுயநலமிக்கவள். சிந்தனை முழுவதும் மோர் அதிகமாக விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்பதாக இருந்தது. அவளது எண்ணப்படி பார்த்தால் அவள் கூறியதிலும் தப்பில்லை என்றார் பீர்பால்.

அப்படியானால் யார் மீது தவறு? என்று வினவினார் மன்னர்.மன்னர் பெருமானே, தவறு நம்மீது தான். ஏனெனில் நாட்டின் நலன் கருதி பல நல்ல செயல்களைச் செய்யும்போது மக்களின் சிலர் போற்றுவதும். சிலர் தூற்றுவதும் நடைமுறையான விஷயம்தான்.நாட்டில் எது நடந்தாலும் மன உறுதியுடன் தாங்கி மக்களின் நன்மைக்காக நாடாளும் மன்னராக இருக்க வேண்டுமே தவிர, மக்கள் இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று சிந்திக்கக்கூடாது. வீரத்துடனும் – விவேகத்துடனும் நாட்டை ஆள்வதினால் தான் பிறர் நாட்டவரும் தங்களைப் போற்றுகின்றனர் என்றார் பீர்பால்.பீர்பால் கூறியதைக் கேட்ட மன்னர், நாடாளும் மாமன்னராக இருந்தாலும் மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றார் மன்னர் அக்பர்.

மாப்பிள்ளைகளுக்கு மரண தண்டனை!

அக்பர் தன் மகளை ஓர் அரசக் குமாரனுக்கு திருமணம் செய்து வைத்தார்.அன்புடன் குடும்பம் நடத்தி வந்த அவர்களின் வாழ்வில் ஏதோ ஒரு காரணத்திற்காக சண்டையும் சச்சரவும் ஏற்பட்டு விட்டது.

இதனால் மன அமைதி இழந்த அக்பரின் மகள் தன் தந்தையிடம் வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதாள். பாசத்துடன் வளர்த்த மகளின் கண்ணீரைக் கண்டதும் அக்பருக்கு தன் மாப்பிளையின் மீது கடுங்கோபம் ஏற்பட்டது.அதனால் படைவீரர்களை அனுப்பி மருமகனைக் கைது செய்து டில்லி சிறையில் அடைத்தார். அத்துடன் அவரது கோபம் தணியாமல் எல்லா வீட்டிலுள்ள மாப்பிள்ளைகளையும் கைது செய்துவர ஆணையிட்டார்.

பீர்பாலை உடனே வரவழைத்தார் அக்பர். “சக்ரவர்த்திப் பெருமானே! தாங்கள் உடனே என்னை அழைத்ததன் காரணம் என்ன?” என்று வினவினார் பீர்பால்.“பீர்பால் அவர்களே! நாளைக் காலை சூரிய உதயத்தில் எனது மாப்பிள்ளையை தூக்கிலேற்றி மரண தண்டனை விதிக்க வேண்டும் அதே சமயம் நமது நகரத்திலுள்ள ஒவ்வொரு வீட்டின் மாப்பிள்ளைகளையும் தூக்கிலிட வேண்டும். இனி நமது நாட்டில் மாப்பிள்ளைகளே இல்லை என்ற நிலை ஏற்படுத்த வேண்டும்” என்றார் அக்பர்.

மன்னரின் அதிசய ஆணையைக் கேட்டு பீர்பால் அதிர்ச்சியடைந்தார். உத்தரவைக் கேட்ட மக்களும் பீதியடைந்தனர்.
பீதியடைந்த மக்களைப் பார்த்து, இதற்காக பயப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். அரசரும் அவ்வளவு கொடுமனம் படைத்தவரல்ல என்று சமாதான்ம் கூறி அனுப்பி வைத்தார். பீர்பால்.

சூரிய உதயத்திற்கு முன்னர் அரண்மனைக்குச் சென்ற பீர்பால், சக்ரவர்த்திப் பெருமானே, தாங்கள் கூறியபடியே தூக்கு மரங்கள் தயாராகி விட்டது. தாங்கள் வந்து பார்வையிட்டப் பின்னர் உடனடியாக எல்லா மாப்பிள்ளைகளுக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றி விடலாம் என்றார்.

பீர்பாலின் சொற்படி தூக்கு மரங்களை பார்வையிட்டார். அச்சமயம் அந்தத் தூக்கு மரங்களுக்கு இடையில் ஒரு தூக்கு மரம் தங்கத்தாலும் மற்றொரு தூக்கு மரம் வெள்ளியினாலும் காணப்பட்டது.இந்த இரு தூக்கு மரங்கள் மட்டும் ஏன் வித்தியாசமாக உள்ளது. காரணம் என்ன? என்று வினவினார் அக்பர்.சிறிதும் பதட்டப்படாமல் அமைதியாக, மன்னர் பெருமானே! அங்கே தங்கத்தினால் உருவாக்கப்பட்ட தூக்குமரம் தங்களுக்காகவும், வெள்ளியினால் உருவாக்கப்பட்ட தூக்குமரம் எனக்காகவும் என்றார் பீர்பால்.

பீர்பாலின் எதிர்பாராத பதிலைக் கேட்டதும் அக்பருக்கு வியப்பாக இருந்தது. நமக்கு எதற்காகத் தூக்கு மரங்கள்? என்றார் அக்பர்.மன்னர் பெருமானே! தாங்களும் ஒரு வீட்டின் மாப்பிள்ளைதானே! அதே போன்று நானும் ஒரு வீட்டின் மாப்பிள்ளைதானே! ஆகவே சட்டப்படி தண்டனை நம்முடைய இருவருக்கும் சேர்த்துதானே! என்றார் பீர்பால்.
கோபத்துடன் இருந்த அக்பர் மறந்து வாய்விட்டுச் சிரித்தார்.

மேன்மைமிகு சக்ரவர்த்தி பெருமானே! தங்களுடைய மாப்பிள்ளை தவறு செய்தமைக்காக நாட்டிலுள்ள மாப்பிள்ளைகள் எல்லோரையும் தண்டிப்பது என்ன நியாயம்? தங்களுடைய மாப்பிள்ளை செய்த தவறை திருத்தி நல்வழி படுத்த வேண்டுமேயன்றி மரண தண்டனை அளிக்கலாமா? தங்களைத் திருத்துவதற்கு எந்த அருகதையும் எனக்கு இல்லை. ஆனால் இந்தச் செய்கையினால் தங்களுக்கு இழுக்கு வராமல் தடுப்பது எனது கடமையல்லவா? தயவு செய்து மாப்பிள்ளைகளின் மரண தண்டனையை உடனடியாக ரத்து செய்து வேண்டுகிறேன், என்றார் பீர்பால்.தவறு செய்து அவப்பெயர் எடுப்பதிலிருந்து தன்னைத் தடுத்த பீர்பாலை அக்பர் பெரிதும் பாராட்டினார்.

அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை

ஒரு நாள் மாறுவேடத்தில் மன்னர் அக்பரும், பீர்பாலும் நகர்வலம் வந்தனர். அச்சமயம் நடக்க முடியாதவர்களும், பார்வையற்றவர்களும் வீதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.இக்காட்சியைக் கண்ட அக்பரின் மனம் வேதனையடைந்தது. அதனால், பீர்பால் அவர்களே! ஊனமுற்ற இவர்களுக்கு நாம் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றார்.

ஊனமுற்றவர்கள் பிச்சை எடுப்பது என்பது ஒரு கொடுமையான செயலாகும். ஊனமுற்றர்களாகப் பிறந்தது அவர்களது குற்றம் இல்லை. செய்யாத குற்றத்திற்கு ஆண்டவன் அளித்த தண்டனையாகும். ஆண்டவனுக்கு ஒப்பான அரசர் இதற்கு பரிகாரம் செய்வது நல்லதுதான் என்றார் பீர்பால்.இவர்களுக்கு என்ன செய்யலாம்? என வினவினார் மன்னர்.

இவர்களுக்கு உணவை நாமே அளித்தால் அவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள் என்றார் பீர்பால்.பீர்பால் கூறிய யோசனை மன்னருக்கு சரியாகப் பட்டமையினால் மறுநாளே ஊனமுற்ற எல்லோருக்கும் இலவசமாக உணவு அளிக்கபட்டது.
இது நல்ல திட்டம் என்றாலும் சில சோம்பேறிகள் உடல் ஊனமுற்றவர்கள் போன்று நடித்து இலவச உணவை வாங்கி உண்பது அதிகமானது.

இதனால் நாட்டிலுள்ள சோம்பேறிகள் கூட்டம் நாளுக்கு நாள் இலவச உணவை வாங்கிச் செல்ல வந்தமையினால் அரசாங்கத்திலுள்ள உணவு களஞ்சியமே காலியாகி நிலைமை மோசமாகிவிட்டது.இதனை தடுத்திட நல்ல யோசனை ஒன்றை கூறிட அக்பர் பீர்பாலிடம் கோரினார்.

மன்னர் பெருமானே! இதற்காகக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். இதற்கான முடிவை நான் செய்கிறேன் என்றார் பீர்பால்.
மறுநாள் – ஊனமுற்றவர்களுக்காக இலவச உணவு வழங்கும் இடத்திற்கு சென்றார். பீர்பால் கூறியபடி இலவச உணவு வழங்கும் நேரம் தாமதப்படுத்தபட்டது.

இதனால் இலவச உணவு வாங்க காத்திருந்தவர்களிடையே கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.அச்சமயம் ஒரு அரசு அதிகாரி அங்கே வந்தார். எதற்காக கூச்சலிடுகின்றீர்கள்? இன்று முதல் இலவச உணவு வழங்கும் இடம் அடுத்த தெருவிலுள்ள பெரிய சத்திரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போது உணவு வழங்கி கொண்டிருக்கிறார்கள். ஆதலால் உடனடியாகச் செல்பவர்களுக்கு இப்போதே உணவு கிடைக்கும் என்றார்.

அரசு அதிகாரி கூறியதைக் கேட்டதும் – சற்றும் யோசனை செய்யாமல். ஊனமுற்றவர்கள் போன்று போலியாக நடித்தவர்கள் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு சத்திரத்தை நோக்கி ஓடினார்கள்.ஆனால் உண்மையில் ஊனமுற்ற பார்வையற்றவர்கள், கை-கால்களை இழந்தவர்கள் அந்த இடத்திற்குச் செல்வதற்கு துணையில்லாமல் தவித்தனர்.

உண்மையான ஊணமுற்றவர்கள் தவிப்பதைக் கண்ட பீர்பால் உடனடியாக அவர்களுக்கு உணவு வழங்குமாறு கட்டளையிட்டார். அவர்களும், சநதோஷத்துடன் உணவருந்தி சென்றனர்.இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட போலியானவர்கள் மீண்டும் பழைய இடத்தை நோக்கி வந்தனர். உணவளிக்கும் மேலதிகாரி அவர்களை எச்சரித்து போலியான நீங்கள் மீண்டும் வந்தால் கைது செய்து சிறைக்கு அனுப்பப்டுவீர்கள் என்றார்.

அன்று முதல் உண்மையான ஊனமுற்றவர்கள் மட்டுமே வந்து உணவருந்திச் சென்றனர். போலியானவர்கள் காணாமல் போயினர்.பீர்பாலின் அறிவு நுணுக்கத்தை புகழ்ந்து பாராட்டினார் மன்னர் அக்பர்.

ஆண்டவனிடம் பெற்ற அறிவு – அக்பர் பீர்பால் கதை

பீர்பாலின் மீது அரசர் அளவுகடந்த அன்பும் மரியாதையும் வைத்திருப்பதை அவையில் இருந்த சில அமைச்சர்களுக்குப் பொறாமையாக இருந்தது. அதனால் பீர்பாலை முட்டாளாக்க வேண்டும் என்று ஏதாவது கேள்விகளைக் கேட்டு அவர்கள் முட்டாளாகி விடுவது வழக்கம்.

