மாணிக்கவாசகரைப் போற்றும் ஆவுடையார் கோவில் 
 கொடிமரம், பலிபீடம், நந்தி, தட்சிணாமூர்த்தி, சண்டேஸ்வரர் இல்லாத ஆலயம், 
பிரதோஷம், தெப்போற்சவம் நடைபெறாதக் கோவில், திருவாசகம் தோன்றிய தலம், 
மாணிக்கவாசகர் எழுப்பிய ஆலயம், தேவார வைப்புத் தலம், திருப்புகழ் பெற்ற 
ஆலயம் என ஈடு இணையில்லாப் பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, புதுக்கோட்டை 
மாவட்டம் ஆவுடையார் கோவில் என்னும் திருப்பெருந்துறை  திருக்கோவில்.
            

 
11 மந்திரங்கள், 81 பதங்கள், 51 அட்சரங்கள், 224 புவனங்கள், 36 
தத்துவங்கள், 5 கலைகள், 6 வாசல்கள், ஆறு சபைகள், நவத் துவாரங்களு டன் ஆலயம்
 விளங்குகின்றது. கருவறையில் ஆவுடையார் எனும் பீடம் மட்டுமே அமைந்துள்ளது. 
அதன் மேலே குவளை சாத்தி அலங்காரம் செய்யப்    படுகிறது. ஆவுடையாரின் 
பின்புறத்தில் 27 நட்சத்திர பீடங்கள், அதற்குமேல் சூரியன், சந்திரன், அக்னி
 தீபங்கள்  மூன்றும் ஒளி வீசுகின்றன.
சுவாமி முன்புறம் உள்ள அமுத மண்டபத்தில் படைக்கல் அமைந்துள்ளது. புழுங்கல் 
அரிசி அன்னம் ஆவி பரப்பி இறைவனை ஆராதிக்கிறது. முளைக்கீரை, பாகற்காயும் 
அதைச்சுற்றி தேன்குழல், அதிரசம், அப்பம், வடை முதலானவை வைத்து நைவேத்தியம் 
செய்யப்படுகிறது. ஆறுகால பூஜை நேர்த்தியாக நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் 
அமுத படைக்கல்லில் புழுங்கல் சாதம் படைக்கப்படுகிறது.
ஆவுடையார் கருவறையின் வடக்கே யோகாம்பிகை சன்னிதி அமைந்துள்ளது. அன்னை 
அரூபமாக உள்ளதால் யோக பீடமும், அன்னையின் பாதக் கமலங்களும் மட்டுமே இங்கு 
உள்ளன. அம்பிகையின் அபிஷேக நீர், தொட்டித் தீர்த்தத்தில் விழுகிறது. இந்த 
புனித நீர்  மனக்கவலை மற்றும் தீய சக்திகளை நீக்கும் சக்தி கொண்டது. 
அன்னையை அவளின் முன்புறம் அமைந்துள்ள கல் ஜன்னல் வழியே  மட்டுமே தரிசிக்க 
வேண்டும். 
மாணிக்கவாசகர் வரலாறு
பாண்டிய நாட்டில் மதுரைக்கு அருகே அமைந்துள்ள திருவாதவூரில், பிறந்தவர் 
வாதவூரர். பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராகப் 
பணியாற்றி ‘பிரமராயன்’ பட்டம் பெற்றவர். மன்னனின் ஆணைக்கிணங்க 
குதிரைப்படைக்கு குதிரைகள் வாங்கச் செல்லும் வழியில், திருப்பெருந்துறையான 
ஆவுடையார் கோவிலில் குருந்த மரத்தடியில் அமர்ந்த இறைவனால் 
ஆட்கொள்ளப்பட்டார். குரு உபதேசமும் பெற்றார். 
இதையடுத்து குதிரை வாங்க வைத்திருந்த பணத்தைக் கொண்டு ஆலயத் திருப்பணியை 
செய்து முடித்தார். அதற்காக மன்னன் அவரை சிறையில் அடைத்தான். சுடு  மணலில் 
நிற்க வைத்து வதைத்தான். மாணிக்கவாசகர் அனுபவிக்கும் துன்பத்தை பொறுக்க 
முடியாத இறைவன்,  மாணிக்கவாசகரின் பெருமையை உலகிற்கு அறியச் செய்வதற்காக, 
வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தார். வெள்ளம் ஊருக்குள் வராமல் 
தடுக்க, ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி நடந்தபோது, இறைவன் பணியாள் 
வேடத்தில் வந்து பிட்டுக்காக மண் சுமந்து பிரம்படிபட்டார். அந்த அடி உலக 
உயிர்கள் அனைத்தின் மீதும் பட்டது. 