அறிவுமிக்க பீர்பாலை மட்டம் தட்ட முடியாத ஒரு அமைச்சர் அவரின் மாநிறமான தோற்றத்தைக் கொண்டு மட்டம் தட்ட நினைத்தார்.

அதனால் அரசவையில் அமர்ந்திருந்த பீர்பாலைப் பார்த்து அந்த அமைச்சர் ஏளனமாகச் சிரித்தார்.
இதனைக் கவனித்துவிட்ட அரசர் அக்பருக்கு கோபம் ஏற்பட்டு, அமைச்சரே! பீர்பாலைப் பார்த்து எதற்காக ஏளனமாகச் சிரித்தீர்கள் என்று கேட்டார்.

மதிப்பிற்குரிய மன்னர் பெருமானே! கோபப்பட வேண்டாம்! எனக்கு அவரைப் பார்த்ததும் ஒரு சந்தேகம் ஏற்பட்டது அதனால் சிரித்தேன், என்றார் அமைச்சர்.
என்ன சந்தேகம்? என வினவினார் மன்னர்.

மன்னர் பெருமானே! தாங்கள் ஜொலிக்கும் தங்கம் போன்ற மேனியைப் பெற்றுள்ளீர்கள். அமைச்சர்களாக உள்ள நாங்களும் நல்ல சிவந்த மேனியுடன் உள்ளோம்.ஆனால் நமது பீர்பால் மட்டும் நிறத்தில் சற்று கறுத்துக் காணப்படுகின்றார்.
ஆகையினால் நம்மோடு அமர்ந்திருப்பதினால் மன்னரின் நிறம் பிரகாசமாகவும், பீர்பாலின் நிறம் கருத்தும் இருப்பதினால் மாறுபாடுடன் நிழலின் அருமை வெயிலில் தெரிவது போன்றுள்ளது என்றார் அமைச்சர்.

அமைச்சர் இதுபோன்று கூறியதும் – அமைச்சரின் மதிகெட்ட பேச்சு புரிந்தது. ஆகையினால் அதனை வெளிக் காட்டிக் கொள்ளாது, பீர்பால் அவர்களே! அமைச்சர் கூறியதற்கு சரியான விளக்கம் அளியுங்கள். மேலும் இதுபோன்ற கேள்வி எப்போதும் எழாத அளவுக்கு பதில் இருக்க வேண்டும் என்றார் அக்பர்.

மன்னரின் வேண்டுக்கோளுக்கு இணங்கி, மதிப்பிக்குரிய மன்னருக்கு வணக்கம்! எனக்கூறி கேள்விக் கேட்ட அமைச்சருக்கு பீர்பால் பதில் கூறலானார்.மாமன்னர் அவர்களே! இறைவன் அன்பானவன். எல்லோரையும் சமமாகப் பாவித்து அருள்பாவிப்பவன். ஒவ்வொருவரையும் படைக்கும் போதும். நமக்கு என்ன வேண்டும் என்று கேட்டு நம் விருப்ப்படி படைக்கிறார் என்பதை பல வேத நூல்களில் கூறியிருப்பதை அறிந்திருக்கிறேன்.

ஆண்டவன் அப்படி தங்கள் எல்லோரிடமும் கேட்டபோது நல்ல சிவந்த நிறத்துடன், பார்ப்பவர்கள் பார்வையில் உயர்ந்திருக்க வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள்!இப்படி நீங்கள் எல்லோரும் வசீகரமான நிறத்தை வாங்கிக் கொண்ட பின்னர் ஆண்டவனிடம் அறிவுடன் விளங்க வேண்டும் என்று கேட்க யாரும் இல்லாமல் போகக் கூடாது என்பதற்காக, எனக்கு நல்ல அறிவை மட்டும் கொடுங்கள் என்று கேட்டுப் பெற்றுக் கொண்டேன்.

அதனால் உங்களுக்கெல்லாம் நல்ல சிவந்த நிறம் கிடைத்தது. எனக்கு மட்டும் நல்ல நிறம் கிடைக்காமல் நல்ல அறிவு கிடைத்தது என்றார் பீர்பால் அவர்கள்.பீர்பாலின் இந்த பதில் – கேள்வி கேட்ட அமைச்சருக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. அரசருக்கு இது சந்தோஷத்தைக் கொடுத்தது. இருப்பினும் – பீர்பால் அவர்களே! தாங்கள் கூறிய பட்டியலில் நானும் இருக்கிறேனா? என்றார் அக்பர்.

பீர்பால் சிரித்துக் கொண்டே மதிப்பிற்குரிய மன்னர் அவர்களே! நீங்கள் தான் ஆண்டவனிடம், உங்கள் அமைச்சரவையில் பீர்பாலும் வேண்டும் என்று கேட்டு பெற்றுக் கொண்டீர்களே என்றார்.

அழகை விட அறிவு மிக அவசியம் என்பதை பீர்பாலின் பதிலினை கேட்டு மன்னர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

பொறாமையால் அமைச்சர் பதவியை இழந்தவர்கள் அக்பர் – பீர்பால்
 கதை

அரசர் அக்பரிடம்,  பீர்பாலுக்கு மிக்க செல்வாக்கு இருப்பதைக் கண்ட அரசவை அமைச்சர்களுக்கு மிகுந்த பொறாமையாக இருந்தது. அதனால் எப்படியாவது அரசரிடமிருந்து பீர்பாலை பிரித்துவிட வேண்டும் அல்லது ஒழத்து விட வேண்டும் என சதி திட்டம் தீட்டினார்.

இந்த திட்டம் நிறைவேற வேண்டுமானால் அரசருக்கு நெருங்கிய ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு யாரை பயன்படுத்துவது என்று யோசித்து அரசருக்கு முடி திருத்தும் ஒரு பணியாளரைத் தேர்ந்தெடுத்தனர்.
அவனுக்கு பொன்னும் – பொருளும் அளிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி அவரை சம்மதிக்க வைத்து, அதற்கான இரகசிய திட்டத்தையும் கூறி, அதனை நிறைவேற்றினால் மேலும் பொன்னும் – பொருளும் அளிப்பதாகக் கூறினார்.
ஒரு நாள் அரசருக்கு முடி திருத்தம் செய்வதற்காக நிரந்தரமாக தம்மிடமுள்ள முடித்திருத்தம் செய்யும் பணியாளருக்கு அழைப்பு வந்தது.

அரசரின் அழைப்புக்காகவே காத்திருந்த அந்த முடி திருத்தும் பணியாளர். அமைச்சர்கள் சொல்லிக் கொடுத்தபடி தம் சதித்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலானார்.

அரச பெருமானே, தங்கள் முடியும், தங்களின் தந்தையாரின் முடிக்கு நிகரான அழகு பொருந்தியது என்று தான் சொல்ல வேண்டும் என்றார் முடி திருத்துபவர்.

அவ்வளவு அழகானதா? அது எப்படி தங்களுக்குத் தெரியும் என்றார் அரசர்.
எனக்குத் தெரியும் அரசே, ஆனால் தாங்கள் தங்களின் தந்தையின் மீது அக்கரை காட்டுவதில்லை போல் தோன்றுகிறது. பாவம் மாமன்னரின் முடி வளர்ந்து அவருடைய கம்பீரத்தையே கெடுத்து விட்டது என்றார் முடி திருத்துபவர்.
என்ன பணியாளரே, உமக்கு புத்தி பேதலித்து விட்டதா? என்ன பேசுகிறாய்? என் தந்தை இறந்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது என்பது உனக்கு தெரியாதா? இறந்து போன ஒருவரை எப்படி நலம் விசாரித்து வரமுடியும்? என்றார் அவர்.
முடியும் அரசே, முடியாதது என்று எதுவும் இல்லை, தாங்கள் மனது வைத்தால் அரசே, என்றார் முடி திருத்துபவர்.
அது எப்படி சாத்தியமாகும்? என்றார் அரசர்.

எனக்கு நன்கு பழக்கப்பட்ட மந்திரவாதி ஒருவர் இருக்கிறார். அவர் உயிருடன் ஒருவரை பாடையில் வைத்து மயானத்திற்கு எடுத்துச் சென்று சக்தியுள்ள மந்திரங்களை ஓதி உடலை எரிப்பார்.
ஆனால் தீ அந்த உடலை எரிக்காது. எரிப்பது போல் நமக்குத் தோன்றும். ஆதலால் உயிருடன் நேராக சொர்க்கத்திற்குச் சென்று நம்முடைய சொந்தக்காரரைச் சந்தித்துவிட்டு வரலாம். இதற்கு நல்ல நம்பிக்கையான ஆள் ஒருவர் இருக்க வேண்டும் என்றார் முடி திருத்துபவர்.

நீங்கள் கூறுவது போல் செய்ய நம்பிக்கைக் குரியவர் எவர் இருக்கின்றார்? என அரசரி யோசனையில் ஆழ்ந்தார்.
அரச பெருமானே, இதற்காக ஏன் யோசிக்கின்றீர்கள்? தங்களின் வாக்கை வேதமாக ஏற்று செயல்படுவதற்கு திறமையான நமது அமைச்சர் பீர்பால் இருக்கின்றாரே, அவரை விட சிறந்த நம்பிக்கைக்குரியவர்கள் எவரும் கிடையாது என்றார் முடி திருத்துபவர்.அரசருக்கு முடி திருத்துபவர் சொல்வது சரியென நினைத்து இதற்கு பீர்பால் ஏற்றவர் அவரையே அனுப்பி வைக்கலாம் என்றார் அரசர்.

மறுநாள் காலை அரசவை கூடியது பீர்பால் உட்பட எல்லா அமைச்சர்களும் வந்திருந்தனர். அரசர் பீர்பாலை அழைத்து தன் விருப்பத்தைக் கூறினார். இக்காரியத்தைச் செய்ய தங்களை விட சிறந்தவர் வேறு எவரும் இல்லை. ஆதலின் தாங்கள் சொர்க்கத்திற்குச் சென்று என் தந்தையாரின் நிலையை அறிந்து வர வேண்டும் என்றார் அரசர்.

அரசர் கூறியதைக் கேட்ட பீர்பால் அதிர்ச்சியடைந்தார். இது எதிரிகள் செய்த சதி என்பதை புரிந்து கொண்டார்.
அரசே தங்களின் ஆசையை நிறைவேற்ற கடமைப் பட்டுள்ளேன். அதற்குள் என் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய சில முக்கியமான கடமைகள் உள்ளன. அதனை செய்து முடிக்க மூன்று மாதங்கள் அவகாசம் வேண்டும். அது வரை தங்களை சந்திக்க இயலாது எனது கடமைகள் முடிந்து மூன்றாவது மாதம் நான் வந்து தாங்கள் கூறம் சொர்க்கத்திற்குச் செல்கிறேன் என்றார் பீர்பால்.

அரசர் பீர்பாலுக்கு சம்மதமளித்தார்.
பீர்பால் அரசவைக்கு வராமல் அரசர் கூறும் காரியத்தை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொணடிருந்தார். பின்னர் அதற்கான வேலையில் ஈடுபட்டு சுடுகாட்டிலிருந்து ஒரு பக்கத்திலுள்ள காட்டுக்கு செல்லும் வகையில் ஒரு சுரங்கப் பாதையை எவருக்கும் தெரியாமல் ரகசியமாக செய்து முடித்தார்.
மூன்று மாதங்கள் கழிந்ததும் பீர்பால் அரசவைக்கு வந்தார். அரசே, நான் சொர்க்கத்திற்குப் போகத் தயாராகி விட்டேன். ஆதலால் அதற்கான ஏற்பாட்டைச் செய்யச் சொல்லுங்கள் என்றார் பீர்பால்.
முடி திருத்துபவர் கூறியபடி மயானத்தில் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. மந்திரவாதி சக்தியுள்ள மந்திரங்களைச் சொல்லி தீயை மூட்டினான். தீ பரவி புகை சூழ்ந்தது.

புகை சூழ்ந்ததைப் பயன் படுத்தி பீர்பால் தான் அமைத்திருந்த சுரங்கப் பாதையின் வழியாகத் தப்பித்து காட்டிற்குச் சென்று இருட்டியதும் மாறுவேடம் புணைந்து தன் வீட்டிற்குச் சென்றார். அன்று முதல் பீர்பால் வீட்டிலேயே மறைந்திருந்தார்.
பீர்பால் எரிக்கப்பட்டு இறந்து விட்டார். இனி ஒரு தொல்லையும் வராது என்று பொறாமை கொண்ட அமைச்சர்கள் ஆனந்தமடைந்தனர்.
ஆறு மாதங்கள் கழிந்தது. ஒரு நாள் அரசவைக்கு ஒரு ஓலையோடு மீசையும், தாடியுமாக ஒரு துறவி வந்தார். நேராக அரசரிடம் சென்று அந்த ஓலையைக் கொடுத்து விட்டு அரசே, என்னை யார் என்று அடையாளம் தெரியவில்லையா? என்றார்.

அவர் கொடுத்த ஓலையை வாங்கிக் கொண்ட அரசர், தாங்கள் யார்? விவரமாகக் கூறினால் அடையாளம் அறிந்து கொள்ள முடியும் என்றார் அரசர்.
அரசே நான்தான் உங்கள் அன்புக்குரிய பீர்பால் சொர்க்கத்தில் தங்களின் தந்தையான மாமன்னரை சந்தித்து விட்டு வந்துள்ளேன். இப்போது தங்களிடம் கொடுத்த ஓலை தங்கள் தந்தையார் கொடுத்தனுப்பியது என்றார் பீர்பால்.
அரசர் ஓலையைப் படிக்கலானார். மகனே, எனக்கே என்னை அடையாளம் தெரியாத அளவுக்கு என் தலை முடியும் – தாடியும் நீண்டு வளர்ந்து விட்டது. இங்கு முடி திருத்துவோர் எவரும் இல்லை. அதனால் எனக்கு மிகவும் சிரமமாகவும் உள்ளது. ஆதலில் நமது அரண்மனை முடி திருத்தும் பணியாளனை அனுப்பி வைத்தால் நலமாக இருக்கும் என்று ஓலையில் எழுதப்பட்டிருந்தது.

அரசர் மிகவும் வருத்தப்பட்டார் எனது தந்தையான மாமன்னருக்கா இந்த நிலை? உடனடியாக முடி திருத்தும் பணியாளனை அழைத்து வாருங்கள் என கட்டளையிட்டார்.
அரசவைக்கு முடி திருத்தும் பணியாளன் வந்தான். நீ கூறியபடி பீர்பால் சொர்க்கத்திற்குச் சென்று என் தந்தையைச் சந்தித்து விட்டு வந்துள்ளார். அங்கு முடி திருத்த ஆள் இல்லாமையினால் முடி பெரிதாக வளர்ந்து மிகவும் சிரமப்படுகின்றார். ஆதனால் முடி திருத்தம் செய்ய உங்களை அனுப்பு வைக்கும்படி ஓலை அனுப்பியுள்ளார். அதனால் தாங்கள் நாளையே புறப்படச் தயாராக வேண்டும் என்றார் அரசர்.

முடி திருத்தும் பணியாளனுக்கு அதிர்ச்சியாகி விட்டது. பணத்திற்கு ஆசைப்பட்டு பாதகச் செயலில் ஈடுபட்டது தவறாகி விட்டது. தன் வினை தன்னையேச் சுடும் என்பது போல் இப்போது பாதிக்கபட்டுள்ளேன் என்று எண்ணினான்.
அரசரின் கட்டளைக்குக் கீழ்படியாவிட்டால் தலை துண்டிக்கப்படும் என்று நடுங்கி அரசரின் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும் படி வேண்டினான்.

அமைச்சர்கள் பொன்னும் – பொருளும் கொடுத்து இந்த சதிச் செயலைச் செய்ய சொன்னார்கள். நான் அறிவிழந்து பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த பாதகச் செயலைச் செய்துவிட்டேன் என்று கதறி அழுதான்.
அரசருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. எப்படி உயிருடன் சொர்க்கத்திற்கு சென்று வரமுடியும். இந்த உண்மைகூட புரியாமல் தந்தையின் பாசத்தினால் தவறு செய்து விட்டோம் என்று உணர்ந்தார்.

இச்செயலுக்கு திட்டம் தீட்டிய அமைச்சர்களையும், இதற்கு உதவியாக இருந்த முடி திருத்தும் பணியாளனையும் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். பொறாமையினால் அமைச்சர் பதவியை இழந்து சிறை செல்லும் நிலையும் ஏற்பட்டுவிட்டதே என்று எண்ணி வருத்தமடைந்தனர் அமைச்சர்கள்.பொறாமை கொண்ட அமைச்சர்கள் அன்பக்குரிய பீர்பாலை கொலை செய்ய சதி செய்தார்களே என்று மனம் கலங்கிய அரசர் பீர்பாலைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

மகா கஞ்சனிடம் பரிசு பெற்ற புலவர் – அக்பர் பீர்பால் கதை
டில்லி நகரின் முக்கியமான ஒரு வீதியில் அகர்லால் என்னும் பெரிய பணக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் கஞ்சனுக்குக் கஞ்சன். உயிரே போனாலும் கூட பிறருக்கு ஒரு சல்லி காசுகூடக் கொடுக்க மாட்டான்.

ஒரு வேளை சமையல் செய்து மூன்று வேளைக்கு வைத்துக் கொள்வான். எப்பொழுதும் ஒரே உடையைத் தான் உடுத்துவான். அழுக்குப் போக சோப்புப் போட்டுத் துவைத்தால் துணி கிழிந்துவிடும் என்று துவைக்காமலேயே உடுத்திக் கொள்வான்.

மாளிகைப் போன்ற வீட்டைப் பராமரிக்க வேலையாட்கள் வைத்தால் பணம் போய் விடுமோ என நினைத்து எல்லா அறைகளையும் பூட்டிவிட்டு ஒரு சிறிய அறையில் மட்டும் வாழ்வான்.

ஒருநாள் – கன்னட தேசத்திலிருந்து விஷ்ணுவர்த்தர் என்னும் புகழ் பெற்ற புலவர் டில்லிக்கு வந்திருந்தவர் அந்தக் கஞ்சன் வீட்டு வீதியின் வழியாகச் செல்ல நேர்ந்தது.

அந்த தெருவில் கஞ்சனின் வீடு பெரியமாளிகையாக இருந்தமையால் இந்த வீட்டுச் செல்வந்தரைப் புகழ்ந்து கவி பாடினால் கணிசமானப் பரிசு கிடைக்கும் என எண்ணி கஞ்சன் வீட்டில் நுழைந்தார் புலவர் விஷ்ணுவர்த்தனன்.

தன்னை அவனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு கஞ்சனின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அவனைப் புகழ்ந்து பாடல்கள் பாடி வாழ்த்தினார்.
புலவர் விஷ்ணுவர்த்தரின் பாடலின் மனம் மகிழ்ச்சி அடைந்தான் அகர்லால். ஆனால் அவருக்கு எந்தப் பரிசும் அளிக்கவில்லை.

புலவருக்கு ஒரு காசுகூட கொடுக்காமல் எப்படி வெளியே அனுப்புவது என்றெண்ணிய கஞ்சன்.

புலவரே தங்களின் பாடல்களினால் உள்ளம் மகிழ்ச்சியடைந்தமைக்கு மிக்க நன்றி. தங்களுக்கு ஏதாவது பரிசு அளிக்க வேண்டியது எனது கடமை. ஆகையினால் நாளைக்கு வந்தால் என்னால் இயன்ற பரிசை தருகிறேன் என்றான் கஞ்சன் அகர்லால்.

Akbar Birbal Kathaiகஞ்சனின் சொற்படியே சென்று மறுநாள் வந்தார் புலவர் விஷ்ணுவர்த்தர்.கஞ்சன் புலவர் வந்ததைக் கண்டும் காணாமல் அங்கு வந்திருந்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தான். பல மணி நேரம் கடந்தும் கவனியாத்து போல இருந்தான்.

சிறிதும் மனம் சஞ்சலம் இல்லாமல் கஞ்சனிடம் சென்று, ஐயா, தங்களின் சொல்படி வந்திருக்கிறேன். மறந்து விட்டீர்களா? என்று நினைவுப்படுத்தினார் புலவர் விஷ்ணுவர்த்தர்.

கஞ்சன் மறந்து விட்டவன் போன்று, ஓ…. தாங்கள் புலவரா? நேற்றைய விஷயத்தை மறந்து விட்டேன். இப்போது ஒருவரிடம் முக்கியமான விஷயம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன். இப்போது எதுவும் செய்ய இயலாது. ஆகையினால் நாளைக்கு வாருங்கள் ஏதாவது பரிசு தருகிறேன். என்றான் அகர்லால்.

மனம் தளராது மறுநாளும் கஞ்சன் வீட்டிற்குச் சென்றார் புலவர்.புலவரைக் கண்டதும் கஞ்சனுக்கு கோபம் வந்து விட்டது. என்னைப் புகழ்ந்து பாடியதற்கு ஏதோ பரிசு தரலாம் என்று சொல்லி விட்டேன் என்பதற்காக தினசரி வந்து என்னைத் தொந்தரவு செய்ய வேண்டுமா? தருகிறேன் என்று சொன்னால் கொடுத்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏதாவது இருக்கிறதா? பரிசு ஒன்றும் தர முடியாது. இனி வந்து தொந்தரவு கொடுக்காதீர்கள் என்றான் கஞ்சன்.

ஒன்றும் பேசாமல் மன சஞ்சலத்துடன் புலவர் திரும்பி விட்டார். அடுத்த நாள் – பீர்பாலைச் சந்திக்கச் சென்றிருந்தார். ஏற்கனவே புலவர் விஷ்ணுவர்த்தரின் புகழைக் கேள்விப் பட்டிருந்தமையால் அவரை அழைத்து மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார் பீர்பால்.

பேச்சின் இடையே பீர்பாலிடம் கஞ்சன் அகர்லாலின் செய்கையைக் கூறி மனவருந்தினார் புலவர்.

தங்களை இழிவு படுத்தியவனை நான் சரியான பாடம் புகட்டுகிறேன். தயவு செய்து தாங்கள் அவனது இல்லத்திற்குச் சென்று.

இன்று இரவு பீர்பால் அவர்கள் வீட்டில் விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். தங்களை முக்கிய விருந்தினராக வரவேற்று அழைப்பதாகக் கூறுங்கள் என்றார்.

மறுநாள் புலவர் கஞ்சன் வீட்டிற்குச் சென்று பீர்பால் விருந்திற்கு அழைத்தச் செய்தியைக் கூறினார்.

பீர்பாலின் அழைப்பைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டான். தன்னை மதித்து அழைப்பதினால் நமக்கு ஏதாவது சிறப்பு செய்து பெருமைப்படுத்துவார்கள் என்று நினைத்து விருந்திற்கு வருவதாகப் புலவரிடம் கூறினான் கஞ்சன்.

அன்று இரவு – கஞ்சன் விருந்திற்கு வருவதற்கு முன்னதாகவே பீர்பாலும் புலவரும் சாப்பிட்டுவிட்டு கஞ்சனின் வரவுக்காகக் காத்திருந்தனர்.