இறைவன், மாணிக்கவாசகரின் பெருமையை உலகிற்கு உணர்த்தினார். பாண்டிய மன்னன், 
மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு வேண்டினான். மன்னரைத் தேற்றிய வாதவூரர், தன் 
முதலமைச்சர்  பதவியைத் துறந்து, ஆன்மிகப் பாதையைத் தேடினார். 
உத்திரகோசமங்கை, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு 
தலங்களை தரிசித்து, சிதம்பரம் வந்து சேர்ந்தார். 
தில்லை அம்பலவாணன், அந்தணர் வடிவில்  வந்து, மாணிக்கவாசகரின் பாடல்கள் 
அனைத்தையும் கேட்டு, தன் ஓலையில் எழுதினார். பாடலின் இறுதியில் ‘மாணிக்க  
வாசகர் சொற்படி, அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது’ எனக்  கையொப்பம் இட்டு,
 பொற்சபையின்  பஞ்சாக்கர படியில் வைத்து மறைந்தருளினார். 
தில்லை வாழ் அந்தணர்கள், இந்த ஏடுகளைக் கண்டு வியந்து, இதன் பொருள் 
கூறுமாறு மாணிக்கவாசகரை வேண்டி நின்றனர். ‘இதன்பொருள் இவ்வானந்த 
கூத்தனேயாவன்’ எனக்கூறி, அனைவரும் காணும் விதமாக ஜோதியுள் இரண்டறக் 
கலந்தார்.
மாணிக்கவாசகர்
ஆவுடையார் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கு முகமாய் மூலவராகவும், 
முதல் பிரகாரம் மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் வடக்கு   முகமாய் 
உற்சவராகவும் மாணிக்கவாசகர் காட்சி தருகிறார். நந்தி மற்றும் சண்டேசுவரராக 
இவரே ஆட்சி செய்வதால், அவர்களுக்கு ஆலயத்தில் இடம் தரப்படவில்லை. சுவாமி, 
அம்பாளுக்கு இணையாகப் பெருமை பெற்றவராக விளங்குவதால், அனைத்து ஆலய 
விழாக்களிலும் மாணிக்கவாசகப் பெருமானே முன்னிறுத்தப்படுகிறார்.
இத்தலத்தில் திருமால், பிரம்மா, இந்திரன் என எண்ணற்றோர் தீர்த்தம் 
உண்டாக்கி வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். அவை இன்று கிணறுகளாகவும், 
குளங்களாகவும் ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ளன. இருந்தாலும், ஆலயத்திற்கு 
தென்மேற்கில் அமைந்துள்ள அக்னி தீர்த்தம் போற்றி பாதுகாக்கப்பட்டு 
வருகிறது. இது தவிர, சுவாமிக்கு அபிஷேக நீர் எடுக்கப் பயன்படும், கிணறு 
தீர்த்தம் ஆலயத்திற்குள் இருக்கிறது.
அபூர்வ சிற்பங்கள்
ஏழுநிலை ராஜகோபுரத்தின் எதிரே அமைந்துள்ளது, ஆயிரம்கால் மண்டபம். இதில் 
நரசிம்மர், காளி, ஊர்த்துவத்தாண்டவர், பிட்சாடனர், வில்லேந்திய முருகன், 
ரிஷபாந்தகர்,   சங்கரநாராயணன், அகோர வீரத்திரர், அக்னி வீரபத்திரர்   
முதலிய சிற்பங்களும், வெவ்வேறு தேசத்து குதிரைகளும், அதன் மீதான விதவிதமான 
அணிகலன்களும், இசைத்தூண்களும் கலைநயத்தை வடித்தெடுத்துள்ளன. 
கால் விரல்களின் நகங்கள், கால் தசைகள், கால் எலும்புகள் தெரியும் விதமான 
சிற்பங்கள் நம்மை வியப்பூட்டுகின்றன. எழில்மிக்க ஏழுநிலை ராஜகோபுரம் விண்ணை
 முட்டி நிற்க, கோபுரத்தின் இடையில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். 