கஞ்சன் குறிப்பிட்ட நேரத்தில் பீர்பாலின் வீட்டிற்கு வந்தான். பீர்பாலும், புலவரும் அவனைப் பொருட்படுத்தாமல் சுவையாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

தன்னை வரச் சொல்லிவிட்டு தன்னைப் பொருட்படுத்தாமல் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு பொறுமையிழந்தான் கஞ்சன் அகர்லால்.

பீர்பாலின் அருகில் சென்று, பீர்பால் அவர்களே, இன்று என்னை விருந்திற்கு அழைத்து விட்டு, என்னைப் பார்த்ததும் வரவேற்கவில்லை. அத்துடன் இங்கே விருந்து நடப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை, என்றான் கோபத்துடன் கஞ்சன்.

ஓ… நீங்களா? உங்களை புலவர் விருந்துக்கு வரும்படி அழைத்தார் அல்லவா? இதனை எல்லாம் அவரும் மறந்துவிட்டார். நானும் மறந்து விட்டேன். தயவு செய்து மன்னியுங்கள் என்று கூறிவிட்டு, அவன் இருப்பதையும் மறந்து விட்டவர்கள் போல் மீண்டும் பேசிக் கொண்டிருந்தனர்.

இரவு பீர்பாலின் வீட்டில் விருந்து என்பதினால் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் பசியோடு இருந்தான் கஞ்சன்.

மீண்டும் பீர்பாலிடம், நீங்கள் இருவரும் பேசிக் கொண்டேயிருந்தால் எப்படி? எப்போது விருந்துண்ண ஏற்பாடு செய்யப் போகிறீர்கள்? என்றான்.

இது என்ன பெரிய தொல்லையாகப் போய்விட்டதே, ஏதோ பேச்சுக்கு விருந்துக்கு வாருங்கள் என்று அழைத்தால் அதை நம்பி புறப்பட்டு வந்து விடுவதா? விருந்துண்ண அழைத்தால் விருந்து வைக்க வேண்டும் என்று ஏதாவது கட்டாயமா? விவரம் தெரியாத ஆளாக இருக்கிறாயே, என்று பீர்பால் கடுமையுடன் கூறினார்.

எதற்காக நம்மை இப்படி ஏமாற்றினார்கள் என்று யோசனை செய்த கஞ்சனுக்கு அப்போதுதான் புலப்பட்டது. தான் புலவருக்குப் பரிசு தருவதாகக் கூறி, பல தடவை வரச்செய்து. கடுமையாகப் பேசி ஏமாற்றி அவமானப்படுத்தியதற்கு பீர்பால் தமக்குப் பாடம் புகட்டியுள்ளார் என்பதை உணர்ந்து கொண்டான்.

உடனே கஞ்சன் அகர்லால், மதிப்பிற்குரிய பீர்பால் அவர்களே, புலவருக்கு செய்த தவறை மன்னியுங்கள். பெரும் செல்லவம் இருந்தும் பண்புள்ளம் இல்லாமல் இருப்பது பட்ட மரத்திற்குச் சமம் என்பதை உணந்து விட்டேன்.

புலவர் அவர்களே, தாங்களும் என்னை மன்னியுங்கள். நான் சொல்லியபடி எனது பரிசாக இந்த தங்க மோதிரத்தை அளிக்கிறேன். மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கையில் அணிந்திருந்த தங்க மோதிரத்தைக் கழற்றிப் புலவருக்கு அளித்தான் அகர்லால்.

பீர்பால் அவர்கள் கஞ்சனை நோக்கி ஐயா, இந்தக் குணம் பாராட்டத்தக்கது. இது போன்று நல்லவர்களுக்கு பரிசளித்து மேலும் சிறப்புற்று வாழுங்கள் என்றார்.

பின்னர் பீர்பால் கூறிய வண்ணம் – மோதிரம் பரிசளித்த அகர்லாலுக்கு விருந்தளித்து மனமகிழ்வுடன் அனுப்பி வைத்தார். அகர்லாலும் மனமகிழ்வுடன் வீடு வந்து சேர்ந்தார்.

வைரத்தை திருடியது யார்? அக்பர் பீர்பால் கதை

வைர வியாபாரி ஒருவர், பீர்பாலைத் தேடி வந்தார். விலை உயர்ந்த வைரக்கல் ஒன்று கடையிலிருந்து காணாமல் போய் விட்டதாகவும் அதைக் கண்டு பிடிப்பதற்கு தக்க வழி கூறுமாறும் வைர வியாபாரி பீர்பாலைக் கேட்டுக் கொண்டார்.
பீர்பால் வைர வியாபாரியின் கடைக்குச் சென்று பார்த்தார். கடையில் நாலைந்து பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
உங்கள் கடையிலிருந்து வைரத்தை எடுத்திருபார்கள் என்று யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டுள்ளதா? என்றார் பீர்பால்.

வைர வியாபாரியும் கடையில் வேலை செய்யும் மூன்று நபர்கள் மீது சந்தேகம் ஏற்படுவதாக கூறினார். மூவரையும் அழைத்து வரச் சொன்னார். கடையிலிருந்து மூவரும் வந்தார்கள். அவர்களிடம் பத்து அங்குலம் நீளமுள்ள மூன்று குச்சிகளை ஒவ்வொருவரிடமும் கொடுத்து அதை வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறும், ஒருநாள் வைத்திருந்து விட்டு அடுத்த நாள் குச்சியைத் திருப்பிக் கொண்டு வருமாறு கூறினார். அந்தக் குச்சிகள் மந்திர சக்தி வாய்ந்ததும் எனவும் திருடர்களிடம் அக்பர் பீர்பால் கதைஇருந்தால் குச்சி ஒரு ரு நாளைக்கு ஒரு அங்குலம் வளர்ந்து விடும் என்றும் குச்சியை திருப்பி தரும் பொழுது அளந்து பார்ப்பதாகவும் கூறினார். மூன்று பேரும் குழப்பத்துடன் போய் விட்டார்கள்.

வைரத்தை திருடிய வேலைக்காரனுக்கு அன்று முழுவதும் உறக்கம் வராமல் அவதிப்பட்டான். தான் திருடியது தெரிந்து விடுமோ என்று பயந்தான். தான் திருடியது தெரியாமல் இருக்க என்ன செய்வது? என்று யோசித்தான். நாளைக்கு குச்சியை அளந்து பார்க்கும் போது ஒரு அங்குலம் வளர்ந்து விடுமே. அதனால் இப்போது ஒரு அங்குலம் வெட்டி விட்டால் என்ன என்று யோசனை உதித்தது. குச்சியில் ஒரு அங்குலத்தை வெட்டி எடுத்தான்.

அடுத்த நாள் மூன்று வேலைக்காரர்களும் தாம் எடுத்துச் சென்ற குச்சிகளை திருப்பிக் கொடுத்தார்கள். பீர்பால் குச்சியை வாங்கிக் கொண்டார். ஒவ்வொரு குச்சியையும் பார்த்தார். வைரத்தை திருடிய வேலைக்காரன் கொடுத்த குச்சியைப் பார்த்தார். நீளம் குறைந்திருந்தது.வைரத்தை திருடிய வேலைக்காரன் காலையில் குச்சியின் அளவை பார்க்க தவறி இருந்த படியால் தமது செயல் காட்டி கொடுத்து விட்டது.

பீர்பால் அந்த வேலைக்காரனை முறைத்தார். வைரத்தை திருடியது நீதான் என்பதை ஒத்துக் கொள்கிறாயா? அல்லது சிறைக்கு செல்கிறாயா? என்றார் பீர்பால்.

வைரத்தை திருடிய வேலைக்காரன் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

காகங்களின் எண்ணிக்கை என்ன? அக்பர் பீர்பால் கதை
அக்பர் தமது பிரச்சனைகளுக்கு விடை காண பீர்பாலையே நம்பியிருப்பது அரச சபையில் இருந்த மற்ற அமைச்சர்களுக்கு வருத்தமாகவும் பொறாமையாகவும் இருந்தது. இது குறித்து அரசரிடம் எல்லோரும் ஒன்று கூடி கேட்டு விடுவது என தீர்மானித்தார்கள்.

அரச சபை கூடியது, அரசே தாங்கள் எந்த பிரச்சனைக்கும் பீர்பாலையே எதிர் பார்க்கிறீர்கள். அமைச்சர்களாகிய எங்களை மட்டம் தட்டுவது போலவும், முட்டாள் ஆக்குவதாகவும் உள்ளது என்று அமைச்சர்கள் ஒன்றுகூடி மன்னரிடம் முறையிட்டார்கள்.

அமைச்சரின் குற்றச்சாட்டினைக் கேட்டு அரசர் சிரித்துக் கொண்டார். அமைச்சர்களே பீர்பாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் அவரது அறிவாற்றலும் திறமையும், சாதுர்யமான பேச்சும் தானே தவிர தனிப்பட்ட முறையில் எந்த காரணமும் இல்லை. அவரது மதிநுட்பத்தை போற்றுகிறேன் அதனால் உங்கள் அனைவரையும் இழிவாக கருதுகிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது. இன்னும் சிறிது நேரத்தில் பீர்பால் வந்துவிடுவார். உங்களுக்கு முன்னால் அவரை சோதிக்கிறேன். அவரது அறிவுத் திறமையை தெரிந்துக் கொள்ளுங்கள் என்றார் அக்பர்.

சிறிது நேரத்தில் பீர்பால் சபைக்கு வந்தார். அரசர் அமைச்சர்களுடன் மற்ற சில விஷயங்களை குறித்து விவாதித்தார். பிறகு திடீரென்று அரசர் அமைச்சர்களைப் பார்த்து நமது நாட்டில் மொத்தம் எத்தனை காகங்கள் உள்ளன என்பது யாருக்காவது தெரியுமா என்றார்?


நாட்டில் எத்தனை ஆறுகள் உள்ளன? மலைகள் உள்ளன என்று கேட்டால் கூறலாம். நாட்டில் உள்ள காக்கைகளின் எண்ணிக்கை யாருக்குத் தெரியும்? அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். யாருக்கும் விடை தெரியவில்லை.என்ன அமைச்சர்களே உங்களில் ஒருவருக்கும் விடை தெரியவில்லையா? என்றார் அரசர். பீர்பாலை பார்த்து நீங்களாவது பதில் கூறுங்கள் என்றார்.

அரசே நமது நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து என்பத்தெட்டாயிரத்து முந்நூற்றி இருபத்து ஐந்து காகங்கள் இருக்கின்றன என்றார் பீர்பால்.அமைச்சர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. காகங்களின் எண்ணிக்கையை பீர்பாலால் எப்படி கூற முடிந்தது? என்று வியந்து போனார்கள்.

தன்னை அறிவு ஜீவியாக நினைத்துக் கொண்டிருந்த அமைச்சர் ஒருவர் எழுந்தார்.பீர்பால் தாங்கள் கூறிய எண்ணிக்கையை விட கூடுதலான அளவில் காகங்கள் இருந்தால் என்ன செய்வது? என்றார்.அமைச்சர் பெருமானே… தாங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம். நான் கூறிய எண்ணிக்கையை விட கூடுதலாக இருந்தால் வெளியூரிலிருந்து நமது நாட்டிற்கு சில காகங்கள் விருந்தாளியாக வந்துள்ளன என தெரிந்து கொள்ளலாம்.இன்னொரு அமைச்சர் பீர்பால் தாங்கள் கூறுவது போல் காகங்கள் அதிகமாக இருந்தால் விருந்தாளியாக வந்துள்ளன என்பது சரி, தாங்கள் கூறிய எண்ணிக்கையை விட காகங்கள் குறைவாக இருந்தால் என்ன செய்வது? என்று ஆணவத்துடன் கேட்டார்.அப்படியும் இருக்கலாம். நமது நாட்டில் உள்ள காகங்கள் வெளியூரில் உள்ள உறவுக்கார காகங்களைப் பார்ப்பதற்கு சென்றிருக்கும் என்றார் பீர்பால் சிரித்துக் கொண்டே.

அமைச்சர் அனைவரும் ஆச்சர்யத்தில் பதில் பேச முடியாமல் மெளனமாக இருந்தார்கள். அரசர் அமைச்சர்களை நோக்கினார். வெட்கத்தில் முகம் கவிழ்ந்து போனார்கள் அமைச்சர்கள்,

யமுனை நதி அழுவது ஏன்? அக்பர் பீர்பால் கதை
அக்பர் தமது மனைவியுடன் யமுனை நதிக்கரையில் அமர்ந்து யமுனையின் அழகினை ரசித்துக் கொண்டிருந்தார்.
பேகம்…… யமுனை நதியின் நீரோட்டத்தின் சல சலப்பு உன்னை அழகி அழகி என்று கூறிக்கொண்டே செல்வது போல் தோன்றுகிறது… இல்லையா பேகம் என்றார் கொஞ்சும் குரலில் ஆனால் அரசியாரோ அக்பர் கூறியதை மறுத்து உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது யமுனை நதியின் akbar-birbalசல சலப்பு ஒரு பெண் அழுது கொண்டிருப்பது போல தனது கண்களுக்கு தெரிகிறது. யமுனை அழுது கொண்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.. என்றார் அரசியார். அக்பருக்கோ அதிர்ச்சியாக இருந்தது. ஏன் பேகம் உன் அழகைக் கண்டு பொறாமை பட்டு அழுது கொண்டிருக்கிறதோ? என்றார் அரசர்.அரசியாரின் முகம் வெட்கத்தால் சிவந்துபோனது.

அடுத்த நாள் அரச சபை கூடியதும் அமைச்சர்களிடம் தமது சந்தேகத்தை கேட்டார். யமுனை அழுது கொண்டிருப்பது போல் தோன்றுவதற்கு என்ன காரணம்? யாருக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பீர்பால் சபையில் மெளனமாக அமர்ந்திருந்தார். என்ன பீர்பால்…. நீங்கள் கூறுங்கள் யமுனை ஏன் அழுது கொண்டிருக்கிறது? என்றார் அக்பர். தமது வழக்க்கமான புன்சிரிப்புடன் தமது இருக்கையை விட்டு எழுந்தார் பீர்பால்.

அரசே இமயமலை தான் யமுனையின் தாயகம் – வங்க கடல் யமுனையின் புகுந்த வீடு எனக் கூறலாம். பிறந்த இடத்தை விட்டு பிரிந்து புகுந்த இடமான வங்கக் கடலை நோக்கி போக வேண்டியுள்ளதே என வேதனைப்பட்டு அழுது கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன் என்றார் பீர்பால்.தனது கேள்விக்கு சரியான விளக்கத்தை அளித்த பீர்பாலை மனமுவந்து பாராட்டினார் அக்பர். சபையில் இருந்த அனைவரும் பீர்பாலின் சாதுர்யமான பேச்சை கேட்டு ரசித்து தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்கள்.

காரணம் என்ன – அக்பர் பீர்பால் சிறு கதை
அக்பரின் அரச சபையில் அறிஞர்களும் புலவர்களும் கூடியிருந்தார்கள். அப்போது அக்பர் திடீரென்று ஒரு கேள்வியை சபையில் கேட்டார்.என் உள்ளங்கையில் ஏன் ரோமம் முளைக்க வில்லை? என்று கேட்டார்.

அக்பரின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று சபையில் உள்ளோர் திகைத்துப் போனார்கள். பீர்பால் மீது பொறாமை கொண்ட சிலர் பீர்பால் மன்னரிடம் சாதுர்யமாய் எதையாவது கூறி நல்ல பெயரை தட்டிச் சென்று விடுவாரே என்ற கவலை இருந்தாலும் அக்பர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.சபையில் உள்ளோர் அனைவரும் மெளனம் சாதித்ததை கண்டதும் அக்பர் என்ன பீர்பால் நீங்களே சொல்லுங்கள் என்றார் மன்னர்.

தங்களது பொற்கரங்களால் அனைவருக்கும் பொருளை வாரி வழங்குகிறீர்கள். தொடர்ந்து செல்வத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பதால் தங்களது உள்ளங்கையில் ரோமம் முளைக்கவில்லை! என்றார் பீர்பால்.அக்பர் அத்துடன் விடவில்லை பீர்பாலிடம், உங்கள் கைகளில் ரோமம் முளைக்காததற்கான காரணம்? என்று கேட்டார்.

சற்றும் தாமதிக்காமல் பீர்பால் ஒவ்வொரு நாளும் தங்களிடம் அன்பளிப்பை என் கைகள் பெற்றுக் கொண்டே உள்ளது அல்லவா? அதனால் என் கரங்களில் ரோமம் முளாக்காமல் உள்ளது!பீர்பால் நம் இருவரது கைகளிலும் ரோமம் முளைக்காததற்கு காரணத்தைக் கூறிவிட்டீர்கள். ஆனால் சபையில் உள்ள இவர்களின் கைகளில் ஏன் முளைக்க வில்லை என்று பீர்பாலைக் கண்டு பொறாமைப் படுவோரை சுட்டிக் காட்டினார்.

பாதுஷா அவர்களே ஒவ்வொரு நாளும் தாங்கள் எனக்கு அளிக்கும் பரிசுகளைப் பார்த்து, பொறாமை உணர்வால் கைகளை பிசைந்து கொண்டிருப்பதால் இவர்களின் கைகளில் ரோமம் முளைக்க வில்லை.பீர்பலின் சாதுர்யமான பதிலைக் கேட்டு அக்பர் தன்னை மறந்து சிரித்தார்.

பழமும் தோலும் இல்லை அக்பர் பீர்பால் கதை
அக்பரும் அரசியும் ஒருமுறை உணவு அருந்தி கொண்டிருந்தனர். அப்பொழுது அக்பருக்கு பிடித்தமான நிறைய வாழைப்பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. அக்பர் சாப்பிட்டவுடன் அந்த வாழைப்பழங்களை அனைத்தையும் சாப்பிட்டு அதன் தோல்களை அரசியாரின் இலையில் ஒரு ஓரத்தில் வைத்து விட்டார்.

அப்பொழுது பீர்பால் சில முக்கியமான அரசியல் செய்திகளை பேச அங்கு வந்தார். அக்பர் உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் என்று அழைத்தார். அக்பர் பீர்பாலிடம் இந்த அரசியாரின் இலையை பாருங்கள் அனைத்து வாழைப்பழங்களையும் அரசியாரே தின்றுவிட்டார் என்று பீர்பாலிடம் விளையாட்டாக கூறினார். அதற்கு பீர்பால் ஆம் அரசே ஒன்றும் விடாமல் தின்றுவிட்டார்கள் என்று கூறி, அக்பரின் இலையை பார்த்து அரசே அரசியாராவது பரவாயில்லை. உங்கள் இலையில் வாழைப்பழ தோல்களையும் காணுமே. ஏன் அரசே தோல்களையும் சேர்த்து தின்றுவிட்டிர்களா என்று கேட்டார். அதற்கு அரசி மிகவும் மகிழ்ச்சி அடைந்து பீர்பாலிடம் அரசர் என் இலையில் உள்ள வாழைப்பழத்தோலையாவது விட்டுவிட்டாரே என்று சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள் என்று கிண்டலாக அரசியார் பீர்பாலிடம் கூறினார். இதற்கு அக்பர் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திகைத்தார்.

நடுங்கும் குளிரில் இளைஞன் – அக்பர் பீர்பால் கதை
ஒரு இரவுபொழுதில் அக்பரும் பீர்பாலும் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது குளிர் மிகவும் அதிகமாக இருந்ததால் அக்பர் ஒரு போர்வை போத்திக்கொண்டார். அக்பர் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள் கூட இந்த குளிருக்கு பயந்து விடுவார்கள் என்று கூறினார். பிறகு எவன் ஒருவன் யமுனை ஆற்றில் கழுத்துவரை வெற்று உடம்பில் ஒரு இரவு முழுவதும் நிற்கிறானோ அவனுக்கு ஒரு லட்சம் தங்க நாணயம் பரிசாக கொடுக்கலாம் என்று முடிவு எடுத்தார். அதன்படி பீர்பால் அந்த போட்டிக்கான ஏற்பாடுகள் செய்தார். அரசின் இந்த போட்டி நாடெங்கும் பரப்பப்பட்டது..

ஒரு இளைஞன் அரசரை சந்தித்து நான் இந்த போட்டிக்கு தயார் என்று கூறினான். இதை கேட்ட அரசர் அவனை பார்த்து வியந்தார். அவனிடம் போட்டியின் நிபந்தனையான வெற்று உடம்பில் ஒரு இரவு முழுவதும் நிற்கவேண்டும் என்று எச்சரித்தார். அதற்கு அவன் ஒப்புக்கொண்டு போட்டிக்கு தயாரானான் அந்த இளைஞன்.

அந்த இளைஞனும் யமுனையாற்றில் வெற்று உடம்பில் இறங்கினான். அவனை கண்காணிப்பதற்க்கு இரு வீரர்களை அரசர் நியமித்தார். அவன் உடம்பு குளிரில் நடுங்கியது அவனால் குளிரைத்தாக்கு பிடிக்க முடியவில்லை. பிறகு அவன் வெற்றி பெற்றால் ஒரு லட்சம் தங்க நாணயங்கள் பரிசு கிடைக்கும் என்பதை நினைத்துக்கொண்டு இரவு முழுவதும் வெற்றிகரமாக நின்று விட்டான். மறு நாள் அரசிடம் சென்று அரசே நான் நேற்று இரவு முழுவதும் நீரில் வெற்று உடம்புடன் நின்று விட்டேன் என்று கூறினான். அரசர் அந்த இரு காவலாளிகளிடம் வினவினார் காவலர்களும் அதை ஒப்புக்கொண்டனர்.

அரசர் அந்த இளைஞனிடம் உன்னால் எப்படி ஒரு நாள் முழுவதும் நீரில் நிற்க முடிந்தது என்று வினவினார். அதற்கு அவன் உங்கள் அரண்மனையில் ஒரு சிறிய விளக்கை பார்த்துக்கொண்டு ஒரு இரவு முழுவதும் கழித்துவிட்டேன் அரசே என்று கூறினான். அதற்கு அரசர் இப்பொழுது எனக்கு புரிந்துவிட்டது நீ அந்த விளக்கை பார்த்து கொண்டிருந்ததால் அதன் சூடுபட்டு குளிர் தெரியாமல் நீ இரவு முழுவதும் கழித்துவிட்டாய் அதனால் உனக்கு பரிசு கிடையாது என்று கூறி அவனை அனுப்பிவிட்டார்.

வருத்தத்துடன் அந்த இளைஞன் பீர்பாலிடம் முறையிட்டான், பீர்பால் அந்த இளைஞனிடம் நான் அரசரிடம் இதை முறையாக புரியவைத்து உனக்கு ஒரு லட்சம் தங்க நாணயங்களை பரிசாக வாங்கித் தருகிறேன் என்று கூறினார்.