மூன்றாம் பிரகாரத்தில், வெயிலுவந்த விநாயகர், அக்னி தீர்த்தம், தியாகராஜர் 
மண்டபம், குருந்த மரம் அமைந்துள்ளன. இதில்  வேலைப்பாடுடன் கூடிய 
கொடுங்கைகள் மரவேலைப்பாட்டின் கலையில், கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. 
தொங்கும் கல்லிலான சங்கிலித் தொடர்கள், ஊஞ்சல் மண்டபம் போன்றவை கண்ணுக்கு 
விருந்தாகின்றன.
இரண்டாம் பிரகாரத்தில் தில்லை மண்டபம் உள்ளது. இது நடனசபை என 
அழைக்கப்படுகிறது. இம்மண்டபத் தூண்களில், பதஞ்சலி, வியாக்ரபாதர் புடைப்புச்
 சிற்பங்கள் உள்ளன. குறவன், குறத்தி சிற்பங்களின் ஆடை அணிகலன்கள் நமக்கு 
வியப்பூட்டுகின்றன.
முதல் பிரகாரத்தில் ஆத்மநாதர், யோகாம்பிகை, குருந்தமூல மண்டபம், 
மாணிக்கவாசகர் உற்சவர் சன்னிதி அமைந்துள்ளன. தூண்கள் முழுவதும் இறை 
வடிவங்கள், ஆதீனப் பெருமக்களின் சிலா வடிவங்கள், அழகுற அமைக்கப்பட்டுள்ளன. 
நரிகளைப் பரிகளாக்கி, குதிரை ஓட்டியாக வரும் சிவபெருமானின் சிலை, வெகு 
அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. எதிரே அமைச்  சராக, அடியாராகக் காட்சி 
தரும் மாணிக்கவாசகர்    வடிவம், மன்னன்    வரகுண பாண்டியன்  உருவம் போன்றவை
 கலைநயத்தைக்     காட்டுகின்றது.
27 நட்சத்திரங்களின் வடிவம் புடைப்புச் சிற்பமாக, சிவானந்த மாணிக்கவாசகர் சன்னிதி வாசலின் மேல்புறத்தில் அமைந்துள்ளது. 
இந்த ஆலயம்   தினமும் காலை 6.30  மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை
 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும்  திறந்திருக்கும். 
இவ்வாலயத்தில் ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப்     படுகின்றன. ஆனித் 
திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை என இரண்டு பெருவிழாக்கள், தலா பத்து 
நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மாணிக்கவாசகரையே சிவபெரு மானாகப்
 போற்றி, சிவபெருமானுக்குரிய ஆடை அலங்காரங்களைச் செய்து வீதியுலா 
நடத்துகின்றனர். 
தேர்த்திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்குமான வழிபாட்டு உரிமையை 
மாணிக்கவாசகரே பெறுவது, இவ்வாலயத்தின் தனிச் சிறப்பாகும். இதுதவிர, 12 
மாதங்களிலும் 12 விதமான அபிஷேகங்கள் இந்த ஆலயத்தில் நடைபெறும். 
அமைவிடம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் வட்டத்தில், வெள்ளாற்றங்கரையில் 
அமைந்திருக்கிறது, ஆவுடையார் கோவில் எனும்  திருப்பெருந்துறை திருத்தலம். 
திருச்சியில் இருந்து 102 கி.மீ., அறந்தாங்கியில் இருந்து 17 கி.மீ. 
தொலைவில் இத்தலம் இருக்கிறது.
–பனையபுரம் அதியமான்.
ஆலயத்தின் தல மரம் குருந்த மரமாகும். இது மூன்றாம் பிரகாரத்தில் வடமேற்கு 
மூலையில் பசுமையாக காட்சி தருகிறது. இந்த மரத்தின் அடியில், இறைவன் குருவாக
 அமர்ந்து மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்ததாக வரலாறு. குரு அமர்ந்த மரம், 
குருந்த மரமாக வழங்கப் படுகிறது.
முதல் பிரகாரத்தில் சுவாமி கருவறையின் பின்புறம், குருந்தமூலம் நான்கு தூண்
 மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. குருந்தமூல சுவாமியிடம் மாணிக்கவாசகர் 
உபதேசம் பெறும் கோலம் இங்கு கற்சிற்பமாக காட்சி தருகிறது. விழாக்காலத்தில் 
உபதேசக் காட்சியருளல் இங்கு நடைபெறுவது வழக்கம்.