சில நாட்கள் கழித்து அக்பர் வேட்டையாட பீர்பாலை அழைத்து செல்ல எண்ணினார் அதன் படி அவர் காவலனிடம் பீர்பாலை வருமாரு கட்டளையிட்டார். காவலன் பீர்பலின் இல்லத்துக்கு சென்று பீர்பாலிடம் கூறினார். பீர்பால் நான் சமயல் செய்து பிறகு வருவதாக அரசரிடம் சொல் என்று கூறினார். காவலாளி அரசரிடம் அதை கூறினார். அக்பர் வெகு நேரம் காத்திருந்தும் பீர்பால் வரவில்லை. பொருமை இழந்து அக்பர் பீர்பாலின் இல்லத்திற்கே சென்று விட்டார். அரசர் பீர்பால் இல்லத்தில் கண்டதை பார்த்து வியந்து, உனக்கு என்ன பயித்தியம் பிடித்து விட்டதா என்று பீர்பாலிடம் கேட்டார் ஏனெனில், பீர்பால் அரிசி நிறைந்த பாத்திரம் ஒருபக்கமும், அடுப்பு ஒருபக்கமும் எரிந்து கொண்டு இருந்தது. அதற்க்கு பீர்பால் அரசே யமுனை ஆற்றிலிருந்து வெகுதூரத்தில் இருக்கும் அரண்மனையின் விளக்கு அந்த இளைஞனின் குளிரை தனிக்கும் வெப்பத்தை தரும்பொழுது, இவ்வளவு அருகில் இருக்கும் அடுப்பில் இருந்து வெப்பம் கிளம்பி பாத்திரத்தில் இருக்கும் அரிசியை வேக வைக்காதா என்று கேள்வி எழுப்பினார். இதன் பொருளை உணர்ந்த அக்பர் அந்த இளைஞனுக்கு பிரிசு அளிக்க ஒப்புக்கொண்டு பரிசும் அளித்தார்.

அக்பர் பீர்பால் பிரிவு – அக்பர் பீர்பால் கதை
அக்பரும் பீர்பாலும் ஒருமுறை ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய நேர்ந்தது. பீர்பால் அரசரை பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றார். அரசர் பீர்பாலின் பிரிவை தாங்க முடியாமல் மிகவும் வருத்தப்பட்டார். அக்பர் படைவீரர்களுக்கு பீர்பால் எங்கு இருந்தாலும் அழைத்து வருமாரு உத்தரவிட்டார். படைவீரர்கள் எங்கு தேடியும் பீர்பால் கிடைக்கவில்லை. இதனால் அக்பர் மிகவும் துயரத்தில் ஆழ்ந்தார்.

அக்பர் உடனே ஒரு யோசனை செய்து, அனைத்து நாட்டு மன்னர்களுக்கும் ஒரு ஓலை அனுப்பினார். அந்த ஓலையில் கூறியிருந்தாவது, எங்கள் நாட்டில் உள்ள கடல்களுக்கும், மலைகளுக்கும் திருமணம் நடத்த உள்ளோம் எனவே உங்கள் நாட்டில் உள்ள கடலையும் மலைகலையும் திருமணத்திற்கு அனுப்பும்மாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டு இருந்தது.

அக்பரின் ஓலையை கண்டு ஒரு அரசன் பதில் ஒலை அனுப்பிருந்தார் அதில் என் அன்பிற்குரிய அரசே உங்கள் நாட்டில் நடக்கும் திருமணத்திற்கு எங்கள் நாட்டில் உள்ள கடல்களும், மலைகளும் வாழ்த்த வருகின்றன எனவே உங்கள் நாட்டில் உள்ள குளங்களையும், ஏரிகளையும் வரவேற்க தயாராக இருக்க சொல்லுங்கள் என்று எழுதி இருந்தது. இதை கண்ட அக்பர் வியந்தார். பிறகு இப்படிபட்ட பதில் ஒருவனால்தான் முடியும் அது பீர்பாலாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து படைவீரர்களை அந்த நாட்டிற்கு அனுப்பி பீர்பாலை அழைத்து வர கட்டளையிட்டார்.

பீர்பாலும் அக்பர் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டார். அக்பர் பீர்பலை மிகவும் சந்தோசத்துடன் கட்டி ஆர தழவிக்கொண்டார். பிறகு அந்த பதில் கடிதத்துக்கு அர்த்தத்தை வினவினார். அதற்கு பீர்பால் அரசே சூரிய உஷ்ணத்தில் கடல் நீர் அவியாகி மழை நீராக நாட்டில் பொழியும் அறிகுறிகள் இருந்தன எனவேதான் நான் அப்படி எழுதினேன் என்று கூறினார்.

அக்பர் தினமும் தூங்கி எழுந்தவுடன் அவர் எதிரில் உள்ள வினாயகர் படத்தை தான் பார்ப்பார்.

ஒரு நாள் அவர் கண் விழிக்கும் போது சிப்பாய் ஒருவர் வந்து விட்டார். அன்று முழுவதும் அக்பருக்கு பல‌ பிரச்சனைகள் வ்ந்தது. எல்லாம் அந்த‌ சிப்பாய் முகத்தில் விழித்ததால் தான் என்று அந்த‌ சிப்பாயை தூக்கில் போட‌ உத்தரவிட்டார்.

இந்த‌ விஷயம் பீர்பாலுக்கு தெரிய‌ வந்தது.பீர்பால் மன்னரிடம் ஏன் அவரை தூக்கிலிடபோகிறீர் என்று கோபமாக கேட்டார்.

அதற்கு அக்பர் இவனுடைய‌ முகத்தில் விழித்ததால் எனக்கு ஏகப்பட்ட‌ பிரச்சனைகள் வந்தது, இவனுடைய‌ முகம் அபசகுனமானது என்று கூறினார்.

அதற்கு பீர்பால் பயங்கரமாக‌ சிரித்தார்.

"ஏன் சிரிக்கிறாய்?" என்று அக்பர் கோபமாக‌ பீர்பாலை பார்த்து கேட்டார்.

அதற்கு பீர்பால் "நீங்கள் அவனுடைய‌ முகத்தில் விழித்ததால் உங்களுக்கு பிரச்சனைகள் மட்டும் தான் வந்தது. ஆனால் அவன் உங்கள் முகத்தில் விழித்ததால் அவனுக்கு உயிரே போகப்போகிறதே , அப்போ யாருடைய‌ முகம் அபசகுனமானது என்று நினைத்து சிரித்தேன்" என்றார்.

அக்பர் தன் தவறை உணர்ந்து அந்த‌ சிப்பாயை விடுதலை செய்தார்.‌

“கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதுவர்களை அனுப்பமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?”

இது பேரரசர் அக்பர் பீர்பாலை பார்த்து கேட்ட சந்தேகம்

பீர்பால் கூறினார் "இதற்கு உடனே விடை கூற முடியாது, சற்று அவகாசம் வேண்டும்"

சில நாட்கள் கழித்து அக்பர் குடும்பத்தாரோடு கங்கையில் படகில் செல்ல
வேண்டியிருந்தது. ஆழமான பகுதியில் செல்லும் போது அக்பரின் பேரனை தூக்கி பீர்பால் கங்கை நதியில் போட்டு விட்டார்.
அக்பருக்கு ஆத்திரம் வந்தாலும், உடனே ஆற்றில் குதித்து தனது பேரனைக் காப்பாற்றினார்.

பீர்பாலை பார்த்து “முட்டாளே! ஏன் இக்காரியத்தைச் செய்தாய்?” என கோபமாகக் கேட்டார்.

அதற்கு பீர்பால், பேரரசே! உங்களை ஒரு
கேள்வி கேட்கிறேன். குழந்தை தண்ணீரில் விழுந்த பொழுது,
படைத்தளபதியை, என்னை மற்றும் வீரர்களை நோக்கி
‘குழந்தையைக் காப்பாற்று’ என்று ஆணையிடாமல் நீங்கள் குதித்தது ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அக்பர் "குழந்தையைக் காப்பாற்றுவது
என் கடமையா? அல்லது ஆணையிட்டுக் கொண்டிருப்பது
பெருமையா?" எனப் பதிலுக்கு கேட்டார்.

பீர்பால் அமைதியாக கூறினார், "சக்ரவர்த்தி அவர்களே! நீங்கள் என்னிடத்தில் கடவுள் தானே பக்தர்களைக் காக்க உலகிற்கு வருவது ஏன்? வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டீர்கள். எத்தனை பேர் இருந்தாலும், நீங்களே குழந்தையைக் காக்க நினைத்தது
போல, ஆபத்தில் இறைவன் தானே வந்து மக்களைக் காப்பான்."
என்றார்


ஒருமுறை பீர்பால் தன் சொந்த வேலை காரணமாக அயல்தேசம் செல்ல நேரிட்டது. செல்லும் வழியில் அரண்மனை ஒன்று தென்பட்டது. மிகவும் அசதியாக இருந்த பீர்பால் அதில் சிறிது நேரம் தங்கிச் செல்லலாம் என முடிவு எடுத்தார். அது அயல்நாட்டு மன்னனின் அரண்மனையாகும். அந்த விஷயம் பீர்பாலுக்கு தெரியாது. அக்பரின் ஆளுகைக்குட்பட்ட மண்ணில் இருக்கும் அரண்மனை என்றே அவர் நினைத்தார்.

அந்த அரண்மனையின் பின்புறம் சென்று குதிரையைக் கட்டிவிட்டு பார்த்தார். ஆள் அரவமே இல்லை. அரண்மனைக்குள் புகுந்ததும் அடுக்களை தென்பட்டது. தமக்கிருந்த பசியில் சிறிதும் யோசிக்காமல் உணவினை எடுத்து உண்டார். பின்னர் அடுத்த அறைக்குச் சென்றார். அழகான பஞ்சு மெத்தையுடன் கூடிய படுக்கையறை. உண்ட மயக்கத்தில் அந்த படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டார்.

வேட்டையாடச் சென்றிருந்த மன்னர் சற்று நேரத்திற்கெல்லாம் வந்து விட்டார். தன் உணவை உண்டு விட்டு தன்னுடைய படுக்கையில் படுத்திருப்பவனைப் பார்த்ததும் சினம்கொண்டு பீர்பாலைத் தட்டி எழுப்பினார்.
"என் அரண்மனைக்குள் புகுந்து என் உணவினை உண்டு, என் படுக்கை அறையில் படுத்திருக்கிறாயே?" என்று அதட்டினார்.

"ஓஹோ... இது அரண்மனையா? காவலர் யாருமே இல்லாததால் இதனை சத்திரம் என்று நினைத்தேன்!" என்றார் பீர்பால் அலட்ச்சிக் கொள்ளாமல்.
தன்னை மன்னர் என்று அறிமுகம் செய்தும் சற்றும் அஞ்சாமல் தன்னுடைய அரண்மனையை தர்ம சத்திரம் என்கிறானே இவன் என கோபமுற்றார் அந்த மன்னர்.

"உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? அரண்மனைக்கும் தர்ம சத்திரத்திற்கும்கூட உனக்கு வித்தியாசம் தெரியவில்லையே!" என்று கடிந்தார் மன்னர்.
"மன்னர் அவர்களே.. இது அரண்மனையாகவே இருந்தாலும் இதனையும் தர்ம சத்திரம் என்று அழைப்பதில் தவறில்லை!" என்றார் பீர்பால்.

"ஓர் அரண்மனை எப்படி சத்திரமாக முடியும்? சத்திரம் என்றால் இன்று ஒருவர் வருவார் நாளை போய்விடுவார்... மறுநாள் வேறொருவர் வருவார்.. பிறகு சென்று விடுவார்.. இங்கேயே தங்க மாட்டார்கள். அரண்மனை அப்படி அல்ல. நான் நிரந்தரமாக தங்கி இருக்கிறேனே!" என்றார் மன்னர்.

"மன்னர் அவர்களே உங்கள் பாட்டனார் எங்கே தங்கி இருந்தார்?"
"இதே அரண்மனையில்தான்!"
"உமது தந்தையார்?"
"இதே அரண்மனையில்தான்!"
"நாளை உங்களுக்குப் பின் யார் தங்குவார்கள்?"
"இதென்ன கேள்வி? எனது மகன் தங்குவான்!"

"ஆக இந்த அரண்மனையில் யாருமே நிரந்தரமாக தங்கி இருக்கவில்லை! தங்கள் முன்னோர் சில காலம் தங்கி இருந்துவிட்டு சென்று விட்டனர். இப்போது நீங்கள். உங்களுக்குப் பின் உங்கள் மகன். எனவே சத்திரத்துக்கும் அரண்மனைக்கும் எந்த வேறுபாடும் இல்லை!" என்றார் பீர்பால்.
பீர்பால் சொல்வதில் உள்ள உண்மை மன்னருக்கு விளங்கியது. வந்திருப்பவர் சாமான்யர் இல்லை என்பது விளங்கியது அவருக்கு!
"தாங்கள் யார்?" என்று மரியாதையுடன் வினவினார் அரசர்.

"என்னைப் பீர்பால் என்று அழைப்பார்கள்!' என்று பதில் சொன்னார் பீர்பால்.
"அந்த மாமேதை நீங்கள்தானா? தங்களின் புகழை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுவரை பார்த்தது இல்லை. நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். வருத்தம் வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள்!" என்றார் அரசர்.

அந்த மன்னனின் அன்புக் கட்டளையை ஏற்று பீர்பால் மேலும் சில நாட்கள் அவரின் விருந்தினராகத் தங்கி இருந்து விட்டு பிறகு தான் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டார்
அக்பருக்கும் பீர்பாலுக்குமமடிக்கடி ஏற்படும் மனவேறு அன்றைக்கும் ஏற்பட்டது. அக்பர் ஏதோ சொல்ல, அதற்கு பதிலாக பீர்பால் எதையோ சொல்ல... பேச்சு வளர்ந்து பெரிய சச்சரவில் கொண்டு போய் விட்டு விட்டது. மன்னர் கோபம் கொண்டார்.

"இனிமேல் என்னுடைய மண்ணில் நீ வாழக்கூடாது. எனது ஆளுகைக்கு உட்பட்ட மண்ணில் நீர் நடமாடுவதை குற்றமாக நான் கருதுகிறேன். அதனால் என் மண்ணணவிட்டு நீ வெளியேறி விடவேண்டும்!" என்று ஆணை பிறப்பித்தார்.

"சரி. உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்ட மண்ணில் நான் வாழமாட்டேன்!" என்று வீராப்பாகச் சொன்ன பீர்பால் அங்கிருந்து வெளியாகி சீன நாட்டுக்கு சென்றார். சில ஆண்டுகள் கழித்து ஏராளமான மூட்டைகளுடன் தில்லி வந்து சேர்ந்தார்!

ப்பீர்பால் ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று சிலகாலம் இருந்து விட்டு இப்போது மீண்டும் தில்லிக்கே வந்துவிட்டதை அக்பர் அறிந்தார். உடனே அவருக்கு சினம் வந்தது. தனது தலைமை அமைச்சரை அனுப்பி பீர்பாலைஉடனே அரசவைக்கு அழைத்து வரச் சொன்னார்.
பீர்பாலின் இல்லம் சென்ற அமைச்சரை அன்போடு வரவேற்று வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார்.

"இது என்ன வீட்டுக்குள்ளும் வெளியிலும் மண்ணைக் கொட்டி வைத்திருக்கிறீர்களே?" என்று கேட்டார் அந்த அமைச்சர்.
"இந்த மண் சீன நாட்டில் இருந்து கொண்டு வந்தேன். ஒரு காரணத்திற்காகத்தான் பரப்பி வைத்திருக்கிறேன்!" என்று கூறினார். பின்னர் அந்த அமைச்சரின் வண்டியைப் பிந்தொடர்ந்து தன் வண்டியிலேயே அரசவை நோக்கி புறப்பட்டார்.

செல்லும் வழியில்... "இதென்ன வண்டிக்குள்ளும் இவ்வளவு மண்??" என்று கேட்டார் அந்த அமைச்சர்.

"எல்லாம் காரணமாகத்தான்!" என்று பதில் அளித்தார் பீர்பால்.
அரண்மனைக்குச் சென்றதும் அரசர் முன் நின்று வணங்கினார் பீர்பால்.
"என் உத்தரவையும் மீறி இன்னும் தில்லி நகரத்தில் உலவுகிறீர்? என்னுடடய உத்தரவை அலட்சியம் செய்கிறீர்! என்னை மதிக்காமல் இந்த மண்ணில் உம்மால் வாழ்ந்து விட முடியுமா?" என்று கோபத்துடன் கேட்டார் அக்பர்.

"மன்னர் பெருமானே! தங்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் தெரியாது. தங்களின் உத்தரவை அப்படியே பின்பற்றி வருகிறேன்!" என்று சொன்னார் பீர்பால் பவ்யமாக.
"எங்கே நிறைவேற்றுகிறீர்? இப்போது தில்லியில் அல்லவா நீர் தங்கி இருக்கிறீர்?" என்றார் அக்பர் சினத்துடன்.

"தில்லியில் நான் தங்கி இருப்பது உண்மைதான். ஆனால் தங்களின் மண்ணில் நான் நடமாடவில்லை. அமைச்சரைக் கேட்டுப் பாருங்கள். அவரே என் வீட்டுக்கு வந்து பார்த்தாரே!" என்றார் பீர்பால்.

அக்பர் அமைச்சரை நோக்கினார்... உடனே அமைச்சர் பதில் அளித்தார்..
"மன்னர் அவர்களே! பீர்பால் தம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் மண்ணைக் கொட்டி பரப்பி இருக்கிறார். பயணம் செய்த வண்டியிலும்கூட மண்ணைக் கொட்டி இருந்தார். எதற்காக இப்படி எல்லாம் செய்திருக்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்டேன்.. காரணமாகத்தான் என்று சொல்கிறார்!"

அப்போது பீர்பால், "மன்னர் பிரான் அவர்களே,"என் வீட்டின் உள்ளும் வெளியிலும் நான் பயணம் செய்யும் வண்டியிலும் நான் உலவும் என் வீட்டுத் தோட்டங்களிலும் நான் கொட்டி பரவி இருப்பது சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண். அது தில்லியின் மண் அல்ல. தங்களுக்கு சொந்தமான மண்ணில் நடமாடக் கூடாது என்றீர்கள். அதனால்தான் சீன மண்ணில் நடமாடிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வாறு தங்கள் உத்தரவை மீறிய செயலாகும்?" என்று அப்பாவி போல் பதில் சொன்னார்.

பீர்பால் விளக்கம் கொடுத்ததும் அக்பர் உட்பட அவையினர் சிரித்தனர். மன்னருக்கு சினம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. வாய்விட்டுச் சிரித்தவாறே, "உம்மை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்றே தெரியவில்லை!" என்று மகிழ்ச்சியுடன் சொல்லி தன் உத்தரவினை வாபஸ் வாங்கிக் கொண்டார் அக்பரஅக்பருக்கும் பீர்பாலுக்குமமடிக்கடி ஏற்படும் மனவேறு அன்றைக்கும் ஏற்பட்டது. அக்பர் ஏதோ சொல்ல, அதற்கு பதிலாக பீர்பால் எதையோ சொல்ல... பேச்சு வளர்ந்து பெரிய சச்சரவில் கொண்டு போய் விட்டு விட்டது. மன்னர் கோபம் கொண்டார்.

"இனிமேல் என்னுடைய மண்ணில் நீ வாழக்கூடாது. எனது ஆளுகைக்கு உட்பட்ட மண்ணில் நீர் நடமாடுவதை குற்றமாக நான் கருதுகிறேன். அதனால் என் மண்ணணவிட்டு நீ வெளியேறி விடவேண்டும்!" என்று ஆணை பிறப்பித்தார்.

"சரி. உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்ட மண்ணில் நான் வாழமாட்டேன்!" என்று வீராப்பாகச் சொன்ன பீர்பால் அங்கிருந்து வெளியாகி சீன நாட்டுக்கு சென்றார். சில ஆண்டுகள் கழித்து ஏராளமான மூட்டைகளுடன் தில்லி வந்து சேர்ந்தார்!

ப்பீர்பால் ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று சிலகாலம் இருந்து விட்டு இப்போது மீண்டும் தில்லிக்கே வந்துவிட்டதை அக்பர் அறிந்தார். உடனே அவருக்கு சினம் வந்தது. தனது தலைமை அமைச்சரை அனுப்பி பீர்பாலைஉடனே அரசவைக்கு அழைத்து வரச் சொன்னார்.
பீர்பாலின் இல்லம் சென்ற அமைச்சரை அன்போடு வரவேற்று வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார்.

"இது என்ன வீட்டுக்குள்ளும் வெளியிலும் மண்ணைக் கொட்டி வைத்திருக்கிறீர்களே?" என்று கேட்டார் அந்த அமைச்சர்.
"இந்த மண் சீன நாட்டில் இருந்து கொண்டு வந்தேன். ஒரு காரணத்திற்காகத்தான் பரப்பி வைத்திருக்கிறேன்!" என்று கூறினார். பின்னர் அந்த அமைச்சரின் வண்டியைப் பிந்தொடர்ந்து தன் வண்டியிலேயே அரசவை நோக்கி புறப்பட்டார்.

செல்லும் வழியில்... "இதென்ன வண்டிக்குள்ளும் இவ்வளவு மண்??" என்று கேட்டார் அந்த அமைச்சர்.
"எல்லாம் காரணமாகத்தான்!" என்று பதில் அளித்தார் பீர்பால்.
அரண்மனைக்குச் சென்றதும் அரசர் முன் நின்று வணங்கினார் பீர்பால்.
"என் உத்தரவையும் மீறி இன்னும் தில்லி நகரத்தில் உலவுகிறீர்? என்னுடடய உத்தரவை அலட்சியம் செய்கிறீர்! என்னை மதிக்காமல் இந்த மண்ணில் உம்மால் வாழ்ந்து விட முடியுமா?" என்று கோபத்துடன் கேட்டார் அக்பர்.

"மன்னர் பெருமானே! தங்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் தெரியாது. தங்களின் உத்தரவை அப்படியே பின்பற்றி வருகிறேன்!" என்று சொன்னார் பீர்பால் பவ்யமாக.
"எங்கே நிறைவேற்றுகிறீர்? இப்போது தில்லியில் அல்லவா நீர் தங்கி இருக்கிறீர்?" என்றார் அக்பர் சினத்துடன்.

"தில்லியில் நான் தங்கி இருப்பது உண்மைதான். ஆனால் தங்களின் மண்ணில் நான் நடமாடவில்லை. அமைச்சரைக் கேட்டுப் பாருங்கள். அவரே என் வீட்டுக்கு வந்து பார்த்தாரே!" என்றார் பீர்பால்.
அக்பர் அமைச்சரை நோக்கினார்... உடனே அமைச்சர் பதில் அளித்தார்..
"மன்னர் அவர்களே! பீர்பால் தம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் மண்ணைக் கொட்டி பரப்பி இருக்கிறார். பயணம் செய்த வண்டியிலும்கூட மண்ணைக் கொட்டி இருந்தார். எதற்காக இப்படி எல்லாம் செய்திருக்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்டேன்.. காரணமாகத்தான் என்று சொல்கிறார்!"

அப்போது பீர்பால், "மன்னர் பிரான் அவர்களே,"என் வீட்டின் உள்ளும் வெளியிலும் நான் பயணம் செய்யும் வண்டியிலும் நான் உலவும் என் வீட்டுத் தோட்டங்களிலும் நான் கொட்டி பரவி இருப்பது சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண். அது தில்லியின் மண் அல்ல. தங்களுக்கு சொந்தமான மண்ணில் நடமாடக் கூடாது என்றீர்கள். அதனால்தான் சீன மண்ணில் நடமாடிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வாறு தங்கள் உத்தரவை மீறிய செயலாகும்?" என்று அப்பாவி போல் பதில் சொன்னார்.

பீர்பால் விளக்கம் கொடுத்ததும் அக்பர் உட்பட அவையினர் சிரித்தனர். மன்னருக்கு சினம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. வாய்விட்டுச் சிரித்தவாறே, "உம்மை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்றே தெரியவில்லை!" என்று மகிழ்ச்சியுடன் சொல்லி தன் உத்தரவினை வாபஸ் வாங்கிக் கொண்டார் அக்பர

 பீர்பால் அடிக்கடி புகையிலை உபயோகிப்பார். மன்னர் பலமுறை சொல்லியும்
அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள அவரால் முடியவில்லை. அக்பரின் மூத்த அமைச்சர்
ஒருவருக்கு பீர்பால் புகையிலை உபயோகிப்பது மிகவும் அருவறுப்பாக இருந்தது. நல்ல
சந்தர்ப்பம் பார்த்து புகையிலைப் பழக்கத்துக்காகப் பீர்பாலை அவமானப் படுத்த
வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.

ஒருமுறை மன்னர் காற்றோட்டமாக அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார்.
அவருடன் மூத்த அமைச்சரும் பீர்பாலும் சேர்ந்து உலவியவாறு உரையாடிக்
கொண்டிருந்தனர்.

அரண்மனைத் தோட்டத்தின் வேலியோரத்தில் புகையிலைச் செடி ஒன்று தானாக முளைத்து
வளர்ந்து இருந்தது. தெருவிலே சென்று கொண்டிருந்த கழுதை ஒன்று வேலியின் இடுக்கு
வழியாக முகத்தினை நுழைத்து அந்த புகையிலைச் செடியைத் திண்ணப் பார்த்தது.
இலையில் வாயை வைத்தவுடன் அதன் காரமும் நாற்றமும் பிடிக்காமல் செடியை
விட்டுவிட்டு திங்காமல் வெறுப்போடு போய்விட்டது.

அதனைச் சுட்டிக் காட்டிய மூத்த அமைச்சர், "மன்னர் அவர்களே, பார்த்தீர்களா?
நம் பீர்பாலுக்கு மிகவும் பிடித்தமான புகையிலை கேவலம் அந்த கழுதைக்குக்கூடப்
பிடிக்கவில்லை!" என்றார் சிரிப்புடன். அவர் முகத்தில் இப்போது நிம்மதி.

உடனே பீர்பால் சிரித்துக் கொண்டே, "அமைச்சர் அவர்களே, உண்மையைத்தான்
சொன்னீர்கள். புகையிலை எனக்கு மிகவும் பிடித்த பொருள்தான். ஆனால்
கழுதைகளுக்குத்தான் புகையிலையைப் பிடிப்பதில்லை!" என்றார் ஒரே போடாக!

தனது வாக்கு வன்மையால் மூக்குடைத்தார் மூத்த அமைச்சரை பீர்பால்.

 பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு, பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது.

அதனால ஒரு கடிதத்துல, மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன் தங்களுக்கு நலன்கள் பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக. தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்னு எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன் மூலமா அக்பருக்கு அனுப்பினாரு காபூல் அரசர்.

கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சு, ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே புரியவில்லையேன்னு குழம்பி, பீர்பால்கிட்ட கடிதத்தை காட்டினாரு.

பீர்பால் சிறிது நேரம் யோசிச்சாரு. அப்புறம், அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதுமாறு சொன்னார். அக்பரும் அதேபோல் தபால் எழுதி அனுப்பினாரு.

அப்புறம் அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம் அதிசயம் எப்படி அனுப்புவீர்?னு விசாரிச்சாரு.

அதுக்கு பீர்பால், மூன்று மாதம் கழித்து அந்த அதிசயத்தைப் பாருங்களேன்னாரு.

பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்த பூசணிப்பிஞ்சு ஒண்ணை கொடியோட மண் குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்ததை மூடினாரு.

நாளாக நாளாக பூசணிப் பிஞ்சு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி, காயின் காம்பு எல்லாவற்றையும் கத்தரித்து விட்டார் பீர்பால்.

இப்போ அந்தக் குடத்தை அக்பரிடம் காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோ உள்ளே இருக்கும் பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய பூசணிக்காயை எப்படி நுழைத்தார்னு. பீர்பால் அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசனுக்கு, அதிசயம்னு அனுப்பினாரு.

அதைப் பார்த்த காபூல் அரசன் பீர்பாலோட புத்திக் கூர்மையை எண்ணி வியந்தாராம்.
ஒரு நாள் இரவு நேரத்தில் அக்பரும், பீர்பாலும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் சால்வையை இருக்கமாக இருவரும் போர்த்திக்கொண்டிருந்தனர். அப்படியும் குளிர் அக்பரை மிகவும் வாட்டியெடுத்தது.

அக்பர் பீர்பாலை பார்த்து " பீர்பால் இந்த குளிரின் கொடுமையை பார்த்தீரா... எதிரிகளுக்கு அஞ்சாத நெஞ்சம் இருந்தும் இந்த குளிருக்கு அஞ்சாமல் இருக்க முடியவில்லையே! இந்த குளிரை பொருட்படுத்தாமல், யமுனை ஆற்றில் ஒரு இரவு முழுக்க, கழுத்தளவு நீரில் யாராலும் நிற்க இயலுமோ! அவ்வாறு நின்றால், அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கலாம்" என்றார்.

"அரசே, சிங்கத்தின் முடியை கூட கொண்டு வந்துவிடலாம். ஆனால் நடுங்கும் குளிரில் இரவு முழுவது ஆற்றில் நிற்பது என்பது சதாரண காரியமா?" என்றார் பீர்பால்.

"யமுனை ஆற்றில் குளிரில் நிற்பதற்கு எந்தவித திறமையும் தேவையில்லை, மன உறுதி இருந்தாலே போதும்! நாடு முழுவதும் இந்த செய்தியை அறிவிக்க சொல்லுங்கள்! பணத்தின் மீது ஆசைப்பட்டு நிறைய பேர் பங்கு பெற வருவார்கள். அதில் யார் வெற்றி பெறுவார்கள் எனப்பார்ப்போம்" என்றார் அக்பர்.

அரசரின் ஆணை நாடெங்கும் அறிவிக்கப்பட்டது. அடுத்த நாளே, ஒரு இளைஞன் அரசரிடம் வந்து " அரசே, யமுனை நதியில் கழுத்தளவு நீரில் இரவு முழுவதும் நிற்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்" என்றான்.

அக்பர் அந்த இளைஞனை வியப்பாக பார்த்து "இன்று இரவு போட்டிக்கு தயாராகு" என்றார். இளைஞனும் தயாரானான். நடுங்கும் குளிரில் நிற்பது சதாரண விசயமில்லையே என நினைத்த அக்பர், அந்த இளைஞனை கண்காணிப்பதற்கு இரண்டு காவலாளிகளை நியமித்தார்.

யமுனை ஆற்றில் வெற்று உடம்புடன் இறங்கினான் இளைஞன். கழுத்தளவு வரை நீர் உள்ள இடத்தில் நின்று கொண்டான். உடல் மிகவும் நடுங்கியது, குளிர் வாட்டியது, அவனால் தாக்குபிடிக்கமுடியவில்லை. ஆனாலும் பரிசாக கிடைக்கப்போகும் ஆயிரம் பொற்காசுகளை எண்ணி பார்த்தான். புது தெம்பு வரவே, இரவு முழுவதும் கண் விழித்து நின்று கொண்டிருந்தான்.

பொழுது விடிந்தது. வெயில் மேனியில் பட உடல் சீரான நிலைக்கு வந்தது. ஆயிரம் பொற்காசுகளை பெறப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ஆற்றை விட்டு மேலே வந்தான். அவனை காவலாளிகள் மன்னரிடம் அழைத்து சென்று இரவு முழுவது இளைஞன் கழுத்தளவு நீருக்குள் நின்றதை கூறினார்கள்.

அக்பருக்கோ மிகவும் வியப்பாக இருந்தது. "இளைஞனே உன் மன உறுதியை பாராட்டுகிறேன்! அந்த இரவில், கடும்குளிரில் நீருக்குள் எப்படி இருந்தாய்? அப்படி நிற்கும்போது உனக்கு எந்த வகையிலும், ஏதாவது துணையாக இருந்ததா? என்றார் அக்பர். அந்த இளைஞனும் அப்பாவியாய் "அரசே அரண்மனையின் மேல் மாடத்தில் எரிந்து கொண்டிருந்த சிறிய விளக்கின் ஒளியை பார்த்துக்கொண்டே இரவுப்பொழுதை கழித்தேன்" என்றான்.

"இளைஞனே அதானே பார்த்தேன். நடுங்கும் குளிரில் தண்ணீருக்குள் எப்படி உன்னால் இருக்க முடிந்தது என்று இப்பொழுது புரிகிறது! உன் குளிரை போக்க அரண்மனையிலிருந்து வீசிய விளக்கின் ஒளி உனக்கு உதவி செய்திருக்கிறது. அந்த சூட்டில் தான் இரவு முழுவது நின்றிருக்கிறாய். எனவே உனக்கு ஆயிரம் பொற்காசுகள் கிடையாது" என்றார்.

பரிசுத்தொகை கிடைக்கவில்லை என்றதும் அந்த இளைஞன் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றான். பீர்பால் அவனை கண்டு என்னவென்று விசாரிக்க. இளைஞனும் பீர்பாலிடம் எல்லாவற்றையும் சொன்னான். பீர்பால் அவனுக்கு ஆறுதல் கூறி பரிசு தொகையை கிடைக்க உதவி செய்வதாக உறுதியளித்தார்.

சில நாட்களுக்கு பிறகு, அக்பர் வேட்டையாட புறப்பட்டுக்கொண்டிருந்தார். பீர்பாலை தம்முடன் அழைத்து செல்ல எண்ணிய அக்பர் காவலாளியை கூப்பிட்டு பீர்பால் வீட்டுக்கு சென்று அழைத்து வரச்சொன்னார்.

பீர்பால் தன்னை தேடி வந்த காவலாளியிடம் தான் சமையல் சென்று கொண்டிருப்பதையும், சாப்பிட்டு விட்டு வருவதாகவும் கூறினார். நீண்ட நேரம் பீர்பாலுக்காக அக்பர் காத்திருந்தார். பீர்பால் வரவில்லை. மிகவும் கோபமடைந்த அரசர் பீர்பாலின் வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டு வரலாம் எனப்புறப்பட்டார். பீர்பால் வீட்டில் ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார். பாத்திரத்திலிருந்து பத்தடி தூரம் தள்ளி அடுப்பை வைத்திருந்தார். அடுப்பில் விறகுகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதை கண்ட அக்பருக்கு ஒன்றும் புரியவில்லை. பீர்பாலிடமே கேட்டார்.

"பீர்பால் தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" அக்பர்.

"அரசே சமையல் செய்து கொண்டிருக்கிறேன்" பீர்பால்.

"உமக்கு என்ன மூளை குழம்பி விட்டதா? பாத்திரம் ஒரு பக்கம் இருக்கிறது. அடுப்பு ஒரு பக்கம் இருக்கிறது. அதில் எப்படி சோறு வேகும்?" என்றார் அக்பர் கோபத்துடன்.

"அரசே நிச்சயம் சோறு வேகும். யமுனை ஆற்றில் தண்ணீரில் இருந்தவனுக்கு அரண்மனையில் இருந்த விளக்கின் வெளிச்சம் சூட்டை தந்திருக்கும்போது மிகவும் பக்கத்தில் இருக்கிற அடுப்பில் ஏற்படும் சூடு அரிசி பாத்திரத்தில் பட்டும் சோறு வெந்து விடாமல் போகுமா?' என்றார் பீர்பால்.

மிகவும் நாசூக்காக தமக்கு புரிய வைத்த பீர்பாலை பாராட்டி அந்த இளைஞனை வரவழைத்து... முன்பு கூறிய படியே ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தார்.
 

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts